`பத்தவச்சுட்டாங்க’ ஆண்டவரே... நெட்டிசன்கள் கிண்டல்

By கி.பார்த்திபன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி கமல் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. இந்தப் பாட்டு கமல் ரசிகர்களை மட்டுமல்ல மத்திய பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைப்போரையும் குஷிப்படுத்தியுள்ளது.

நடிப்பு, நடனம், இயக்கம் என அனைத்திலும் தனி முத்திரைப் பதிப்பவர் நடிகர் கமலஹாசன். ஆகையால் இந்திய சினிமாவின் முகம் என திரையுலகை சார்ந்தோரால் வர்ணிக்கப்படுவர். 80 காலகட்டத்தில் வெளியான நாயகன், விக்ரம் தொடங்கி ஹேராம், விஸ்வரூபம் என கமலஹாசன் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டவை.

திரைத்துறையின் அத்தனை நுணுங்கங்களையும் அறிந்த கமலஹாசன் தனது பேட்டி ஒன்றில் அரசியல் எனக்கு தெரியாது. நான் அறிந்தது திரைத்துறை மட்டுமே என கூறியிருந்தார். ஆனால், பின்னாளில் மக்கள் நீதி மய்யம் என அரசியல் கட்சி தொடங்கி நடத்தியும் வருகிறார். இது ஒருபுறம் இருந்தாலும் கமலஹாசன் திரைப்படத்தில் நேரடியாகே அரசியல் வாசம் எதுவும் வீசாது. பணம் கொடுத்து அவரது திரைப்படத்தை பார்ப்போருக்கு சிறந்த பொழுதுபோக்கு என்ற ரீதியிலேயே இதுநாள் வரை அவரது திரைப்படம் இருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் பாடலில் அரசியல் வாசனை ‘கமகமவென’ வீசுகிறது. அந்தப் பாடல் வரிகள் கமலஹாசன் எழுதி பாடியது.

அந்தப் பாடல்கள் வரிகளில் ஒன்றிய அரசின் (மத்திய பாஜக) மீது சில விமர்சனைங்களை வைத்த வரிகள் இடம் பெற்றுள்ளது. ‘கஜனாவில் காசில்லே... கல்லாலயும் காசில்லே... காய்ச்சல் ஜூரம் நிறைய வருது தில்லாங்கடி தில்லாலே... ‘ஒன்றியத்தின்’ தப்பாலே... ஒன்னியும் இல்ல இப்பாலே... சாவி இப்ப திருடன் கையில இப்பாலே... என சென்னை

பாஷையில் பாடல் வரிகள் வருகின்றன. இந்தப் பாடலின் அடுத்தடுத்த வரிகளில் ஏரி குளம் நதியக் கூட பிளாட் போட்டு வித்தாக்க... சின்ன மழ வந்தாக் கூடா நாறிப் போகும் ஊரு... என தமிழகத்தை ஆண்ட, ஆளும் அரசுகளையும் விமர்சித்துள்ளார்.

இதை தமிழக முன்னாள், இன்னாள் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. அதேவேளையில் பாடல் வரிகளில் ஒன்றியம் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பது மத்திய பாஜக அரசு மீது விமர்சனங்களை முன் வைப்போரை குஷிப்படுத்தியுள்ளது. அதுபோல் கமலஹாசனின் பாடலுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும் ‘பத்தல பத்தல’ பாடல் மத்திய அரசை விமர்சிப்பது போல் இருப்பதால் அந்தப் பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரகத்தில் சமூகநல ஆர்வலர் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க.. ஆண்டவரே ‘பத்தல பத்தல’ன்னு பாடினீங்க... ஆனா இப்ப ‘பத்தவச்சுட்டாங்க’ ஆண்டவரே என காவல் ஆணையரிடம் அளித்த புகாரை ‘மய்யப்படுத்தி’ இணையத்தில் ‘கிண்டலடிக்க’ தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE