நினைவுப் பொக்கிஷங்களை மீட்டுக் கொடுக்கும் செல்சி!

By சுஜாதா எஸ்

அடுத்தவர்கள் பொருட்களை எப்படியெல்லாம் அபகரிக்கலாம் என சிந்திப்பவர்கள் நிறைந்த இந்த உலகத்தில், செல்சி ப்ரௌன் முற்றிலும் வித்தியாசமாய் தெரிகிறார்.

கொஞ்சம் நல்லவராக இருந்தால் யாரோ தொலைத்த பொருட்களை நாம் எடுக்க நேர்ந்தால், உரிமையாளரின் முகவரிக்கு அனுப்பிவிடுவோம். முகவரி இல்லையென்றால் காவல் துறையில் ஒப்படைத்துவிடுவோம். ஆனால், செல்சி ப்ரெளன் அதற்கும் ஒருபடி மேல். தொலைந்துபோன, பழைய பொருட்களை இவரே தேடிச் செல்கிறார். விலை கொடுத்து அவற்றை வாங்குகிறார். பின்னர் அந்தப் பொருளுக்கு உரியவரைக் கண்டுபிடித்து, ஒப்படைத்துவிடுகிறார்!

மிகவும் வித்தியாசமான, சுவாரசியமான இந்தப் பொழுதுபோக்கு செல்சிக்கு அவரது தந்தையின் மூலம் அறிமுகமானது. இருவருக்கும் மனிதர்களின் வேர்களைத் தேடிச் செல்வதில் நாட்டம் அதிகம். இதற்கான பயிற்சிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார்கள். அதை வைத்து, செல்சி செய்துவரும் பணிகள் பலரை மகிழ்ச்சியில் திளைக்கவைத்திருக்கின்றன.

ஒரு டாலர், ஒரு கடிதம்

அமெரிக்காவில் இன்டீரியர் டிசைனராக இருக்கும் செல்சி, கடந்த ஆண்டு பழைய பொருட்கள் விற்கும் கடையில் கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தைக் கண்டார். ஒரு டாலருக்கு அந்தக் கடிதத்தை வாங்கியவர், அக்கடிதத்தின் உரிமையாளரிடம் அதைச் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து, செயலில் இறங்கினார். என்ன ஆச்சரியம்... அரை மணி நேரத்துக்குள் செல்சியால் அந்தக் கடிதத்துக்குச் சொந்தக்காரரின் முகவரிக்குச் செல்ல முடிந்தது. நீண்ட காலத்துக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் கடிதம் மீண்டும் தன் கைக்குக் கிடைத்ததில் உரிமையாளருக்கு ஏக மகிழ்ச்சி. அந்தக் கடிதத்தை விலைக்கு வாங்கி, வீடு தேடிவந்து கொடுத்த செல்சியை நினைத்து அவருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

யாரோ ஒருவருடைய மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தாம் தன்னை இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது என்று சொல்லும் செல்சி, 2019-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவம் தான் தனக்குள் இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது என்கிறார்.

கல்லறையில் தொடங்கிய சேவை

செல்சியும் அவர் தந்தையும் நியூயார்க்கில் இருக்கும் தாத்தா - பாட்டி கல்லறைகளுக்கு மரியாதை செலுத்தச் செல்வது வழக்கம். அப்படி ஒருமுறை இருவரும் சென்றபோது தாத்தா - பாட்டி கல்லறைகளுக்கு அருகே இன்னொரு கல்லறை கேட்பாரற்றுக் கிடந்தது. 1938-ம் ஆண்டு புதைக்கப்பட்ட ஒரு சிறுமியின் கல்லறை அது. அதிலிருந்த வெகுசில தகவல்களை வைத்துக்கொண்டு, உறவினர்களைத் தேட ஆரம்பித்தார் செல்சி. நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஓர் உறவினரின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அந்த முகவரிக்கு கல்லறை பற்றிய விவரங்களை அனுப்பி வைத்தார் செல்சி.

எதிர்பார்த்தபடியே பதில் கடிதமும் கிடைத்தது. “நீண்ட காலமாகவே என் அத்தையின் கல்லறை இருக்கும் இடம் தெரியாமல் தவித்தோம். இனி கல்லறைக்கு அடிக்கடி செல்வோம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை” என்று செல்சிக்கு அனுப்பிய மின்னஞ்சலில், அந்த நபர் நெகிழ்ச்சியுடன் எழுதியிருந்தார்.

அந்த வாழ்த்தட்டை...

இந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகுதான், இனி இதுபோன்ற பழைய அல்லது தொலைந்துபோன பொருட்களை வாங்கி, உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார் செல்சி. வார இறுதி நாட்களை தொலைந்துபோன பொருட்களைத் தேடித் தேடி வாங்குவதற்காகவே ஒதுக்குகிறார். இதற்காக வாரம் தோறும் ஒரு டாலரிலிருந்து 5 டாலர்கள் வரை செலவு செய்யவும் தயங்க மாட்டார். வாங்கிய பொருட்களை உரிமையாளர்களிடம் சேர்க்க மேலும் 3 டாலர்களாவது செலவாகும். ஆனால், “செலவு செய்வதைவிடப் பலமடங்கு திருப்தியைப் பெற்றுவிடுவதால், செலவு குறித்து நான் கவலைப்படுவதில்லை” என்கிறார், செல்சி.

கடந்தகால காதல் வாழ்த்து

1960-ம் ஆண்டில் ஒரு பெண் தன் கணவருக்கு அனுப்பிய வாலன்டைன்’ஸ் டே கார்டை, அந்தப் பெண்ணின் பேத்திக்கு சமீபத்தில் அனுப்பி வைத்தார் செல்சி. பாட்டியின் காதலர் தின வாழ்த்து அட்டையைக் கண்டு மகிழ்ந்த அந்தப் பேத்தி, அதைத் தன் பாட்டிக்கே அனுப்பி வைத்தார். உறவினர்கள் அல்லாது, உரிமையாளரிடமே சேர்த்த இந்த வாலன்டைன்’ஸ் டே கார்டு தனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது என்கிறார் செல்சி.

அதேபோல் 2-ம் உலகப் போரின்போது, ஹான்ஸ் வைட்ஸ்டாக் குடும்பத்தினர் பயன்படுத்திய ரேஷன் புத்தகத்தை அவர்களிடம் சேர்த்தபோது, நன்றி சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகளே இல்லை. மீண்டும் அந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டதாக நெகிழ்ந்தார்கள்.

இப்படிப் பழைய, தொலைந்துபோன பொருட்களை உரியவர்களிடம் சேர்ப்பது நல்லதுதான். எனினும், இவற்றில் யாராவது விரும்பாத, மறக்க நினைக்கிற விஷயங்களும் இருந்தால், அது சங்கடத்தை ஏற்படுத்தாதா என்றால், இல்லை என்கிறார் செல்சி. “40, 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவை எல்லாம் பொருட்கள் அல்ல, பொக்கிஷங்கள் என்பதால் பிரச்சினை வராது” என்கிறார். குறுகிய காலத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொருட்களை, உரியவர்களிடம் சேர்த்திருக்கிறார். இவர்களில் ஒருவர்கூட அதிருப்தி தெரிவிக்கவில்லை என்பதும் அவர்களில் பலரும் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகளை செல்சிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமானது.

மனித வாழ்க்கை மர்மம் நிறைந்தது. என்றோ நடந்த சம்பவங்கள் பல ஆண்டுகள் கழித்து உயிர்பெற்று, சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அவர்களின் சந்ததியினரை அடையும்போது, அங்கே ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது! அதைச் சாத்தியமாக்கும் பணியில் தன் பங்கு இருப்பதை நினைத்தால் நிறைவாக இருக்கிறது என்கிறார் செல்சி ப்ரெளன்.

“உங்களுக்குப் பிரதியுபகாரம் செய்யவே முடியாத அளவுக்கு யாரேனும் ஒருவருக்கு நீங்கள் உதவியிருந்தால்தான் நீங்கள் வாழ்ந்ததற்கான நிஜமான அர்த்தம் கிடைக்கும்” என்பது பிரிட்டன் எழுத்தாளர் ஜான் பன்யனின் கூற்று. அதை நிஜமாக்கிக்கொண்டிருக்கிறார் செல்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE