விவசாயிகளுக்காக விவசாயிகளே நடத்தும் மரச்செக்கு நிலையம் @ மதுரை

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க எண்ணெய் வித்துகளை கொள்முதல் செய்தும், ஆயுளை அதிகரிக்கும் வகையில் தரமான சமையல் எண்ணெய் கிடைக்கவும் விவசாயிகளே ஒன்றிணைந்து மரச்செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றிய பகுதிகளில் தென்னை, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளதால் தேங்காய் கிட்டங்கிகளும் அதிகம். தனியார் கிட்டங்கிதாரர்கள், விவசாயிகளிடம் 1000 தேங்காய்களுக்கு மட்டும் விலை கொடுத்துவிட்டு, கழிவு காய் என 100 தேங்காய் கூடுதலாக ( வாசிக்காய் ) பெறுவர். மேலும் சந்தை விலையை விட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்து வந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், இடைத்தரகர் இன்றி கொள்முதல் செய்யும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்தனர். இவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினர் ஏற்பாடு செய்தனர். இவர்களது முயற்சியால் 900 விவசாயிகள் ஒன்றிணைந்து தலா ரூ.1,000 பங்குத் தொகை செலுத்தி, 2017-ல் அழகர் மலையான் சிறு தானியங்கள் மற்றும் இதர பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.

அந்நிறுவனம் மூலம் தற்போது கொட்டாம் பட்டி ஒன்றியத்தில் விவசாயிகளிடம் கட்டுபடியாகும் விலைக்கு தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர். கொள்முதல் செய்த தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவற்றை மரச்செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மேம்பாட்டுக் காகவும் பயன் படுத்தி வருகின்றனர்.

இது குறித்து வேளாண் வணிகத்துறை உதவி அலுவலர் சரவணக் குமார் கூறியதாவது: தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில் 2017 முதல் அழகர்மலையான் அக்ரி-ஹார்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் 900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நீடித்த நிலையான மானாவாரி திட்டம் மூலம் எண்ணெய் செக்குகள், கடலை உடைக் கும் கருவி, மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. கருங்காலக்குடியில், கம்பூர் செல்லும் பிரதான சாலையில் இந்நிலையம் இயங்கி வருகிறது. தனியார் கிட்டங்கிதாரர்களைவிட அதிக விலைக்கு தேங்காய்களை விவசாயி களிடம் கொள்முதல் செய்கிறோம். கிட்டங்கிதாரர்கள் கூடுதலாக வாங்கும் 100 காய்களுக்கும் (கழிவுக்காய்) விலை கொடுப்பதால் விவசாயிகள் பலன் அடைகின்றனர். மேலும் கொள்முதல் செய்யும் பணத்தை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்துகிறோம்.

மேலும் தரமான எண்ணெய் உற்பத்தி செய்து வெளிச்சந்தையைவிட, குறைந்த விலைக்கு கலப்படமில்லாமல் விற்கிறோம். கருப்பட்டி கொண்டு தயாரித்த நல்லெண்ணெய் லிட்டர் ரூ.380, வெல்லம் கொண்டு தயாரித்த நல்லெண்ணெய் லிட்டர் - ரூ.350, கடலை எண்ணெய் லிட்டர் - ரூ.260, தேங்காய் எண்ணெய் லிட்டர் - ரூ.250 விலையில் விற்கப்படுகிறது.

நல்ல எண்ணெய் உணவில் சேர்த்துக் கொண்டால் மனிதர்களின் ஆயுள் கூடும் என்பதால் பொதுமக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானம் விவசாயிகளின் உற்பத்தி நிறுவனத்துக்கே செல்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் பொருளாதாரம் அதிகரிக்கிறது.

இன்னும் சில மாதங்களில் அனைவருக்கும் தரமான எண்ணெய் கிடைக்கும் வகையில் சிறிய பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய உள்ளோம். எங்களது நிறுவனத்தை ஆய்வு செய்த வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி பாராட்டினார். மேலும், அரசின் பல்வேறு திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்வதாகவும் உறுதி அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE