தொடரும் இந்தி மொழி சர்ச்சை: பிரபலங்கள் கிளப்பும் பிரச்சினை

By கி.பார்த்திபன்

பிரபலம் என்றாலே எப்போதும் `ப்ராபளம்' தான். நாட்டில் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப ஏதாவது ஒன்றை அவர்கள் முழுமையாக அறிந்தோ அல்லது வேகத்தில் கூறுவது சமூக ஊடங்களில் வைரலாக்கப்படுகிறது. காட்சி ஊடகங்களிலும் விவாதப் பொருளாகி வருகிறது. அந்த வகையில் சமீப வாரங்களாக சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக இருப்பது இந்தி மொழி.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியதையடுத்து இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அதையொட்டி பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம், அமிஷ்தா பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என கூறிய ஒரு வரி, மொழி பிரச்சினை தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக்க பிள்ளையார் சுழி போட்டது போல் அமைந்தது. அவரைத் தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் இந்தி மொழி தொடர்பாக பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக பிராந்திய மொழித் திரைப்படங்கள் இந்தியில் மொழி பெயர்ப்பதை மையப்படுத்தி திரைப்பிரபலங்கள் பேசி வருகின்றனர். கன்னட திரைப்பட நடிகரான சுதீப் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் இந்தி மொழி தொடர்பாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் வைரலாகின.

இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டார். அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டன. இவரைத் தொடர்ந்து நடிகை ரோஜா, ஜென்டில்மேன் திரைப்பட நாயகி மதுபாலா இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தான் நடித்த ரோஜா திரைப்படம் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டதால் தான் வெற்றி பெற்றது. இந்தி படங்கள் எதுவும் பிற பிராந்திய மொழியில் மொழி பெயர்க்கப்படுவதில்லை. பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிராந்தி மொழி திரைப்படங்களே இந்தியில் மொழி பெயர்க்கப்படுகிறது என கூறியிருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரது கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து நீண்ட விளக்கம் கொடுத்து வருகின்றனர். இதுபோல் நடிகர் கமல்ஹாசன் இந்தி தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசும் வீடியோ, தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவி தேசிய விருது வாங்கச் சென்றபோது இந்தி மொழி தொடர்பாக ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசிய வீடியோ, இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் தற்போது 80களின் நாயகி சுஹாஷினி இந்தி தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன் பிரதமர் மோடி - அம்பேத்கர் குறித்து இளையராஜாவின் கருத்து, இயக்குநர் பாக்யராஜ், பிரதமர் மோடி குறித்து பேசிய பேச்சு குறித்த சர்ச்சைகள் ஒரு வார காலத்திற்குள் முடிந்துவிட்ட சூழலில் இந்தி மொழி தொடர்பாக திரைப்பலங்களின் கருத்து குறித்த சர்ச்சை மட்டும் வாரக்கணக்கில் ஓடி ‘போர்’ அடிப்பதாக நெட்டிசன்கள் தெரிவிப்பது வேறு பிரச்சினைகளை’ பிரபலங்கள் கொண்டுவர வேண்டும் என ஏங்குவது போல் அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE