கட்டுத்தாரை தொடங்கி களமிறங்கும் வரை...; 'ரேக்ளா'வுக்கு காளைகள் தயாராவது எப்படி?

By க.சக்திவேல்

ரேக்ளா போட்டிகள் நடக்கும் விதம் குறித்து நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும், அதற்கான காளைகள் வளர்ப்பு முறை, பராமரிப்பு, போட்டிக்கான யுக்திகள், உரிமையாளர்கள் காளைகள் மேல் கொண்டிருக்கும் பாசத்தை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவைகுறித்து 27 ஆண்டு கால ரேக்ளா போட்டி அனுபவம் கொண்ட கோவை நவக்கரை, மாவுத்தம்பதி ஊராட்சியைச் சேர்ந்த என்.கோபால்சாமி விவரிக்கிறார்.

பெரும்பாலும் ஒரே இடத்தில் வளர்க்கப்படும் ஜோடி காளைகள், ரேக்ளா போட்டியில் ஒன்றாகப் பங்கேற்பதில்லை. இருவேறு இடங்களில் வளர்க்கும் காளைகளை ஒரே ரேக்ளா வண்டியில் பூட்டி, போட்டிகளில் பங்கேற்கச் செய்கின்றனர். இகுறித்து கோபால்சாமி கூறும்போது, “புதிதாகப் பயிற்சி அளிக்கும்போது மட்டுமே, ஒரே இடத்தில் ஜோடியாக வளரும் காளைகளை ஒன்றாகப் பயன்படுத்துவோம். பெரும்பாலும் போட்டிக்கு அவற்றை ஜோடியாகப் பயன்படுத்த மாட்டோம். ஏனெனில், ஒரே இடத்தில் ஒன்றாகச் சாப்பிட்டு வளர்வதால், வேகமாக செல்லும்போது ஒரு காளை ஓட்டத்தைக் குறைத்தால், இன்னொன்றும் அதற்கேற்ப அனுசரித்து வேகத்தை குறைத்துக்கொள்ளும். ஆனால், தெரியாத காளையுடன் வண்டியில் இணைத்து ஓட்டும்போது, இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு முந்திச்செல்ல முயலும். இதனால், போட்டி தூரத்தை கடக்கும் நேரத்தில் வரும் வித்தியாசத்தை கண்கூடாகப் பார்க்கலாம்.

எந்தக் காளையுடன் எதைச் சேர்த்து ஓட்டினால் நேரம் குறையும் என்பதைக் கணக்கிட்டு, அவற்றை ஒரே வண்டியில் பூட்டி போட்டிகளில் பங்கேற்கச் செய்வோம். ஒருவேளை அந்தக் காளைகள் போட்டியில் பரிசு வென்றால் பரிசுத்தொகையை பகிர்ந்துகொள்வோம். காளை ஒருமுறை பரிசு வென்றுவிட்டால், போட்டி தவிர்த்து மற்ற நேரங்களில் அந்தக் காளையை சாலைகளில் ஓட்ட பயன்படுத்தமாட்டோம்” என்றார்.

ரேக்ளா போட்டிக்கான வண்டியின் அமைப்பு

மாதம் ரூ.20 ஆயிரம் செலவு

நல்ல காங்கேயம் காளைக்கன்று குறைந்தபட்சம் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் விலையில் கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை காளைக்கன்றுகள் கிடைக்கின்றன. தீவனம், பராமரிப்பு செலவு என ஒரு நாளைக்கு, ஒரு காளைக்கு குறைந்தபட்சம் ரூ.400 வரை செலவு செய்கின்றனர். “இரண்டு காளைகள் இருந்தால் குறைந்தபட்சம் மாதம் ரூ.20 ஆயிரம் செலவாகிறது. இருப்பினும்,குழந்தைகள் எதைக்கேட்டு வாங்கித்தருகிறோமோ இல்லையோ, காளைகளுக்கு எந்தக் குறையும் வைக்கமாட்டோம். அவை சாப்பிடாவிட்டால்தான் எங்களுக்கு வருத்தமாக இருக்கும்” என்கிறார் கோபால்சாமி.

காளைகளை கட்டிவைத்துப் பராமரிக்கும் மாட்டு கட்டுத்தாரை, சிமென்ட் கொண்டு அமைக்கப்படுவில்லை. கான்கிரீட் தரையில் காளைகள் இருந்தால் கால்வலி ஏற்பட்டுவிடும். கால் லாடம் விரைவாகத் தேய்ந்துவிடும் என்பதால், கட்டுத்தாரையில் மணலை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து காளை வளர்ப்போர் கூறும்போது, “மணல்பரப்பில் இருக்கும்போது காளையின் கால், மூட்டு, உடம்பில் புண் ஏற்படாது. அதேபோல, மழைபெய்தால் காளைகளை மழையில் நனையவிடமாட்டோம். கொங்க மழைபெய்யும்போது மட்டும் ஒருமணி நேரம், இரண்டுமணி நேரம் வெளியில் கட்டிவைப்போம். அந்த மழையில்நனையும்போது காளையின் உடல்சூடு தணிந்துவிடும். காளையின் சிறுநீரகத்தை ஆங்கில மருந்துகள், ஊசிகள் பாதிக்கும் என்பதால், உடல்நலக்கோளாறுகள் ஏற்படும்போது பெரும்பாலும் நாட்டுமருந்துகளையே அளிக்கிறோம்” என்றனர்.

காளைக்கு அளிக்கப்படும் நீச்சல் பயிற்சி

மீண்டும் உயிர்பெறும் ஏர்கலப்பைகள்

காளைகளின் பராமரிப்புக்கு தினமும் செலவிடும் நேரத்தைத் தவிர்க்கவும், விரைவாக உழவு ஓட்டவும் விவசாயிகள் பலர் டிராக்டருக்கு மாறிவிட்டனர். ஆனால், ரேக்ளா காளைகளை வளர்க்கும் விவசாயிகள், கன்றுகளுக்கு ஒன்றைரை வயது தொடங்கும்போதே, ஏர்கலைப்பையில் பூட்டி நிலத்தை உழுது உடற்பயிற்சி அளிக்க தொடங்கிவிடுகின்றனர். “ஏர்கலப்பையில் உழவு ஓட்டும்போது மண்புழு அதிகமாகும். மண் இறுகாது. மண்ணின் அடியில் 20 நாட்கள் வரை ஈரம் இருந்துகொண்டே இருக்கும். இதையே டிராக்டர் கொண்டு உழவு ஓட்டும்போது, அடி மண் இறுகிவிடும். மூன்றே நாட்களில் மண் காய்ந்துவிடும். பழையபடி விவசாயிகளுக்கு அதிகவிளைச்சல் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம்” என்கின்றனர் விவசாயிகள். காளைகளின் உடல் வலுவாக, வாரத்தில் 2 நாட்கள் கட்டாயம் நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

வண்டிக்கு பெயர்பெற்ற சர்க்கார்புதூர்

காளைகளிடம் வேகம் இருந்தால் மட்டும் போதாது. வண்டியின் அமைப்பும் சரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பந்தய தூரத்தைக் கடக்கும் நேரம் அதிகமாகும். ரேக்ளாவுக்கு பயன்படுத்தப்படும் தேக்கு மரத்தாலான புதிய வண்டி, சுமார் ரூ.1.25 லட்சம் விலை வருகிறது. ரேக்ளா வண்டிகள் தயாரிப்புக்கு பெயர்போனது திருப்பூர், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சர்க்கார்புதூர். இங்கு நுட்பமான வடிவமைப்பு, தரத்துடன் தயாரிக்கப்படும் வண்டிகளே பெரும்பாலும் ரேக்ளாவில் களமிறங்குகின்றன. எந்த அளவுக்கு வண்டியின் எடை குறைவாக உள்ளதோ அதற்கேற்ப வேகம் இருக்கும் என்பதால், வண்டியை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

முதல் 25 இடங்களுக்கு தனி மரியாதை

200 மீட்டர் போட்டி தூரத்தை 15.84 விநாடிகளிலும், 300 மீட்டர் பிரிவில் பந்தய தூரத்தை 23.48 விநாடிகளிலும் காளைகள் கடந்தது, கோவை சுற்றுவட்டாரத்தில் சாதனையாக உள்ளது. போட்டி தூரத்தை கடக்கும் நேரத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக முதல் 25 இடங்களில் இருந்துவரும் காளைகள், போட்டிகளில் எங்கு பங்கேற்கச் சென்றாலும் அவற்றுக்கென தனி வரிசை அளிக்கின்றனர். 300 ஜோடி காளைகள் போட்டியில் பங்கேற்க வந்தாலும், முதல் 25 இடங்களைப் பிடித்த காளைகள் பங்கேற்ற பிறகே, மற்ற காளைகள் போட்டியில் பங்கேற்க முடியும் என்றனர் ரேக்ளா போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE