சிறகை விரி உலகை அறி-34: குழந்தைகளுக்கான பூமி!

By சூ.ம.ஜெயசீலன்

உடைந்த பல்லையும் சொல்லையும் அழகாக்கும் குழந்தைகள், நம் கனவுலகைக் கலைத்து கலகலப்பாக்குகிறார்கள். பூக்களையும் பூச்சிகளையும் தோழிகளாக்கி இயற்கையின் இயல்புக்குள் நம்மை இழுத்துப் போகிறார்கள். ஐந்திணைகளின் உலகில் இன்பமுறச் செய்கிறார்கள். பூ, மரம், பறவை, விலங்கு, நீர், யாழ், பண், தெய்வம், மக்கள், ஊர், உணவு, தொழில், பறை எல்லாம் நிறைந்த உலகில் இக்குழந்தைகளுக்கான இடத்தையும் ஏதென்ஸ் உறுதி செய்திருக்கிறது.

ஹெலனிக் குழந்தைகளின் அருங்காட்சியகம்

ஓவிய அருங்காட்சியகம்

உணவுச் சுவையும், கற்பனை இசையும் காற்றில் கலந்து என்னைக் கலங்கடித்த வேளையில், கடைகளில் இருந்த வரலாற்று மாந்தர்களின் சிற்பங்கள் என் கண்களுக்குள் புன்னகைத்த பொழுதில் பிளாக்கா சாலையில் இருந்த, கிரேக்க குழந்தைகளின் ஓவிய அருங்காட்சியகம் (The Museum of Greek Children’s Art) என்னை வரவேற்றது. 5 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்காக 1994-ல் உருவாக்கப்பட்டது இந்த அருங்காட்சியகம். குழந்தைகளின் தனித்துவமான ஓவியத்தையும் கலை ஆர்வத்தையும் ஊக்கப்படுத்துவதும், அழகியல் கூருணர்வை செழுமையுறச் செய்வதும் இதன் நோக்கமாகும். ஒவ்வோர் ஆண்டும் அருங்காட்சியகம் நடத்தும் ஓவியப் பட்டறையில், சராசரியாக 1,300 குழந்தைகளும் ஓவிய வகுப்பில் 7 ஆயிரம் குழந்தைகளும் பங்கேற்கிறார்கள்.

இந்த அருங்காட்சியகத்தில், குழந்தைகள் உருவாக்கிய ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓவியங்களும், முப்பரிமாண படைப்புகளும் உள்ளன. மற்ற நாடுகள் அன்பளிப்பாக வழங்கிய சிறார் ஓவியங்களும் இருக்கின்றன. குழந்தைகளால் உருவாக்கப்பட்ட செறிவான ஓவியங்கள் வழியிலான கல்வி முறையை அருங்காட்சியகம் முன்மொழிகிறது. ஓவியங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் நன்மைகள் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

குழந்தைகளின் படைப்புத் திறன் மீது ஆர்வம் உள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவருக்குமான அற்புத இடமாக இது திகழ்கிறது. உள்ளூர் மற்றும் அயல்நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளுடனும் குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளவர்களுடனும் மாணவர்கள் தங்கள் திறமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக, கண்காட்சிகளை கிரேக்கத்திலும் மற்ற நாடுகளிலும் ஏற்பாடு செய்திருக்கிறது.

5 முதல் 12 வயது குழந்தைகள், வாரம் 2 மணி நேரம் சென்று தேர்ந்த ஓவியர்கள் வழியாக ஓவியத் திறமையை வளர்த்துக்கொள்ளவும் ஓவிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் அருங்காட்சியகத்தினர் உதவுகிறார்கள். தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓவிய கருத்தமர்வுகள் நடத்துகிறார்கள். அருங்காட்சியகக் கருவிகளை இரவல் கொடுக்கிறார்கள். 2005-ல், குழந்தைகள் ஓவியம் தொடர்பாக அறிவியல் மாநாடுகூட நடத்தியிருக்கிறார்கள்.

ஹெலனிக் குழந்தைகளின் அருங்காட்சியகம்

நான் உள்ளே நுழைந்தவுடனேயே, ‘குழந்தையாகிய நான், என் உலகம் மற்றும் என்னைச் சுற்றியுள்ள உலகம்’ (Me the child, my world, the world around me) எனும் வார்த்தைகளின் வரவேற்பில் சொக்கி நின்றேன். தனியாக அமர்ந்து ஓவியம் வரைகின்ற குழந்தைகள், மகளின் கை பிடித்து வரைய உதவி செய்யும் தந்தை, குழுவாகச் சேர்ந்து கலந்துரையாடி கலகலப்புடன் வரையும் குழந்தைகள், அவர்கள் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பரவசப்பட்டேன்.

ஹெலனிக் குழந்தைகளின் அருங்காட்சியகம் !

குழந்தைகளின் அருங்காட்சியகம்

அடுத்த வீதியிலேயே, ‘ஹெலனிக் குழந்தைகளின் அருங்காட்சியகம்’ (Hellenic Children’s Museum) எனும் பெயர்ப்பலகையைப் பார்த்தேன். ஹெலனிக் என்பதற்கு கிரேக்கர்கள் என்பது பொருள். அருகில் சென்றேன். அருங்காட்சியகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட குறிப்பை வாசித்தேன். ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் நடந்து, பெரும் எதிர்பார்ப்புடன் புதிய முகவரிக்குள் நுழைந்தேன்.

0-12 வயதினருக்கான இந்த அருங்காட்சியகம், ‘நான் கேட்கிறேன்… மறந்துவிடுகிறேன்; நான் பார்க்கிறேன்… நினைவில் வைத்திருக்கிறேன்; நான் செய்கிறேன்... புரிந்துகொள்கிறேன்’ என்னும் தத்துவத்துடனேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் - விளையாட்டுகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலமாக, தேட (Explore), ஆய்வு செய்ய (experiment), உருவாக்க (create) குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறது. ஒவ்வொருவரின் தனித்துவத்தை மதிப்பது குறித்தும், தனியாகவும் குழுச் செயல்பாடுகளின் வழியாகவும் தான் வாழப்போகும் உலகை வடிவமைப்பது குறித்தும் குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு குழந்தையும், தன் மீதான மரியாதையையும் சமூக பொறுப்புணர்வையும் வளர்த்துக் கொள்வதற்கு வழிகாட்டுகிறது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கல்வி சார்ந்த கருத்தரங்குகளையும், நிகழ்ச்சிகளையும் கிரேக்கம் முழுமைக்கும் நடத்த ‘நடமாடும் அருங்காட்சியகம்’ செயல்பாட்டில் உள்ளது.

புதுமையான அரங்குகள்

பெரும் எதிர்பார்ப்புடன் ஐவிரல் பதித்து கதவு திறந்தேன். நுழைந்தவுடனேயே, குழந்தைகளின் குரல்களில் மனம் ஒருமுகப்பட்டது. வெளியுலகச் சிந்தனையும் கவலையும் மறந்து, குழந்தைகளின் விளையாட்டு உலகில் சஞ்சரித்தது. குழந்தைகள் விளையாடுவதற்கும், செய்முறைகைளைச் செய்து பார்ப்பதற்கும் தேவையான இடைவெளியுடன் அமைத்திருப்பதையும், சுத்தமாகப் பராமரிப்பதையும் கண்டேன். 0-3 வயதினருக்கான விளையாட்டு அறை தனியாக உள்ளது. குழந்தைகளின் மீதான கிரேக்கர்களின் அக்கறை கண்டு வியந்தேன். கீழ்காணும் அரங்குகள் அங்கே இருக்கின்றன.

• ஹலோ பிதாகரஸ்: வடிவியல் குறித்து குழந்தைகள் புரிந்துகொள்ள உதவுகிறது.

• நான் கட்டுகிறேன், நான் உருவாக்குகிறேன்: வெவ்வேறு கட்டிடங்களைக் கட்டுவதற்குத் தேவையான பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.

• சந்தை: பொருட்கள் விற்பனை மற்றும் செயற்கையாக தேவை அதிகரிப்பது குறித்து கற்பிக்கிறது.

• சமையலறை: உணவு சமைப்பதற்கான பொருட்கள் குறித்த அறிவைப்பெற உதவுவதுடன், குழந்தைகள் சமைப்பதற்கான வாய்ப்பும் இங்கே இருக்கிறது.

• நாமும் அவர்களும் (The Us and the Them): வேற்றுமையில் ஒற்றுமை குறித்த புரிதல் தருகிறது.

• The ABC of nutrition, Bubbles, Discovering myself, How do I move? போன்ற தலைப்புகளும் உள்ளன.

ஹேட்ரியன் வளைவு, கிழக்கு திசையில்

வெற்றி நினைவுச் சின்னம்

குழந்தைகளின் உலகம் தந்த சிலிர்ப்புடன் ஹேட்ரியன் வளைவு (The arch of Hadrian) நோக்கிச் சென்றேன். ஏதென்சின் பழைய நகரம், புதிய நகரம் இரண்டையும் பிரிக்கும் இந்த வளைவு, வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பிரிக்கும் இந்திய வாயில் போன்றது. கோட்டைச் சுவருடன் இல்லை. அக்ரோபோலிஸ் குன்று மற்றும் ஒலிம்பியன் சேயுஸ் கடவுளின் கோயிலுக்கு இடையே அமைந்துள்ளது.

18 மீட்டர் உயரம், 12.5 மீட்டர் அகலம், 2.3 மீட்டர் தடிமனில் பென்டலிக் மார்பிளால் ஆன இந்த வளைவை கட்டியது யார் என்று தெரியவில்லை. ஆனாலும், கி.பி.131-ல் உரோமை பேரரசர் ஹேட்ரியன் படையெடுப்புக்குப் பிறகு கட்டப்பட்டுள்ளது உறுதி. வளைவின் இரண்டு பக்கமும் குறிப்புகள் உள்ளன. அக்ரோபோலிஸ் சாலையை நோக்கியுள்ள மேற்கு பக்கம், ‘இது ஏதென்ஸ். தீசியஸ் (Theseus)-ன் பழங்கால நகரம்’ என உள்ளது. அடுத்த பக்கம், கிழக்கே புதிய நகரின் சாலையை நோக்கி, ‘இது ஹேட்ரியனின் நகரம். தீசியஸின் நகரம் அல்ல’ என உள்ளது. 18-ம் நூற்றாண்டில், அல்பேனியனியர்களின் தாக்குதலில் இருந்து மக்களைக் காக்க நகரைக் சுற்றி துருக்கியர்கள் 6 வாயில்கள் அமைத்தார்கள்.7-வதாக இந்த வாயிலும் நகரைக் காத்துள்ளது. தற்போது, பரபரப்பான சாலையின் ஓரத்தில் சாதாரண சாலை வளைவுபோல் தோற்றமளிக்கிறது.

ஒலிம்பியன் சேயுஸ் கோயில்

ஹேட்ரியன் வளைவை ஒட்டி கிழக்கே ஒலிம்பியன் சேயுஸ் கோயில் இருந்தாலும், வளைவு வழியாகச் செல்ல முடியாது. சுற்றிச்சென்று வேறொரு வாயில் வழியாகவே நுழைய வேண்டும். பண்டைய கிரேக்கத்தின் இப்பெரிய கோயிலை கி.மு.515-ல் கட்டத் தொடங்கியவர் பெய்சிஸ்ட்ராடஸ் (Peisistratus). ஆனாலும், கி.பி. 2-ம் நூற்றாண்டில் உரோமையரான ஹேட்ரியன் ஆட்சி காலத்தில்தான், வேலை முடிந்து கடவுள் ஒலிம்பியன் சேயுசுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

96 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலமுடைய கோயிலில் 104 தூண்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு தூணும் 17.25 மீட்டர் உயரமும், 2 மீட்டர் சுற்றளவும் மிக்கவை. இதற்கான மார்பிள் பென்டலிக்கஸ் (Pentelicus) மலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகி, கோயிலின் 15 தூண்கள் மட்டுமே தற்போது நிற்கின்றன. சில தூண்கள் கீழே கிடக்கின்றன. உடைந்த தூண்களை ஒட்டும் பணியும் நடைபெறுகிறது. திமில் ஏறிய மாடு சரிந்து கிடப்பதுபோல கிடக்கும் கோயில் தூண்களைப் பார்க்கும்போதே, ஏதோ உணர்வு மனதை அரித்தது.

(பாதை நீளும்)

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவ கற்பனை!

மாணவரை இகழ்வது!

பாக்ஸ்

வேற்றுமையில் ஒற்றுமை

‘கிரேக்க குழந்தைகளின் ஓவிய அருங்காட்சியகம்’, ஓவியம் வழியாக குழந்தைகள் பன்மைத்துவத்தைக் கற்றுக்கொள்வதற்காக 2015-2016-ம் கல்வி ஆண்டில் ஓவிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தலைப்பு: ‘தனி ஆளாகவா அல்லது தனித்துவமாகவா? பன்முகத்தன்மை மற்றும் இனவெறி’ (Alone or Unique? Diversity and Racism). 3 முதல் 14 வயதுடைய குழந்தைகள் வரைந்த 114 ஓவியங்கள் மற்றும் முப்பரிமாணப் படங்கள் காட்சிக்கு வந்திருந்தன. என் பயணத்தின்போது, அப்படங்களைப் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருந்தது. அதோ, மாணவர்கள் இருவர், மற்றொரு மாணவரை கேலி செய்வதும், கேலிக்குள்ளானவர் துயரத்தில் அழுவதும் ஓவியமாகியுள்ளது. இதைப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையுமே தன்னை அதோடு கண்டிப்பாக இணைத்துப் பார்க்கும். வாழ்வின் அறம் கற்கும். அட, அந்தச் சுவரில் பாருங்களேன்! ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபட்ட கற்பனை உணர்வு உண்டு என்பதை, ஒரு குழந்தையின் எண்ணம் ஓவியம் செய்துள்ளது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE