ஓசூர்: கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட மலைக் கிராம மாணவர்களுக்கு மேல்நிலை கல்வி எட்டா கனியாக இருந்து வருகிறது. இதனால், குழந்தைத் திருமணம் மற்றும் சிறார் தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட பெட்டமுகிலாளம் மலைக் கிராமத்தைச் சுற்றிலும் காமகிரி, கம்பாளம், தட்டக்கரை, கோட்டையூர், கல்லியூர், கன்னிகாபுரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சிறிய மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கல்வி, மருத்துவம், அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்கு தேன்கனிக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி, பாலக்கோடு ஆகிய ஊர்களுக்கு வந்து செல்கின்றனர்.
ஒரு பேருந்து மட்டும் இயக்கம்: பெட்டமுகிலாளத்திலிருந்து தேன்கனிக்கோட்டைக்கு ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படு கிறது. மேலும், மாரண்டஅள்ளிக்கு பேருந்து வசதி இல்லாததால், இருசக்கர வாகனப் போக்குவரத்து மட்டும் இவர்களுக்கு கை கொடுத்து வருகிறது. பெட்டமுகிலாளம் பகுதியில் உயர்நிலைப் பள்ளி மட்டும் உள்ளதால், மேல் படிப்புக்கு 14 கிமீ தொலைவில் உள்ள உனிசெட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இப்பகுதி மாணவர்கள் சென்று படித்து வருகின்றனர். சிலர் மாரண்டஅள்ளி, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் உறவினர்கள் வீடு மற்றும் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
கல்வி இடைநிறுத்தம்: மேலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேருந்து உள்ளதாலும், தினமும் பேருந்தில் சென்று படிக்க வைக்க விரும்பாத பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை 10-ம் வகுப்புடன் நிறுத்தி விடுகின்றனர். அதன்பின்னர் மாணவர்கள் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அதேபோல, மாணவிகளுக்கு 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். கல்வி இடைநிறுத்தம் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்கவும், மாணவர்களுக்கு மேல்நிலை கல்வி கிடைக்கும் வகையில் பெட்டமுகிலாளம் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
» தண்ணீர், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க மரவள்ளி கிழங்கு சாகுபடியில் சேலம் விவசாயிகள் ஆர்வம்
» மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: கோவை தொழில் துறையினர் வலியுறுத்தல்
பாதுகாப்பு இல்லை - இதுதொடர்பாக அப்பகுதி மாணவிகள் சிலர் கூறியதாவது: பொட்டமுகிலாளத்திலிருந்து மேல்நிலை கல்விக்காக உனி செட்டிக்கு செல்ல காலை 7 மணிக்கும், மாலையில் 5.20 மணிக்கும் மட்டுமே பேருந்து உள்ளது. மாலையில் பொட்டமுகிலாளத்துக்கு 6.30 மணிக்கு வந்த பின்னர் எங்கள் கிராமங்களுக்கு நடந்தே செல்ல வேண்டும். சில நேரங்களில் பேருந்து இயக்கவில்லை என்றால் இரவு 7 மணிக்கு வரும் பேருந்தில் வரவேண்டிய நிலையுள்ளது.
இதனால், எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இக்காரணத்துக்காகப் பலர் கல்வி இடைநிறுத்தும் நிலையுள்ளது. பெரும்பாலும் எங்கள் கிராமங்களில் 10-ம் வகுப்பு வரை படிப்பதே பெரும் சவாலாக உள்ளது. அதன்பின்னர் 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால், எங்களின் கல்விக் கனவு எட்டாத தூரத்தில் உள்ளது. எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்டமுகிலாளம் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பெட்டமுகிலாளத்திலிருந்து போதிய பேருந்து வசதி இல்லாததால், பெண் குழந்தைகளை நீண்ட தூரம் சென்று படிக்க வைக்கப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. மேலும், பல பெற்றோர்கள் பெங்களூரு, ஓசூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதனால், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதுகின்றானர்.. எனவே, பெட்டமுகிலாளம் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால், இப்பகுதி மாணவர்கள் மேல்நிலை கல்வியை பெறும் வாய்ப்பு கிடைக்கும், இவ்வாறு அவர்கள் கூறினர்.