கரோனாவின் ஒமைக்ரான் வேற்றுரு உலகை மீண்டும் முடக்கத் தொடங்கியிருந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க நோவாக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் வந்து இறங்கினார். விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்ன் நகரில் நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்புக் குழுவும் ஆஸ்திரேலியா அரசும் உத்தரவிட்டிருந்தன. இல்லையெனில், அதற்கு மருத்துவ ரீதியிலான விலக்கு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஜோகோவிச் அப்படி விண்ணப்பித்திருந்ததால், அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. வேறு சிலருக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது என்றாலும், தடுப்பூசிக்கு எதிராக வெளிப்படையாகவே பேசிவரும் ஜோகோவிச்சுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரிடமிருந்து எதிர்ப்பைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் அவரைச் சாடி பல பதிவுகள் எழுதப்பட்டன.
இதையடுத்து, மெல்போர்ன் விமான நிலையத்திலேயே அவரின் விசாவை ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்தது. ஆனால், ஜோகோவிச் அதை ஏற்க மறுத்து நீதிமன்றத்தை நாடினார். கரோனா குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும், தடுப்பூசிகள் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகள் உலகெங்கும் பரவியிருக்கும் சூழலில், ஜோகோவிச்சின் நிலைப்பாடு, அறிவியல் மறுப்பாளர்களுக்கும் போலி அறிவியலைப் பரப்புபவர்களுக்கும் வலுசேர்ப்பதாக அமைந்தது. ஜோகோவிச்சுக்கு ஆதரவாக அவர்கள் போராட்டத்திலும் குதித்தனர். முதல் சுற்றில் வெற்றியும் அவருக்கு கிடைத்தது. இருப்பினும், ஆஸ்திரேலிய அரசின் தொடர் சட்டப் போராட்டத்தால், இரண்டாம் சுற்றில் அவருடைய விசா ரத்து செய்யப்பட்டது. நாட்டை விட்டும் அவர் வெளியேற்றப்பட்டார்.
தடுப்பூசி எதிர்ப்பாளர்
கோவிட் தடுப்பூசிக்கு எதிரான அவரின் நிலைப்பாடு உலகம் அறிந்தது. தன்னை கோவிட் தடுப்பூசி எதிர்ப்பாளர் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் அளவுக்கு அறிவியல் மறுப்பும், மூடநம்பிக்கையும் அவருக்குள் வலுப்பெற்று நிறைந்திருந்தது. “தனிப்பட்ட முறையில் தடுப்பூசியை எதிர்க்கிறேன். பயணம் மேற்கொள்வதற்கு ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதை நான் விரும்பவில்லை” என்று சமூக வலைதளங்களில் எழுதியவர் அவர். தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அவர் வெளிப்படுத்திய பல்வேறு கருத்துகள் மிகவும் அபாயகரமானவையாக, சர்ச்சைக்குரியவையாக இருந்தன; இருக்கின்றன.
ஜோகோவிச் ஏன் அறிவியலை மறுக்கிறார்?
ஜோகோவிச்சின் தடுப்பூசி எதிர்ப்புக்கும் அறிவியல் மறுப்பு நிலைப்பாட்டுக்கும் பின்னணியில் செர்வின் ஜாஃபரி என்பவர் இருப்பதாக நம்பப்படுகிறது. செர்வின் ஜாஃபரி, தீவிர அறிவியல் மறுப்பாளர், ‘ஆரோக்கிய குரு’ என்றும் தன்னை அறிவித்துக்கொண்டவர். நகரமயமாக்கல், கார்பன் உமிழ்வு, நச்சுப் பொருட்களின் சுரங்கம், ரசாயனங்கள் ஆகியவற்றுக்கு எதிரானவர். இவரின் நீண்டகால மாணவராக ஜோகோவிச் இருக்கிறார். நவீன மருத்துவத்தின் மீதான ஜோகோவிச்சின் மறுப்புக்கான முக்கியக் காரணமும் அதுவே.
கடந்த ஆண்டு, நேர்மறைச் சிந்தனையைப் பயன்படுத்தி தண்ணீர், உணவு ஆகியவற்றை எப்படிச் சுத்தப்படுத்துவது, பயனுள்ளதாக மாற்றுவது என்று ஒரு பொது மன்றத்தில் ஜாஃபரியுடன் விவாதிக்கும் அளவுக்கு ஜோகோவிச் கண்மூடித்தனமாக அவரை நம்பினார். அந்த விவாதத்தில், தனக்குத் தெரிந்த சிலர் பிரார்த்தனை, நன்றியுணர்வு ஆகியவற்றின் மூலம் நச்சுத்தன்மையுள்ள உணவை ஆரோக்கியமான உணவாகவும், அசுத்தமான தண்ணீரைச் சுத்தமான நீராகவும் மாற்றுகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும், தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகள் நம்முடைய எண்ணத்துக்கு ஏற்ப வினைபுரியும் என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். அந்த விவாதத்தின் காரணமாக, ஜோகோவிச் மிகுந்த ஏளனத்துக்கு உள்ளானார். ஆனால், அதை அவர் உணரவும் இல்லை, பொருட்படுத்தவும் இல்லை. முக்கியமாக, ஊட்டச்சத்து மிகுந்த பானம் என்று தண்ணீரை சுமார் 4,000 ரூபாய்க்கு ஜாஃபரி விற்றுக்கொண்டிருந்தது குறித்தும் அவர் கவலைப்படவில்லை.
