சிறகை விரி உலகை அறி-35: விளையாட்டு வெறும் விளையாட்டல்ல!

By சூ.ம.ஜெயசீலன்

மல்லி என்றதும் மதுரை, பூட்டு என்றால் திண்டுக்கல், சமையலுக்கான அரசளவு மளிகைப் பொருட்கள் வாங்கிட கொல்லிமலை என்பதுபோல ஒலிம்பிக் என்றதும் சுடர்ந்து ஒளிர்கிறது ஏதென்ஸ்.

கிரேக்கத்தில் உள்ள உயரமான மலையின் பெயர் ஒலிம்பஸ். அந்த மலையில்தான் கிரேக்க கடவுள்களும் பெண் தெய்வங்களும் வாழ்வதாக கிரேக்கர்கள் நம்பினார்கள். நம்பிக்கையின் விளைவாக, எலிஸ் (Elis) மாகாணத்தில், சேயுஸ் கடவுளுக்காக கி.மு.457-ல் தூயகம் (sanctuary) எழுப்பினார்கள். தூயகத்தின் பெயர் ஒலிம்பியா. சிற்பி பீடியாஸ் 12 மீட்டர் உயரத்தில் தந்தங்களால் சேயுஸ் கடவுளை சிற்பமாகச் செதுக்கினார். தாடி, தலைமுடி மற்றும் ஆடைகளைத் தங்கத்தாலும், கண்களை ஒளிரும் நகைகளாலும் செய்தார். பழங்கால உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக விளங்கியது இச்சிற்பம்.

இங்குதான், கி.மு.776-ல் முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. குத்துச்சண்டை, ஓட்டம், நீளம் தாண்டுதல், தேரோட்டுதல், மல்யுத்தம், கல் அல்லது ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றனர். பெண்களுக்கு ஓட்டப் போட்டியும் (foot-race), எரியும் சுடரை ஏந்தி ஓடுகிற (torch-race) போட்டியும் நடத்தப்பட்டன. எரியும் விளக்குடன் எல்லைக் கோட்டை அடைகிறவர்கள் அல்லது, யாருடைய விளக்கு அதிக நேரம் எரிகிறதோ அவர்கள் வெற்றியாளர்கள். ஓடுகிறபோது மற்றவர்களின் விளக்கை அணைக்கவும் அனுமதி உண்டு.

பான்ஏதெனிக் மைதானம்

பான்ஏதெனிக் மைதானத்தில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும் கொப்பரை.

ஒன்றிணைத்த விளையாட்டுகள்

ஒலிம்பியாவில் நடந்த விளையாட்டுகள், பான்ஹெலனிக் (Pan-Hellenic Games) விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு உதவின. பான் என்றால் ‘எல்லாரும்’ என்று அர்த்தம். ஹெலனிக் என்பது கிரேக்கர்களை, அதாவது, ஹெலன் (Hellen) என்பவரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த மக்களையும் அவர்களின் வாரிசுகளையும் குறிப்பது. பான்ஹெலனிக் விளையாட்டுகளுள் 4 விளையாட்டுகள் முக்கியமானவை. ஆனால், நான்கும் ஒரே ஆண்டில் நடந்ததே இல்லை.

பான்ஏதெனிக் மைதானத்தில் வில்வித்தை போட்டி நடக்கிறது.

(1) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியாவில் நடந்த ஒலிம்பிக்ஸ்.

(2) கி.மு.582-ல் தொடங்கி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, டெல்பியில் நடைபெற்ற பித்தியன் விளையாட்டு (Pythian Games) .

(3) கி.மு.580-ல் தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொரிந்தின் இஸ்த்முஸ் நகரில் நடைபெற்ற விளையாட்டு (Isthmian games)

(4) கி.மு.573 முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நெமீயாவில் நடந்த விளையாட்டு (Nemean Games).

விளையாட்டுகளைக் கடவுளுக்கான விழாவாகவே கொண்டாடினார்கள். ஒலிம்பியா மற்றும் நெமீயா விளையாட்டுகள், சேயுஸ் கடவுளுக்காக நடந்தன. டெல்பியில் நடந்த விளையாட்டுகள், அப்பல்லோவை மகிழ்விக்க நடந்தன. பொசைதியான் கடவுளை மகிழ்விக்க கொரிந்து நகரில் விளையாட்டுகள் நடந்தன.

பல மாகாணங்களாகப் பிரிந்திருந்த கிரேக்கர்களை இந்த விளையாட்டுகள் ஒருங்கிணைத்தன. கிரேக்கம் மற்றும் காலனி நாடுகளான ஆசியா மைனர், இத்தாலி, வடக்கு அட்டிகாவில் இருந்தும் வீரர்கள் வந்து போட்டியிட்டார்கள். விளையாட்டு தொடங்குவதற்கு முன்பாக, தூதுவர் ஒருவர் ஒவ்வொரு நகராகச் சென்று விளையாட்டு தொடங்கும் தேதியை அறிவித்தார். வீரர்கள் பயிற்சி எடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக வந்து பார்த்துத் திரும்பவும் விளையாட்டுக்கு முன்பும் பின்பும் போர் நிறுத்தம் கடைபிடித்தார்கள்.

முந்தைய பனாதெனிக் மைதானம்

கி.மு. 338-ல், ஏதென்ஸின் நிதி நிர்வாகியாக லிகோர்கஸ் (Lykourgos) பொறுப்பேற்றதும் பல்வேறு மக்கள் நலன்சார் பணிகளை முன்னெடுத்தார். அதில் முக்கியமானது, பனாதெனிக் (Panathenaic) விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி. இணைகர வடிவில் (Parallelogram) அமைந்த மைதானத்தின் ஒரு பகுதி குறுகலாக, நுழைவாயிலாக இருந்தது. கி.மு. 330/29-ல் பனாதெனையா (Panathenaia), அதாவது பெண் தெய்வம் ஏதென்னா திருவிழாவின்போது, முதல் முறையாகப் போட்டிகள் நடைபெற்றன. மைதானத்தின் மூன்று பக்கமும் மண் சரிவில் அமர்ந்து பார்வையாளர்கள் பார்த்தார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் மர இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.

உரோமையர் கால ஏதென்ஸ்

ஏதென்ஸ் உரோமையர்களின் நிர்வாகத்தின்கீழ் வந்தவுடன் அரசியல் அதிகாரத்தை இழந்தது. ஆனாலும், பேரரசர் ஹேட்ரியன் ஆட்சியில் (கி.பி. 117-138) ஏதென்ஸ் ஞானத்திலும் கலையிலும் உச்சத்தில் இருந்தது. கொடையாளர் ஹெரோடியஸ் அடிகஸ் பல்வேறு கட்டிடங்களைக் கட்டினார். அதில் முக்கியமானது, பனாதெனிக் விளையாட்டு மைதானத்தில் கி.பி. 139 – 144-ல் நடந்த புனரமைப்பு. இரண்டு மிக முக்கியமான மாற்றங்களை ஹெரோடியஸ் செய்தார்.

1. நேர்க்கோடாக இருந்த மைதானத்தை, குதிரை லாடம் மாதிரியில் அமைத்தார்.

2. இருக்கைகள் அனைத்தையும் வெள்ளை பென்டலிக் மார்பிள் கற்களால் கட்டினார். ஏறக்குறைய 50,000 பேர்வரை அமர்ந்து பார்க்கும்படி பார்வையாளர்களின் இடத்தையும் அதிகரித்தார்.

கிறிஸ்தவ சமயம் நடைமுறைக்கு வந்தபோது, பிறசமய தெய்வத்துக்கான கொண்டாட்டங்களை அவர்கள் தடை செய்ததாலும், உரோமையர்களின் ஆட்சிக்காலத்தில் கொடும் விலங்குகளுடன் சண்டையிடும் போட்டிகள் புகழ்பெற்றிருந்ததாலும், பனாதெனிக் மைதானம் தன் பொலிவை இழந்தது. காலப்போக்கில் இயற்கைச் சீற்றங்களாலும், மார்பிள்களை மக்கள் எடுத்துச் சென்றதாலும் பாழடைந்தது.

அகழாய்வு மீட்டெடுத்த வரலாறு

1836-ல் நடந்த அகழாய்வில், ஹெரோடியஸ் அடிகஸ் மைதானத்தின் சுவடுகள் பல ஆதாரங்களுடன் மீட்டெடுக்கப்பட்டன. பென்டலிக் மார்பிளுடன் மீண்டும் மைதானம் கட்டப்பட்டது. உலகிலேயே முழுவதும் மார்பிள் இருக்கைகளால் ஆனது இந்த மைதானம் மட்டுமே. முதல் நவீன ஒலிம்பிக்ஸ் (The modern Olympic Games) 1896-ல் இங்கிருந்துதான் தொடங்கியது. முதன்முறையாக ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓட்டமும் அறிமுகமானது. பொதுவாக வட்ட வடிவிலான மைதானங்களைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால், பனாதெனிக் மைதானம் கொண்டை ஊசி வடிவிலானதாகும்.

பழமை மறக்காத நவீனர்

தற்போது, ஒலிம்பிக் விளையாட்டுகள் எந்த நாட்டில் நடந்தாலும், முதல் ஒலிம்பிக் நடந்த ஒலிம்பியாவில், ஹேரா கோயில் (Temple of Hera) முற்றத்தில் முறைப்படி தொடக்க விழா நடத்தி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது. தொடக்கவிழா வழிபாடுகளை தலைமைப் பெண்குரு (Priestesses) நடத்துகிறார். சூரியக் கடவுள் அப்பல்லோ தன் கதிர்களால் ஒளி ஏற்ற வேண்டும் என பெண்குரு ஜெபித்து பரவளைய ஆடியில் (Parabolic mirror) குவிந்த சூரிய ஒளியை, தன் கையில் உள்ள தண்டில் தீபமாகப் பெறுகிறார்.

ஒலிம்பிக் தீபம் குவளையில்!

தீபத்தை பக்தியோடு மற்றொரு குவளையில் பகிர்ந்து, அதை தொடக்க விழா நடக்கும் மைதானத்துக்குத் தன் தோழிகளுடன் எடுத்துச் செல்கிறார். மைதானத்தில் தோழிகள் நடனமாடிய பிறகு, தன் கையில் உள்ள தீபத்தை, ஒலிம்பிக் வீரரிடம் உள்ள விளக்குத் தண்டில் பகிர்கிறார். ஆலிவ் இலை கொடுக்கிறார். அமைதியின் புறாவைப் பறக்க விடுகிறார்.

பியர்ரே தே கூபர்டென், ‘இதய’ நினைவிடம்

இதயங்களை இணைத்த இதயம்

தலைமைப் பெண்குருவிடம் இருந்து பகிர்ந்த தீபத்தையும், பெற்ற ஆலிவ் இலையையும் தனித்தனியாகக் கைகளில் ஏந்தியபடி ஒலிம்பியா மைதானத்தில் இருந்து முதல் வீரர் ஓடத் தொடங்குகிறார். குறிப்பிட்ட தூரம் ஓடிவந்து, நவீன ஒலிம்பிக் விளையாட்டைத் தொடங்கிய பியர்ரே தே கூபர்டென் (Pierre de Coubertin) நினைவிடத்துக்குள் செல்கிறார். கூபர்டெனின் உடல் ஸ்விட்சர்லாந்தில் புதைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவரின் வேண்டுகோளின்படி இதயம், ஒலிம்பியாவில் புதைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் அஞ்சலி செய்தபிறகு, வளாகத்தில் இருந்து வெளியே வந்து இரண்டாவது வீரரிடம் தீபத்தைப் பகிர்கிறார். முதல் நபர் கொண்டுவந்த தீபம் அணைக்கப்படுகிறது. கிரேக்கத்தின் முக்கிய நகரங்களில் வலம் வந்த பிறகு பனாதெனையா மைதானம் வரும் ஒலிம்பிக் தீபம், அங்குள்ள கொப்பரையில் ஏற்றப்படுகிறது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியை நடத்துகின்ற நாட்டின் பிரதிநிதியிடம் லாந்தரில் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.

