இன்றைய நாகரிக சமுதாயம், அதிநவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்று உலகுக்கான தேடலில் விண்வெளியை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இருப்பினும், எத்தியோப்பியா என்றவுடன் நினைவுக்கு வரும் போர், பஞ்சம், பசி, வறுமை, போரில் மடியும் அப்பாவி உயிர்கள், அழுதபடி நிற்கும் குழந்தைகள் போன்றவற்றை அந்தத் தொழில்நுட்பத்தால் தடுத்துநிறுத்த முடியவில்லை.
பல மாதங்களாக நடக்கும் போரினால், எத்தியோப்பியாவின் டிக்ரே பகுதி முற்றிலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. பஞ்சத்தாலும், பட்டினியாலும் பெரும்பாலான மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர். உள்நாட்டுப் போரும், அதனால் ஏற்பட்ட பஞ்சமும், உயிரிழப்புகளும் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
எத்தியோப்பியா எங்கே உள்ளது?
ஆப்பிரிக்கக் கண்டத்தில், இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் எத்தியோப்பியாவே அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்பிரிக்க நாடு. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த நாட்டைச் சுற்றி சூடான், சோமாலியா, எரித்திரியா, சிபூத்தி, கென்யா ஆகிய நாடுகள் இருக்கின்றன. எரித்திரியா, எத்தியோப்பியா, சிபூத்தி, சோமாலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்கக் கொம்பு நாடுகளில் (Horn of Africa) முதன்மையான ராணுவ வலிமை கொண்ட நாடாகவும் இந்நாடு உள்ளது.
போரின் வரலாறு
எத்தியோப்பியா என்பது, 10 தன்னாட்சி பிராந்தியங்களைக் கொண்ட தேசம். 1992 வரை எத்தியோப்பியாவில், சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுபெற்ற கட்சி ஆட்சியிலிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்க ஆதரவு பெற்ற கட்சி ஆட்சிக்கு வந்தது.
டிக்ரே பிராந்தியத்தைச் சேர்ந்த ‘டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி’ (டி.பி.எல்.எஃப்) கட்சியின் தலைமையிலான கூட்டாட்சி அரசு 1992 முதல் 2018 வரை எத்தியோப்பியாவை ஆட்சி செய்தது. 2018 தேர்தலில் டி.பி.எல்.எஃப் தோற்கடிக்கப்பட்டு, ‘எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி’ கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. டி.பி.எல்.எஃப் கட்சி டிக்ரே பிராந்தியத்தை மட்டுமே ஆட்சி செய்யும் நிலைக்குச் சென்றது. இதன் காரணமாக, உருவான குழப்பங்களால் கடந்த சில ஆண்டுகளாக அங்கே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக 2020 ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவிருந்த தேர்தலை ஒத்திவைப்பதாகப் பிரதமர் அபி அஹமது அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த டி.பி.எல்.எஃப் கட்சி, தான் ஆளும் டிக்ரே பிராந்தியத்தில் மட்டும் தேர்தலை நடத்தி, பிரச்சினையைத் தீவிரமாக்கியது. அந்தத் தேர்தலைச் சட்டவிரோதமானது என்று அபி அஹமது அறிவித்தார். அதற்கு எதிர்வினையாக 2020 நவம்பர் 4-ல் டி.பி.எல்.எஃப் கட்சி டிக்ரேயில் இருந்த கூட்டாட்சி அரசு ராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, அபி அஹமது அந்தப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை நடத்த உத்தரவிட்டார். கடந்த நவம்பரில் தொடங்கிய இந்த உள்நாட்டுப்போர், இன்றும் முடிவுறாமல் தொடர்கிறது.
போரின் பாதிப்புகள்
இதுவரை ஆயிரக்கணக்கானோர் இப்போரினால் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் மக்கள், தங்கள் சொந்த வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், உணவின்றிப் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். டிக்ரே, அமாரா, அஃபார் ஆகிய பகுதிகளில், பல மாதங்களாக நடக்கும் இந்தப் போரினால் 90 லட்சத்துக்கும் மேலான மக்களுக்கு உணவு உதவிக்கான தேவை உள்ளது என ஐநா உலக உணவுக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
நவம்பர் 2020 முதல் நடைபெற்றுவரும் போரில், டிக்ரேயின் பெரும்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உதவிகளையும் மருத்துவப் பொருட்களையும் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாத அளவுக்கு அங்கே நிலைமை மோசமாக உள்ளது. வங்கிகள் முற்றிலும் மூடப்பட்டுவிட்டதால், மக்களால் பணத்தை எடுக்கவும் முடியவில்லை; பிறருக்குக் கொடுக்கவும் முடியவில்லை; கடைகளில் எதையும் வாங்க முடியவில்லை. அத்தியாவசியச் செலவுகளுக்குக்கூட அவர்களிடம் பணம் இல்லாத நிலை.
மருத்துவர்களின் பரிதாப நிலை
இந்தத் துன்பங்களிலிருந்து மருத்துவர்களும் செவிலியர்களும்கூடத் தப்பவில்லை. டிக்ரே பகுதியிலிருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையின் செவிலியர்களும் மருத்துவர்களும் உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். “போரில் காயமடைந்த இரண்டு தரப்பினருக்கும், ஓய்வின்றி நாங்கள் சிகிச்சை அளித்தோம். இன்றும் அளித்துவருகிறோம். மருந்துகளின் பற்றாக்குறையை மீறி எண்ணற்ற உயிர்களை நாங்கள் காப்பாற்றிவருகிறோம். இருப்பினும் எட்டு மாதங்களாக எங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றி, கையேந்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என மருத்துவர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் தெரிவிக்கிறார்.
கடந்த ஏழு மாதங்களாக, டிக்ரேயின் தலைநகரான மெக்கெல்லில் உள்ள அய்டர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் உணவுப் பொட்டலங்களுக்காக வரிசையில் கையேந்தி நிற்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அவர்களுக்குக் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.
“நாங்கள் அனைவரும், ஒரு நாளைக்குச் சாப்பிடும் உணவின் அளவை வெகுவாகக் குறைத்துவிட்டோம். சமையல் எண்ணெய், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை வாங்குவது பற்றிக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. மருத்துவத்தைத் தவிர எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது என்பதால், குடும்பத்தினரின் பசியாற்ற, உணவுக்காகப் பிச்சை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அய்டர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறியது, உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
உதவியும் எதிர்ப்பும்
கடந்த டிசம்பரிலிருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஐநாவின் வாகனங்கள் எதுவும் டிக்ரேவை சென்றடையவில்லை. இதனால், பட்டினியும் அதனால் நேரும் மரணங்களும் அபாயகரமான அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. அங்கே நிலவும் பட்டினியை அகற்றவும், மரணங்களை நிறுத்தவும் ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட உணவு லாரிகள் தேவை என்று ஐநா கூறுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழலை முடிவுக்குக் கொண்டுவரவும், நாட்டை மறுநிர்ணயம் செய்வதற்கும், மக்களின் பசியாற்றி அவர்களின் நலனை மீட்டெடுக்கவும் அடுத்த ஆறு மாதங்களுக்கு 2,500 கோடி ரூபாய் அளவுக்கு உதவி தேவை என்றும், அதற்கான நிதியுதவியை அளிக்குமாறும் உலக நாடுகளிடம் ஐநா அறைகூவல் விடுத்துள்ளது.
இந்நிலையில், ‘எத்தியோப்பியாவுக்குப் பராமரிப்பாளர் தேவையில்லை’ உள்ளிட்ட முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளுடன் அந்நாட்டு மக்கள் பெரும் எண்ணிக்கையில் அமெரிக்காவை எதிர்த்துப் பேரணி நடத்தியுள்ளனர். ‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்; அமெரிக்கா இதில் தலையிடத் தேவையில்லை’ என்பதே அந்தப் போராட்டத்தின் சாராம்சம்.
மனித இனத்தின் அவமானம்
எது எப்படியோ, உலகெங்கும் மக்கள் தங்கள் கருத்துரிமைகளுக்காகவும், அரசியல் கொள்கைகளுக்காகவும், மத நம்பிக்கைகளுக்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் போராடிவரும் சூழலில், எத்தியோப்பியா நாட்டில் மட்டும் மக்கள் இன்றும் ஒருவேளை உணவுக்காகப் போராடும் அவலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாட்டில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட போரிலும், செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்திலும் அகப்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதும், அதை நாம் அனுமதிப்பதும், மவுனமாக வேடிக்கை பார்ப்பதும் ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே அவமானம்.