யானைகளை தடுக்கும் கழற்சிக்காய் செடி: வனத்துறை ஆய்வில் தகவல்

கோவை: யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்கள், குடியிருப்புகளில் புகுவதைத் தடுப்பதில், கழற்சிக்காய் செடி நல்ல பலனை தருவதாக, வனத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் வனப்பகுதியை ஒட்டிய நிலப்பகுதிகள் விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

வனப்பகுதியில் போதிய அளவு உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு, விளை நிலங்களில் புகுந்து வருகின்றன. இதனால் மனித-விலங்கு மோதல் அதிகரித்து வருவதுடன், யானை தாக்கி பொது மக்கள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2011-2022 வரை மட்டும் யானை தாக்கி சுமார் 147 பேர் இறந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. யானை உள்ளிட்ட வன விலங்குகள் மனித வசிப்பிடங்களுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் இரும்பு கம்பிவட வேலிகள், கற்சுவர் வேலிகள், சூரிய மின்வேலிகள், அகழிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக வனத்துறையில் வன ஆராய்ச்சி பிரிவின் கீழ் இயங்கும் வன மரபியல் கோட்டத்தில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க சிறுமுகை வனச்சரகத்தில் ரயில் கள்ளி, சுரை முள் ஆகிய உயிர் வேலி தடுப்பு அமைப்புகள் பரீட்சார்த்த முறையில் அமைக்கப்பட்டன. இந்த உயிர் வேலி தடுப்பு முறை யானைகள் வெளி வராமல் தடுப்பதில் நல்ல பலனை தந்து வருகிறது.

ரயில் கள்ளி, சுரை முள் ஆகியவை அந்நிய களைச் செடி என்பதால், வனப்பகுதியை ஆக்கிரமித்து எதிர்காலத்தில் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதில் வனத்துறை கவனமாக உள்ளது. கோவையை அடுத்த அத்திக்கடவு, முள்ளி ஆகிய வனப்பகுதியில் அடர்ந்து கிடக்கும் கழற்சிக்காய் (முட்புதர்) செடி யானை வெளியேறுவதை தடுப்பதில் நல்ல பலனை தருவதாக வனத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து,வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதியில் இருந்து யானை வெளியேறுவதைத் தடுக்க பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கழற்சிக்காய் செடிகள் நல்ல பலனை தருகின்றன. மத்திய அரசின் வன மரபியல் மற்றும் வனப் பெருக்கு நிறுவனத்தில் இருந்து விதை பெறப்பட்டது.

அந்த விதை மூலம் சிறுமுகை வனச்சரகத்தில் வனத்தையொட்டிய பகுதியில் கழற்சிக்காய் செடி நடவு செய்யப்பட்டது. தற்போது நன்கு புதர் போன்று வளர்ந்துள்ளது. கழற்சிக்காய் செடியில் தண்டு பகுதி முழுவதும் முட்கள் இருப்பதால், யானைகள் அந்த புதரை தாண்டி செல்லவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக கழற்சிக்காய், ‘யானை விரட்டி’ என பழங்குடி மக்களால் அழைக்கப்படுகிறது. கோவை வனக்கோட்டம் அத்திக்கடவு, முள்ளி பகுதிகளில் அடர்ந்து காணப்படுகிறது. கழற்சிக்காய் விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கழற்சிக்காய் மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். யானை வெளியேறும் பாதையில் கழற்சிக்காய் செடியை நட்டு வைப்பதன் மூலம் வனத்தை தாண்டிச் செல்லாமல் தடுக்க முடியும்.

கோவை வனக்கோட்டத்தில் அடிக்கடி யானை வெளியேறும் இடங்களை கண்டறிந்து, அங்கு சோதனை முயற்சியாக கழற்சிக்காய் செடியை நட்டு வைக்கலாம். இதன் மூலம் யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதும், மனித-விலங்கு மோதலும் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.யானைகள் வனத்தை விட்டு விளைநிலங்கள், குடியிருப்புகளில் புகுவதைத் தடுக்கும் கழற்சிக்காய் செடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

37 mins ago

தமிழகம்

2 hours ago

சினிமா

24 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஸ்பெஷல்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஸ்பெஷல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்