ஓசூரில் விமான நிலையம்: முதல்வர் அறிவிப்பால் தொழில்முனைவோர், பொதுமக்கள் மகிழ்ச்சி

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பால், தொழில்முனைவோர் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொழில் நகரான ஓசூரில் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என 3,500 தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் வாகன உதிரிப்பாகங்கள் கனரக வாகனங்கள் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம், விசாகப்பட்டினத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

தொடர் கோரிக்கை: அதேபோல, ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் மலர்கள் மற்றும் காய்கறிகளும் விமானம் மூலம் வெளிநாடுகளுக்குத் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஓசூர் பகுதி தொழில்முனைவோர் விமான போக்குவரத்துக்கு பெங்களூருவை நம்பியுள்ள நிலையில், ஓசூரில் விமானம் நிலையம் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓசூரில் விமானம் நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி, பின்னர் ரத்தானது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின்கீழ், “ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்” என அறிவித்தார். இதனால் ஓசூர் பகுதி பொதுமக்களும், தொழில்முனைவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், மாநகராட்சி மேயர் சத்யா தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மகிழ்ந்தனர்.

வேலைவாய்ப்பு பெருகும்: இதுதொடர்பாக ஹோஸ்டியா தலைவர் மூர்த்தி கூறியதாவது: ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளில் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழில், வர்த்தகம் மற்றும் பொதுமக்கள் சேவைக்காக ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது.

தற்போது முதல்வரின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதனால், ஓசூரில் தொழில் வளர்ச்சியடையும், வேலைவாய்ப்பும் பெருகும்.

அதேபோல, ஓசூரில் மாஸ்டர் பிளான் திட்டமும் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் சிலர் கூறும்போது, “ஓசூர் பன்னாட்டு விமான நிலையம் சூளகிரி பகுதியில் அமைய வாய்ப்புள்ளது. இங்கு அமைந்தால், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல வசதியாக இருக்கும். மேலும், உத்தனப்பள்ளியில் ஆப்பிள் செல்போன் நிறுவனம் அமையவுள்ளது. டாடா, டெல்டா போன்ற பெரிய நிறுவனங்களும் அருகில் உள்ளன” என்றனர்.

மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்குமா? - சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம் மத்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 2033-ம் ஆண்டுக்கு முன்னர் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிமீ தொலைவுக்குள் புதிதாக அல்லது ஏற்கெனவே உள்ள விமான நிலையத்தை (ஹாசன் மற்றும் மைசூரு விமான நிலையங்களைத் தவிர) மேம்படுத்தவோ, விரிவாக்கம் செய்யவோ கூடாது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓசூர் 74 கிமீ தொலைவில் உள்ளது. இதனால், முதல்வரின் தற்போதைய அறிவிப்புக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE