மருத்துவமனைக்கு மாணவி செய்த பதிலுதவி!

By சுஜாதா எஸ்

தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவமனைக்கு, ஏதேனும் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் எனப் பலரும் நினைப்பது உண்டு. ஆனால், வெகு சிலரே அந்த எண்ணத்தைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி மேடி பார்பர்!

12 வயதில் விடுமுறையைக் கழிப்பதற்காக பஹாமாஸுக்குச் சென்றிருந்தார் மேடி. திடீரென்று தாங்க இயலாத தலைவலி. மூளையில் ஒரு கட்டி இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் பெரும்பகுதி கட்டியை நீக்கினாலும் ஆபத்து நீங்கிவிடவில்லை. செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையில் மேடிக்குச் சிகிச்சைத் தொடர்ந்தது. மேடியை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சேர்த்து அரவணைத்துக்கொண்டு, நம்பிக்கையை விதைத்தது அந்த மருத்துவமனை.

8 மாதங்கள் கடினமான கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு, 2018-ம் ஆண்டு புற்றுநோயின் பிடியிலிருந்து முழுமையாக வெளிவந்தார் மேடி.

“நான் உயிருடன் வீடு திரும்பியதில் எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. அப்போதுதான் நான் வாழ்வதற்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை வழங்கிய மருத்துவமனைக்கு ஏதாவது பதிலுதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்” என்கிறார் மேடி.

சிகிச்சையின் விளைவாக மேடிக்கு வலது பக்கம் லேசான வாதம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்குப் பிடித்த கூடைப்பந்து விளையாட்டில் பங்கேற்க முடியவில்லை. மேடியின் வருத்தத்தைப் போக்கும்விதமாக அவர் தந்தை, ‘அமெரிக்காவின் எதிர்கால விவசாயிகள்’ திட்டத்தில் மேடியையும் அவர் அண்ணன் ரையானையும் சேர்த்து, பன்றிக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தார். 9 ஏக்கர் நிலப்பரப்பில் பன்றிப் பண்ணை உருவானது. ரையானின் உதவியுடன் மேடி பன்றிகளைக் கவனமாக வளர்த்து வந்தார்.

கடந்த மாதம் கால்நடைகளுக்கான கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை ஏலம் விடுவார்கள். கிடைக்கும் பணத்தைத் தங்கள் கல்லூரிக் கட்டணத்துக்கோ அல்லது மேலும் கால்நடைகளை வாங்குவதற்கோ பயன்படுத்திக்கொள்வார்கள். மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பொதுமக்கள் நல்ல விலை கொடுத்து விலங்குகளை ஏலத்தில் எடுப்பார்கள்.

ஏலத்தில் கலந்துகொண்ட மேடி, தன்னுடைய பன்றிகளுக்குக் கிடைக்கும் ஏலத் தொகை முழுவதையும் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். மேடியின் உன்னத நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள் தாராளமாக நிதி கொடுத்தனர். இறுதியில், யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத அளவுக்கு 23 லட்சம் ரூபாய்க்குப் பன்றிகள் ஏலம் எடுக்கப்பட்டன.

“நல்லெண்ணத்துடன் வாரிவழங்கப்பட்ட இந்த ஏலத் தொகை, பலரின் உயிரைக் காப்பாற்றப் போகிறது என்பதை நினைக்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. புற்றுநோய் ஒரு நபரை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு, சிகிச்சைப் பெற்று, கிடைத்த இந்த இரண்டாவது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற விரும்பினேன். அதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். என்னுடைய பணி மேலும் தொடரும்” என்கிறார் மேடி.

மேடியின் சேவை உள்ளத்துக்குக் கோடி வந்தனங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE