கோவை: குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள விண்வெளி பூங்கா, செயற்கைகோள் உதிரிபாகங்கள் தயாரிக்க தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் துணைத்தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு அருகே அமைக்கப்பட உள்ள விண்வெளி பூங்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் மற்றும் செயற்கைகோள்கள் கூட உற்பத்தி செய்யக்கூடிய அமைப்பு(எக்கோ சிஸ்டம்) உருவாகிறது.
இதனால் சிக்கனமாகவும், விரைவாகவும் பணிகளை மேற்கொள்ள முடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளம் மட்டும் தான் உள்ளது. தமிழகத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது கூடுதல் சிறப்பு கொண்டது.
தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வாய்ப்பை சரியான முறையில் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள பள்ளிப் பருவம் முதலே அவர்களை தயார்படுத்த வேண்டும். குறிப்பாக அறிவியல் மற்றும் விண்வெளித்துறை சார்ந்த கல்வியால் தமிழகத்திலேயே கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் மாணவர்களே ராக்கெட் செலுத்த தேவையான அமைப்பு உருவாக்கித் தரப்பட்டது. அதேபோல் எதிர்வரும் நாட்களில் மேலும் பல வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும். செஸ் விளையாட்டில் இந்திய மாணவ, மாணவிகள் சாதனை படைக்க தொடங்கியுள்ளனர். அதே போல் அறிவியல் துறையிலும் எதிர்வரும் காலங்களில் சாதிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
புதிதாக அமைய உள்ள விண்வெளி பூங்கா, வேலைவாய்ப்பு பெற உதவுவது மட்டுமின்றி செயற்கைகோள்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்க தொழில்முனைவோரை ஊக்குவிக்கும். ஸ்ரீஹரிகோட்டாவுடன் ஒப்பிடுகையில் குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ஏவுதளத்தில் ஆண்டு முழுவதும் தடையின்றி ராக்கெட் ஏவும் பணிகளை தொடரலாம். ஹரிகோட்டாவில் சில மாதங்கள் அப்பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
அதேபோல் ஒவ்வொரு முறையும் ராக்கெட் இலங்கையை சுற்றிச் செல்வது தவிர்க்கப்பட்டு நேரடியாக தெற்கு பகுதியை நோக்கி செலுத்த முடியும். பெரிய ராக்கெட் அனுப்பும் போது தேவைப்படும் அதிக எரிபொருளை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.