பிற நம்பிக்கைகள்
போஸ்னியாவில் உள்ள விசோகோ நகருக்கு ஜோகோவிச் அடிக்கடி செல்வதும், அங்கே தொழிலதிபர் செமிர் ஒஸ்மானஜிக் என்பவரைச் சந்திப்பதும் அனைவரும் அறிந்தது. விசோகா நகரில், பண்டைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உண்டு. அவற்றுக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு எனும் நம்பிக்கையை உருவாக்கி, அதைப் பரப்புபவர் செமிர் ஒஸ்மானஜிக். அந்த நம்பிக்கையை மறுகேள்வி இன்றி அப்படியே ஏற்றுக்கொண்டவர் ஜோகோவிச்.
ஆன்மிக ஆசிரியர்கள், ரெய்கி மருத்துவர்கள் போன்றவர்களை முக்கியமானவர்களாகவும் தன் வெற்றிக்குக் காரணமானவர்களாகவும் ஜோகோவிச் எப்போதும் கருதிவருகிறார். அவருக்கும், அவருடைய மனைவிக்கும், மனதைத் திறக்கவும், மனத்தினுள் உரையாடல்களை நிகழ்த்தவும் அவர்கள் எப்படி உதவினார்கள் என்று பல சந்தர்ப்பங்களில் விவரித்தும் இருக்கிறார்.
தனிப்பட்ட விருப்பத்தால் நேரும் ஆபத்து
டென்னிஸ் உலகில் ஜோகோவிச்சின் மகத்துவத்துக்கான பாதை, மாற்று மருத்துவம், ஆரோக்கிய குருக்களின் விநோத தாக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம். அவை அவருடைய தனிப்பட்ட விருப்பங்களாக, எவரையும் கவலைக்கு உள்ளாக்காததாகவே இருந்துவந்தன. ஆனால், இந்தப் பெருந்தொற்றுக் காலமும், அதன் பாதிப்புகளும், ஜோகோவிச்சின் நிலைப்பாட்டையும் அதன் ஆபத்தான விளைவுகளையும் வெட்டவெளிச்சமாக்கின. கடந்த டிசம்பரில், தனக்கு கரோனா தொற்று இருப்பது தெரிந்திருந்தும், அதை மறைத்து, முகக்கவசம் அணியாமல் இளம் டென்னிஸ் வீரர்களுக்கான ஒரு பொதுநிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கிறார். அதற்குப் பின்னர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் ஆஸ்திரேலியா சென்று, சட்டப் போராட்டமும் நடத்தியிருக்கிறார். ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, எப்படி ஒரு சமூகத்தின் பேரழிவுக்கு வித்திடும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?
அறிவியல் வேறு, நம்பிக்கை வேறு
அறிவியலும் நம்பிக்கையும் முற்றிலும் வெவ்வேறானவை. விருப்பு, வெறுப்பு, அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டெழுப்பப்படும் சித்தாந்தம் நம்பிக்கை. ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவப்படும் உண்மை அறிவியல். அறிவியலின் துணையுடன் நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தியே மனித இனம் தன்னை மேம்படுத்தி இருக்கிறது. பூமியை உருண்டை என்று நிறுவியுள்ளது. போலியோவையும் அம்மை நோயையும் உலகிலிருந்து ஒழித்துள்ளது. நம்பிக்கையின் பிடிப்பால் அறிவியலைக் கேள்விக்கு உட்படுத்துவதும், அதன் உண்மைகளை ஏற்க மறுப்பதும் நம்மைக் கீழ்நிலைக்கே இட்டுச் சென்றிருக்கின்றன என்பதே வரலாறு.
கரோனாவுக்கான தடுப்பூசி பயன்தரும் என்பது அறிவியல். பயன் தராது என்பது ஒருவித நம்பிக்கை. கரோனாவுக்கான தடுப்பூசியை இன்று எதிர்ப்பவர்களும், அதைப் போட மறுப்பவர்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதை மறுப்பது, அவர்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆபத்தில் தள்ளும் என்பதற்கு ஜோகோவிச் ஒரு சிறந்த உதாரணம். 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் இருக்கலாம். இருப்பினும், வரலாற்றில் மூடநம்பிக்கை நிறைந்த அறிவியல் மறுப்பாளர் என்றே அவர் நிலைபெறக்கூடும்!