நவீன பனாதெனிக் மைதானம்

மைதானத்தைப் பார்க்கச் சென்றேன். முகப்பில் பல்வேறு நாட்டு கொடிகள் பறக்கின்றன. அருகிலேயே, நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்காக மைதானத்தை முழுமையாகச் சீரமைத்த கொடையாளர் ஜார்ஜ் அவரோப் (George Averoff) சிலை உள்ளது. நுழைவுச் சீட்டு வாங்கியவுடன், குரல் பதிவு செய்யப்பட்ட வாக்மேன் கொடுத்தார்கள். மைதானத்தின் சில இடங்களின் முக்கியத்துவம் குறித்து பல மொழிகளில் பதிவு செய்துள்ளார்கள். அந்தந்த இடத்தில் நின்று ஆங்கில மொழிக்கான எண்ணை அழுத்தினேன். வரலாற்றை அறிந்தேன்.

பதக்கம் பெறுகிறவர்களின் மேடையில் ஒரு ஜம்ப் ஷாட்

மைதானத்தின் நடுவில், உயரம் தாண்டுதல், வில் வித்தை போன்ற விளையாட்டுகளுக்கான இடம்; அதைச் சுற்றி ஓடும் தளம்; அதற்கடுத்து, கேலரியில் உட்காருவதற்காக மக்கள் நடந்து செல்லும் பகுதி உள்ளது. மழைநீர் மைதானத்தில் தேங்கிவிடாமல் வெளியேறுவதற்கு வடிகால் அமைத்துள்ளார்கள். தலைவர்கள் அமர்வதற்காகக் கைப்பிடியுடன் இருக்கைகள் உள்ளன. வீரர்களுக்கு மைதானத்தின் எல்லையைக் குறிப்பிட இருபக்கமும் முகங்கள் உள்ள தூண்கள் (Herms) நிற்கின்றன.

ஒலிம்பிக்கில்தான் ஓட முடியவில்லை, மைதானத்திலாவது ஓடுவோமே என, மற்ற சுற்றுலா பயணிகளைப் போலவே ஒரு சுற்று ஓடினேன். வீரர்கள் பதக்கம் பெறும் மேடையில் ஏறி, குதித்துப் படமெடுத்தேன்.

(பாதை நீளும்)

ஒலிம்பிக் அருங்காட்சியகம் செல்லும் குகைப் பாதை

ஒலிம்பிக் அருங்காட்சியகம்

ஒலிம்பிக் ஆவணம்!

பனாதெனிக் மைதானத்தின் ஒரு மூலையில் ஒலிம்பிக் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மார்பிள் இருக்கைகளுக்குக் கீழே, குகைக்குள் செல்வதுபோல செல்ல வேண்டும். 1930 முதல் நடைபெற்ற ஒவ்வொரு ஒலிம்பிக்கின் அசல், ஒலிம்பிக் தீப்பந்தங்கள், கொப்பரை, போஸ்டர்ஸ் போன்றவற்றை இங்கே வைத்திருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிகள் எங்கெங்கு, எப்போது நடந்தன, அதற்காக வெளியிடப்பட்ட லோகோ போஸ்டர் மற்றும் தீப்பந்தங்களின் தனித்துவங்கள் என்னென்ன என்பனவற்றை ஒரே இடத்தில் அறிய இந்த அருங்காட்சியகம் உதவுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE