உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த விஐபி உடன்பிறப்புகள் இருவர் சமீபத்தில் கழக வேலையாக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார்களாம். வந்த வேலையை சுமுகமாக முடித்துக் கொண்டு திரும்பிய அவர்களிடம், “அப்படியே சின்னவரையும் பாத்துட்டுப் போயிருங்க” என்றாராம் முதல்வர். “சரி” என பலமாக தலையாட்டிவிட்டு வந்தவர்கள், “தளபதி சின்னவர்னு சொன்னாரே... யார் அந்தச் சின்னவர்?” என்று அங்கிருந்தவர்களிடம் அப்பாவியாய் விசாரித்தார்களாம். இருவரையும் ஏற இறங்க பார்த்தவர்கள், “சின்னவர தெரியாதா?” என்று கேட்டுவிட்டு உதயநிதி இருந்த திசையைக் காட்டினார்களாம். “ஓ... தம்பியைத்தான் சின்னவர்னு சொன்னாரா தளபதி” என்று கேட்ட இருவரும் அப்படியே சின்னவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு புறப்பட்டார்களாம். ஊருக்கு வந்ததிலிருந்து உடுமலை பார்ட்டிகள் இருவரும், “இனிமே தம்பிக்கு ‘சின்னவர்’னு தான் போஸ்டர் அடிக்கணும்” என்று தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கெல்லாம் சிலபல போன்களைப் போட்டுச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்களாம்.