சூழலியல் மையமாக்கப்படுமா கணபதிக்கல்? - சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்குகளுடன் கூடிய இயற்கை சுற்றுலா மையமாக திற்பரப்பு அருகே உள்ள கணபதிக்கல் உள்ளது. இவற்றை சூழலியல் சுற்றுலா மையமாக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதய கிரி கோட்டை, லெமூர் கடற்கரை என பல சுற்றுலா மையங்கள் நிறைந்துள்ளன. கேரளாவை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயற்கை எழிலுடன் கூடிய பல நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இங்குள்ள மலை கிராமங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதை புது அனுபவமாக கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியல், சிற்றாறு, கரும்பாறை, கடையாலுமூடு, பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து சூழலியல் சுற்றுலா மையமாக்க தமிழகஅரசின் சுற்றுலாத்துறை, மற்றும் வனத்துறை முடிவெடுத்து, அதற்கான இடங்களை ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் இதை செயல்படுத்தாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

இவற்றுக்கு மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மக்களை கவர்ந்திழுக்கும் பல சுற்றுலா மையங்கள் நிறைந்துள்ளன. திற்பரப்பை அடுத்த கடையாலுமூடு அருகே கணபதிக்கல் என்னும் அழகான கிராமம் மற்றும் அதை சுற்றிய பகுதிகள் சிறந்த இயற்கை சுற்றுலா மையமாக உள்ளது.

கணபதிக்கல் நிலப்பரப்பில் இருந்து சுமார் 700 அடிக்கு மேல் ஆழமாக செல்லக்கூடிய ஒரு பள்ளத்தாக்கான பகுதி ஆகும். இந்த பள்ளத்தாக்கு முழுவதும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. இதை சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள், சிறிய நீர்வீழ்ச்சிகள், மலைச்சிகரங்கள், குளம், குட்டைகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் அம்சங்கள் ஏராளம் உள்ளன. இதனால் கணபதிக்கல் பகுதியில் பல சினிமா மற்றும் டிவி சீரியல்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. கணபதிக்கல்லுக்கு தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் கணபதிக்கல் பகுதியில் இயற்கை எழிலுடன் கூடியநீர்வீழ்ச்சிகள், மலைக்குன்றுகள், பச்சை பசேல் எனகாட்சியளிக்கும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.கேரளாவில் இதுபோல் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் அனைத்தும் சிறந்த சுற்றுலா மையமாக்கப்பட்டு அங்கு அனைத்து நாட்களிலும் மக்கள் குவிந்து வருகின்றனர்.

ஆனால் தமிழக சுற்றுலாத்துறை இதுவரை சுற்றுலா மையமான கணபதிக்கல்லை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. சிறந்த சூழலியல் சுற்றுலா மையமாக கணபதிக்கல் பகுதியை மாற்றும் நடவடிக்கையை அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE