மதுரை: தமிழகத்தில் மது போதை மரணங்களால் சத்தமில்லாமல் கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கைம்பெண்கள் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ‘லாஸ்’ (LAAS) மைய நிர்வாகிகள் ராஜகுமாரி, ஆலாய்சஸ் இருதயம், பால் மைக்கேல்ராஜ், கைம்பெண்கள் ஆதர வற்ற நலச்சங்க தலைவர் அன்புசெல்வி, துணைச் செயலாளர் சுதா, விதை பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் கஸ்தூரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் வாழும் கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை 4.3 கோடி. இது நாட்டிலுள்ள மொத்தப் பெண்களது எண்ணிக்கையில் 7.3 சதவீதம். தமிழகத்தை பொருத்தவரை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை 38.56 லட்சம்.
இது தமிழகத்தில் வாழும் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 10.7 சதவீதம். அப்படி யானால், இப் புள்ளி விவரத்தின்படி தமிழகத் தில் வாழும் விதவைகளின் எண்ணிக்கை தேசிய அளவை விட 3.4 சதவீதம் அதிகம். தற்போது தமிழகத்தில் 40 லட்சம் விதவைகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் அரியலூர், சென்னை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் இருந்து ஒரு மாவட்டத்துக்கு 30 அல்லது 31 கைம்பெண்கள் வீதம் 495 விதவைப் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
» வரலாற்றில் 2 பெரு வெள்ளங்களை தாங்கிய பாலாறு அணைக்கட்டு ரூ.200 கோடியில் புனரமைப்பு
» பழநியில் இடிந்து விழும் அபாயத்தில் தொகுப்பு வீடுகள்: அச்சத்தில் பழங்குடி மக்கள்
அவர்கள் தங்கள் கணவர்கள் இறப்புக்கு மது போதை, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள், விபத்து, தற்கொலை, கரோனா போன்ற 9 காரணங்களை கூறுகின்றனர். இதில், மதுபோதையால்தான் அதிக இறப்புகள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.மிக அதிக அளவில் விதவைகள் நாட்டில் வாழ்ந்தபோதும், அவர்களின் உள்ளார்ந்த துயர்களை சமூகம் கண்டு கொள்வதில்லை.
விதவைப் பெண்களிடம் கடன் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏறக்குறைய 85 சதவீதம் பேர் கடனாளிகளாக இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்றுள்ளனர். ஆனால், 50 சதவீதம் பேர் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களிடம் இருந்து அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற்றுள்ளனர். விதவைகள் தங்கள் வாழ்வாதார உரிமைகளைப் பெறுவது சவாலாக உள்ளது.
கணக்கெடுப்பில் பங்கேற்ற விதவைகளில் 38.6 சதவீதம் பேர் மட்டுமே விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயன் பெறும் ஆவ ணம் வைத்துள்ளனர். பலர் லஞ்சம் மற்றும் பாகுபாடு கண்ணோட்டத்தால் இத்திட்டத்தின் பயனைப் பெற முடியவில்லை, என்கின்றனர்.
கணவரின் மரணம் அவர்களது வாழ்க்கையில் அழுத்தமான சுமையை ஏற்படுத்தி விடுகிறது. சமூகப் புறக்கணிப்பு, தனிமை, மன உளைச்சல், கடன் சுமை, பாதுகாப் பின்மை, குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை போன்றவற்றால் அவர்கள் உளவியல் ரீதியான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இச்சூழலில், தமிழக அரசு விதவைப் பெண்களுக்கு தனி வாரியம் அமைத்து, அவர்களது மேம்பாட்டுக்கு வழிவகை செய்து வருவது பாராட்டுக் குரியது.
அதோடு கீழ்க்கண்ட பரிந்துரைகளை இந்த ஆய்வு முன் வைக்கிறது. அதாவது, விதவைகளின் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளையும் மற்றும் சமத்துவம், வாழ்வாதாரம், வழிபாடு தொடர்பான உரிமைகளையும் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். கணவரது இறப்பைத் தொடர்ந்து நடத்தப்படும் சமூகக் கலாச்சாரச் சடங்குகள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது நாகபட்டினம் கலங்கரை அமைப்பு இயக்குநர் குழந்தை, வழக்கறிஞர் ராஜன், சந்தானம் உடன் இருந்தனர்.