சமூக ஊடக வானவில் -32: பின்னலுக்காகவே ஒரு வலைப்பின்னல்

By சைபர்சிம்மன்

இணைய உலகின் செல்வாக்குமிக்க சமூக வலைப்பின்னல் சேவை எது எனும் கேள்விக்கான பதில், யாரிடம் இதைக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடலாம். பெரும்பாலானோர் இந்தக் கேள்விக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் அல்லது டிக்டாக் என்று பதில் சொல்லலாம் என்றாலும், பின்னல் கலையில் ஆர்வம் கொண்டவர்கள் ராவல்ரி (https://www.ravelry.com/) எனும் சேவையை இதற்கான பதிலாக உற்சாகமாகக் குறிப்பிடுவார்கள்.

சிறந்த சமூக வலைப்பின்னல் சேவை

‘ராவல்ரியா? இப்படி ஒரு சமூக வலைப்பின்னல் சேவையா?' என்று நீங்கள் நினைக்கலாம். பின்னல் கலை ஆர்வலர்கள் மத்தியில் இந்தச் சேவைக்கு இருக்கும் ஈர்ப்பும், செல்வாக்கும் நீங்கள் நினைத்துகூட பார்க்க முடியாதது. நீங்கள் கேள்விபட்டிராத சிறந்த சமூக வலைப்பின்னல் சேவை என்று இந்தத் தளம் பற்றி பிரபல இணைய இதழான ஸ்லேட் (slate.com) சில ஆண்டுகளுக்கு முன் வர்ணித்திருந்தது.

ஃபேஸ்புக்கின் பயனாளிகளில் ஐநூறுக்கும் ஒரு பகுதி அளவைக் கொண்டதுதான். வீடியோ அரட்டை போன்ற அம்சங்கள் எல்லாம் கிடையாது. ஆனால் இந்தக் குறைகளை எல்லாம் மீறி இந்தச் சேவை அதன் பயனாளிகளால் கொண்டாடப்படுகிறது என அந்தக் கட்டுரை ராவல்ரி தளம் பற்றி குறிப்பிடுகிறது.

ஆம், உண்மைதான். ராவல்ரி தளம் அதன் பயனாளிகளால் அந்த அளவுக்குக் கொண்டாடப்படுகிறது. அதைவிட முக்கியமாக அதன் பயனாளிகள் இந்தத் தளத்தைத் தங்கள் இணையச் சமூகமாகக் கருதுகின்றனர். இதில் பங்கேற்பதை இணக்கமாக உணர்கின்றனர். அவர்களுடன் சமூக வாழ்க்கையின் மையமாக இந்தத் தளம் அமைவதாகவும் நினைக்கின்றனர். பயனாளிகள் மத்தியில் இத்தகைய நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும் சமூக வலைப்பின்னல் சேவைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ராவல்ரி அத்தகைய தளங்களில் ஒன்றாக இருக்கிறது.

இலக்கு என்ன?

எல்லாம் சரி, இந்தத் தளத்தில் அப்படி என்ன இருக்கிறது? முதல் விஷயம் இது அளவில் பெரியது இல்லை என்றாலும், இதன் இலக்கு பயனாளிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஸ்வெட்டர், கம்பளி ஆடைகள் போன்றவற்றை உருவாக்கும் பின்னல் கலையில் ஆர்வம் கொண்டவர்கள்தான் இதன் இலக்கு.

பின்னல் கலை சமூகத்திற்கு வெளியே ராவல்ரி சேவை பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் அது பிரச்சினையே இல்லை. ஏனெனில் பின்னல் கலை ஆர்வலர்கள் இந்தத் தளத்தை நிச்சயம் அறிந்திருப்பார்கள் அல்லது அறிந்து கொள்ளும்போது, அட நமக்கான வலைப்பின்னல் இது என அதனுள் ஐக்கியம் ஆகிவிடுவார்கள். பின்னல் கலை தொடர்பான வடிவமைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், இந்தக் கலையில் ஆர்வம் கொண்டவர்களை தொடர்புகொண்டு பேசவும் இந்தச் சேவை வழிவகுப்பதே இதற்குக் காரணம்.

தொடக்கப்புள்ளி எது?

அமெரிக்காவைச் சேர்ந்த கேஸி மற்றும் ஜெஸிகா (Casey -Jessica) தம்பதி கடந்த 2007-ம் ஆண்டு இந்தச் சேவையை உருவாக்கினர். பாஸ்டன் நகரைச் சேர்ந்த கேஸி, வலைதள வடிவமைப்பில் ஆர்வம் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர். அவரது மனைவி ஜெஸிகா, பின்னல் கலையில் ஆர்வம் உள்ளவர். ஜெஸிகா, வலைப்பதிவிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

பொதுவாக இணையத்தில் எந்த ஒரு ஆர்வத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான பல்வேறு குழுக்கள் இருக்கின்றன. பின்னல் கலைக்கும் இத்தகைய இணைய குழுக்கள் இருந்தன. ஆனால் இந்தக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்படாமல் மிகவும் சிக்கலாக இருப்பதாக ஜெஸிகா உணர்ந்தார். இந்த நிலையை மாற்ற, பின்னல் கலை விஷயங்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு இணையதளம் தேவை என ஜெஸிகா தம்பதி பேசிக்கொண்டனர்.

2007 தொடக்கத்தில் கேஸி, பின்னல் கலைக்கான இணையதளத்தை உருவாக்குவதைப் புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்தினார். அவரது நோக்கம் மிக எளிமையானதாக இருந்தது. பின்னல் கலையில் ஆர்வம் கொண்டவர்களின் ஆக்கங்களை எல்லாம் இடம்பெற வைப்பதற்கான இருப்பிடமாக இந்தத் தளம் இருக்க வேண்டும் என நினைத்தார். அதன்படியே தளத்தையும் உருவாக்கினார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ஜெஸிகா தனது நட்பு வட்டத்தில் இருந்த பின்னல் கலை ஆர்வலர்களுக்கு இந்தத் தளம் பற்றிய தகவலை அனுப்பி வைத்தார். இந்தத் தளத்தைப் பார்த்ததுமே அவர்களுக்குப் பிடித்துப்போனதால் தங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைத்தனர். இப்படி மேலும் பலர் இந்தத் தளத்தில் இணைய விரும்பினர். ஒரு கட்டத்தில் புதியவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க முடியாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்க வேண்டியிருந்தது.

பின்னல் ஆக்கங்களுக்கான இணைய நூலகம்

இந்த வரவேற்பை அடுத்து கேஸி தனது வேலையை விட்டுவிட்டு இந்தத் தளத்தில் முழுநேரம் கவனத்தைச் செலுத்த தொடங்கினார். ராவல்ரி டிஷர்ட்களை விற்பனை செய்ததோடு, தளத்தின் அபிமானிகளிடம் இருந்தும் நிதி திரட்டினார். ஆக, வெளி மூலதனம் இல்லாமல் இந்தத் தளம் வளர்ந்தது. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் பின்னல் கலை ஆர்வலர்கள் விரும்பி சங்கமிக்கும் இடமாக இந்தத் தளம் உருவானது.

உலக அளவில் உள்ள பின்னல் கலை ஆர்வலர்கள் இந்தத் தளத்தில் ஐக்கியமாகி இருக்கின்றனர். பின்னல் கலை தொடர்பான புதிய வடிவமைப்புகளை அறிய வேண்டும் என்றால் அல்லது ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட வடிவமைப்புகளைத் தேட வேண்டும் என்றால் இந்தத் தளத்தை விரும்பி பயன்படுத்துகின்றனர். அதைவிட முக்கியமாக தங்கள் பின்னல் ஆக்கங்களைப் பதிவேற்றுவதற்கான இடமாகவும் இந்தத் தளத்தைக் கருதுகின்றனர்.

பின்னல் வடிவமைப்பு தொடர்பான எந்தச் சந்தேகம் என்றாலும் இந்தத் தளத்தை நாடி வருகின்றனர். பின்னல் ஆக்கங்களுக்கான இணைய நூலகம் போல இந்தத் தளம் விளங்குவதால் பின்னல் கலை ஆர்வலர்கள் இந்தத் தளத்தை மிகவும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் பின்னல் கலை சார்ந்த உரையாடலுக்கான இடமாகவும் அமைந்துள்ளது.

இந்த அம்சங்கள் எல்லாம் சேர்ந்துதான் ராவல்ரியை பரவலாக அறியப்படாத இணைய வெற்றிக்கதைகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது. பரவலாகச் சொல்லப்படுவது போல, ஃபேஸ்புக் போன்ற ஒற்றை வலைப்பின்னலைவிட, அவரவர் ஆர்வத்திற்கு ஏற்ற சின்ன சின்ன வலைப்பின்னல்கள்தான் சுவாரசியமானவை என்பதற்கான உதாரணமாக இந்தத் தளம் அமைகிறது!

(தொடரும்)

இழைகளின் உலகம்

பின்னல் கலை ஆர்வலர்களுக்கு என்று பிரத்யேகமான சமூக வலைப்பின்னல் சேவைகளில் ராவல்ரி தவிர முக்கிய தளங்களில் ஒன்றாக யார்ன்ஸிபிரேஷன் (https://www.yarnspirations.com/ ) அமைகிறது. இந்தத் தளம், பின்னல் கலை ஆக்கங்களை அவற்றின் வடிவமைப்பு மூலம் அறிந்துகொள்ள வழிசெய்கிறது. மேலும் புதிய வடிவமைப்புகளையும், போக்குகளையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. இதன் முகப்புப் பக்கத்தில் உள்ள வண்ணமயமான வடிவமைப்புகளே பின்னல் கலை ஆர்வலர்களைச் சொக்க வைத்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE