எலான் மஸ்க்கின் பிரபல எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் இந்திய வருகைக்கு, மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாய் புகார்கள் எழுந்த சூழலில், பல்வேறு எதிர்க்கட்சி மாநிலங்களும் போட்டிபோட்டுக்கொண்டு டெஸ்லாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
உலக அளவில் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்கள் கவனம் ஈர்த்துவருகின்றன. மரபான எரிபொருளுக்கு மாற்றுவழி, விமானத்தின் ஆட்டோபைலட் வசதி என டெஸ்லா கார்கள் உலகமெங்கும் சாலைகளை தரிசித்து வருகின்றன. ஏராளமான வெளிநாட்டுக் கார்கள் விரைந்தோடும் இந்திய சாலைகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெஸ்லா கார்களுக்காக ஏங்கி வருகின்றன.
இந்தியர்கள் மீதும் இந்திய தொழில்முனைவோர் மீதும் கரிசனம் கொண்ட எலான் மஸ்கும், டெஸ்லாவின் இந்திய பிரவேசத்துக்காக தன்னாலான முயற்சிகளை செய்து பார்த்துவிட்டார். வெளிநாட்டு எலெட்க்ரிக் கார்களுக்கு எதிரான மத்திய அரசின் கூடுதல் வரி விதிப்பு டெஸ்லா கார்களுக்கு இமாலய வேகத்தடையானது. எதையும் ட்விட்டரில் பகிரங்கமாய் போட்டுடைக்கும் எலான் மஸ்க், இந்த விவகாரத்தையும் தனது இந்திய அபிமானிகளிடம் வெளிப்படையாக தெரிவித்தார். அது மட்டுமன்றி, செயற்கைக்கோள் வாயிலாக இந்திய கிராமங்களுக்கு கட்டற்ற இணைய இணைப்பு வழங்கும் எலான் மஸ்க்கின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டைகள் அதிகம். இவை தொடர்பான பொதுஜனத்தின் வாத விவாதங்கள், சமூக ஊடக வெளியில் அவ்வப்போது எழுந்து அடங்குவது உண்டு.
அந்த வகையில் மற்றுமொருமுறை, டெஸ்லாவுக்கு இந்தியாவின் நிராகரிப்பு வெளிப்படையாக நிரூபணமானது. ஆனால், இம்முறை சாமானிய இந்தியர்கள் மட்டுமன்றி மத்திய அரசே எதிர்பாராதவை நடந்தன. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் இருந்து, மக்கள் பிரதிநிதிகள் பலரும் 'எங்க மாநிலத்துக்கு வாங்க’ என ட்விட்டர் வாயிலாகவே எலான் மஸ்கை வரவேற்க ஆரம்பித்தனர். வேலைக்கு ஆளெடுப்பது முதல் நிறுவனத்தின் பங்கு விவகாரம் வரை வெளிப்படையாக ட்விட்டரிலேயே விவாதம் நடத்தும் வழக்குமுடைய எலான் மஸ்க், இந்த எதிர்பாரா அழைப்புகளில் திணறிப்போயுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, மகாராஷ்டிரா அமைச்சர் ஜெயந்த் பாடீல், தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ், மேற்குவங்க அமைச்சர் குலாம் ரப்பானி என பல மாநிலங்கள் சார்பில், எலான் மஸ்குக்கு பகிரங்க வரவேற்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்கள் மாநிலத்தின் சிறப்புகள், ஏற்கெனவே இருக்கும் வசதிகள், ஆளும் அரசின் ஒத்துழைப்புகள் ஆகியவற்றை நறுக்கு தெறித்தார் போன்று பதிவிட்டு, அதில் எலான் மஸ்குக்கான அழைப்பையும் சேர்த்துள்ளனர். இந்த வரிசையில், தமிழகம் சார்பில் மன்னார்குடி எம்எல்ஏவும், சமூக ஊடகங்களில் அதிகம் களமாடுபவருமான டிஆர்பி ராஜா சேர்ந்துள்ளார். இந்தியாவின் டெட்ராய்டான தமிழகத்துக்கு வாருங்கள் என்ற ராஜாவின் ட்விட், திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கார் தொழிற்சாலை அமைப்பதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்றபோதும், மத்திய அரசு மற்றும் அதனது வரி விதிப்புக்கு அப்பால் கார் நிறுவனங்களால் முடிவெடுக்க இயலாது என்பதே நிதர்சனம். இதனிடையே மாநிலங்கள் குறுக்குசால் ஓட்டுவதை அடுத்து, தர்மசங்கடம் அடைந்திருக்கும் மத்திய அரசு இறங்கி வரவும் வாய்ப்பிருக்கிறது. சமூக ஊடகம் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக, பாஜக அரசியல் பிரபலங்கள் ஏற்கெனவே எலான் மஸ்க் மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்தச் சூழலில் எலான் மஸ்க் எதிர்பார்த்தது இந்தியாவில் நடந்து வருவதைப் பார்க்கும்போது, இந்தியாவில் அவர் கார் தொழிற்சாலை அமைப்பதைவிட அரசியல் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார் என்றெல்லாம் பாஜகவினர் புலம்பத் தொடங்கி உள்ளனர்.