அதுதான் அல்டிமேட் பிளான்!

By காமதேனு

தனது மகன் திருமணத்தை துர்கா ஸ்டாலினே நேரில் வந்து முன்னின்று நடத்தியதால் இழந்த தெம்பை மீண்டும் பெற்றவராய் தெரிந்தார் சுரேஷ்ராஜன். ஆனாலும் அவரது அரசியல் எதிரிகள் அவரைச் சீண்டுவதை நிறுத்தவில்லை. நாகர்கோவிலில் திமுக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதற்காக அடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் சுரேஷ்ராஜனின் பெயரை கீழே பத்தோடு பதினொன்றாய் போட்டிருந்தார்கள். இதில் அதிருப்தியாகி சுரேஷ்ராஜன் கூட்டத்திற்கு வரமாட்டார் எனக் கணக்குப் போட்டுத்தான் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மேயருமான மகேஷ் இப்படிச் செய்தாராம். ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டத்துக்கு வந்த சுரேஷ்ராஜன், மேடைக்குப் போகாமல் மேடைக்குக் கீழேயே அமர்ந்துவிட்டார். கொட்டும் மழையிலும் அன்பு உடன்பிறப்பு ஒருவரின் குடைக்குள் அமர்ந்து கடைசி வரை கூட்டத்தைக் கேட்டுவிட்டுத்தான் போனார் சுரேஷ்ராஜன். மேடைக்குக் கீழே சுரேஷ்ராஜன் என்ற செய்தி தலைமை வரைக்கும் போனால் தான், இங்கே இருப்பவர்கள் தன்னை எந்த அளவுக்கு உதாசீனப்படுத்துகிறார்கள் என்ற விவரம் தலைமைக்குத் தெரியவரும் என்பதுதான் சுரேஷ்ராஜனின் அல்டிமேட் பிளான் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE