‘பாக்கியலட்சுமி’ சீரியல் இயக்குநர் மீது புகார்

By ரஜினி

சென்னை, பட்டாபிராம் ஏகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது கவுஸ், சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘கடந்த சில மாதங்களாக, பிரபல தனியார்(விஜய்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி ஒருவர், தற்கொலை செய்து கொள்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழக அரசு தனிப்பட்ட தொலைபேசி எண்களை வழங்கி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை புகார்களை உடனடியாக தெரிவிக்க வலியுறுத்தி வருகிறது. வன்கொடுமைக்கு எதிராகச் செயல்படும் நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழலில், இந்த பாக்கியலட்சுமி தொடரில், மாணவி தற்கொலை செய்து கொள்வதுபோல் காட்சிப்படுத்துவது கண்டனத்துக்குரியது.

‘பாலியல் சீண்டல்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகும் பெண்களை கைவிட மாட்டோம்’ என்ற தமிழக முதல்வரின் பிரச்சாரத்துக்கு எதிராக உள்ளது, இந்தக் காட்சி. இதுபோன்ற காட்சிகள் மாணவிகளிடம் உள்ள தன்னம்பிக்கையை உடைத்து தற்கொலைக்குத் தூண்டும் வகையில் அமைகின்றன.

புகார் மனு

எனவே, இதுபோன்ற காட்சிகளை உடனடியாக நீக்கி, தனியார் தொலைக்காட்சி மற்றும் பாக்கியலட்சுமி தொடர் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக டிராய் மற்றும் ஒன்றிய ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் முகமதுகவுஸ் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE