உங்களுக்குப் பூ வாசம் பிடிக்குமா? மல்லி, சாமந்தி, ரோஜா, டிசம்பர், கனகாம்பரம், தாழம்பூ என ஒவ்வொரு பூவின் தனித்துவ வாசம் தத்துவம் பேசும். பூக்களின் கலவையால் கவிபாடும் கதம்ப மலர்கள் மனம் ஒருமுகம் சுட்டும். அப்படித்தான், அக்ரோபோலிஸ் (Acropolis) குன்று, தனித்தனியாகவும், மொத்தமாகவும் அறிவு வாசம் அள்ளித் தெளிக்கிறது. விழிக்குள் உறங்கிய இரவை வெளியேற்றி காலையில் எழுந்தேன். நகரம் இன்னும் இரவின் மடியில் உறங்கிக்கிடந்தது.
பட்டாம்பூச்சியின் வண்ணங்களை விரட்டும் சிறுவர்களின் துள்ளலோடு புறப்பட்டேன். சிறிதும் பெரிதுமான சாலைகளைக் கடந்தேன். குன்றில் அமைந்துள்ள பல்வேறு பாதைகள் ஒத்தடையடி பாதை போன்றே இருந்ததால். வழி தெரியாது திகைத்தேன். எனக்கு முன்னே, ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் மகிழ்வில் பூத்த கன்னங்களுடன் பாறைகளைத் தொட்டுத் தடவிப் படியேறினார்கள். குன்றுக்குச் செல்லும் அவர்களை சிறிய பாதை, படிகள், வளைவுகள் அனைத்திலும் பின்தொடர்ந்தேன். ஒரு வளைவில் அவர்கள் நின்றார்கள். என்னைப் பார்த்தார்கள். அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்பதை நான் உணர்ந்தேன். தொடர்ந்து செல்வதுபோல் சென்றுவிட்டு, வேறு பாதையில் நடந்தேன்.
அங்கே சிலர் பலகையால் மேடை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அருகில் சென்றேன். காரணம் கேட்டேன். “மாலையில் புனித பவுல்-புனித பேதுரு திருவிழா நடக்கிறது” என்றார்கள். அருகில் இருந்த குன்றின் மீது சுற்றுலாப் பயணிகள் ஏறியதால் நானும் ஏறினேன். அக்குன்றின் பெயர் ‘அரயோப்பாகு’ (Areopagus). கற்குவியலாகக் கிடந்த அரயோப்பாகு குன்று பற்றிய கதை கிரேக்க பாடப்புத்தகத்தில் இருக்கிறது.
சட்டமும் தண்டனையும்
அரசர் காட்ரஸின் மரணத்துக்குப் பிறகு ஒருவரையும் அரசர் என அழைக்க விரும்பாத ஏதென்ஸ் மக்கள், காட்ரஸின் மகனை ஆர்க்கனாக நியமித்து மகிழ்ந்தார்கள். மகனுக்குப் பிறகு, தங்களை வழிநடத்தும் 9 ஆர்க்கன் கொண்ட குழுவை வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்கள். குழுவின் பதவிக்காலம் ஓராண்டு. ஊதியம் ஏதுமில்லை. இதனால், செல்வந்தர்கள், உயர்குடியினர் (Aristocrats) பொறுப்புக்கு வந்து, திறம்படச் செயல்பட்டார்கள். காலப்போக்கில், இவர்களால் ஏழைகள், விவசாயிகள், மற்றும் அடிமைகள் துன்புற்றார்கள். மக்களுக்கு நல்லாட்சி வழங்க கி.மு. 602-ல் ட்ராகோ (Draco) எனும் ஆர்க்கன் புதிய சட்டங்களை இயற்றினார். மிகவும் கடுமையான அச்சட்டம், முட்டைக்கோஸ் திருடினால்கூட மரண தண்டனை விதித்தது. மக்கள் குமுறினர். “மையால் எழுதப்படுவதற்குப் பதிலாக ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது” என வெகுண்டனர். ட்ராகோவை உதைத்து விரட்டினர்.
சட்டங்கள் இல்லாத சமூகத்தில் கலவரங்களுக்கு வாட்கள் முளைத்தன. விழிகளுக்குள் திருட்டுப் பார்வை புகுந்தன. அமைதி தேடும் உள்ளங்கள் அதிகரித்தன. அதன்பிறகு, சோலோன் (Solon) ஆர்க்கனாகத் தேர்வு செய்யப்பட்டார். நிறைய பயணங்கள் சென்று ஞானியாக திகழ்ந்த சோலோன், சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவந்தார். இச்சட்டத் தொகுப்பு, ஏழைகளுக்கும், அடிமைகளுக்கும், விவசாயிகளுக்கும் மரியாதை செய்தது. இவர்தான், அரயோப்பாகு எனும் நீதி அவையை ஏற்படுத்தினார். கொலை, மத துவேசம் மற்றும் கலவரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு அரயோப்பாகு மன்ற உறுப்பினர்கள் இத்திறந்தவெளிக் குன்றில் விசாரணை செய்தார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர், தன் தரப்பு வாதத்தை சொல்லும் முறை, முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. பாரபட்சமின்றி விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காக, வெளிச்சம் இன்றி இரவில் நடந்தது விசாரணை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகாலையில் தங்கக் குதிரையில் உலாப் போகும் சூரியக் கடவுளைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இரவோடு இரவாக தண்டனை வழங்கப்பட்டது.
அரயோப்பாகு குன்றில் மத வழிபாடுகளுக்கென பல்வேறு பீடங்கள் இருந்துள்ளன. அவற்றுள் ஒன்று, தண்டனை வழங்கும், பழிவாங்கும் பாதாள தேவதை எரினிஸ் (Erinyes) பீடம். குன்றின் வடகிழக்கே பள்ளத்துக்குள் இப்பீடம் இருந்திருக்கலாம் எனும் தகவலை வாசித்தபோது, கிறிஸ்த மறைத்தூதுவர் புனித பவுல் என் நினைவுக்கு வந்தார்.
துன்புறுத்தியவர் தூதுவரானார்
உரோமை ஆட்சிக்கு உட்பட்ட சிசிலியாவின் தர்சு எனும் கிரேக்க நகரத்தில் பிறந்தவர் சவுல். உரோமின் குடிமகனான இவர், எருசலேமில் புகழ்மிக்க திருச்சட்ட ஆசிரியர் கமாலியேலிடம் யூத சட்டங்களைப் பயின்றார். கிரேக்கம் பேசினாலும், கிரேக்க நூல்களைக் கற்றிருந்தாலும் கிரேக்க உவமைகளைத் தன் எழுத்துகளில் பயன்படுத்தினாலும், யூதன் என்கிற மத அடையாளமே அவரிடம் மேலோங்கி இருந்தது. எனவே, கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தினார். எண்ணற்றோரைக் கொன்றார். திடீரென மனமாற்றம். தமஸ்கு சாலையில் இயேசு தன்னைத் தடுத்தாட்கொண்டதால் மனம் மாறியதாக அவரே குறிப்பிடுகிறார். அதன் பிறகு ‘பவுல்’ என அழைக்கப்பட்டார். இயேசுவைக் குறித்து அறிவிப்பதையே வாழ்வாகக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை யூதர் அல்லாத மக்களுக்கு அறிவித்ததில் பெரும்பங்கு பவுலையேச் சாரும்.
ஏதென்ஸ் சென்ற பவுல், சந்தைவெளிகளில் இயேசுவின் போதனைகளைப் பரப்பினார். ‘தெய்வங்களைச் சரியாக வழிபட வேண்டும், இல்லாவிட்டால் அவர்களின் சாபம் நம்மை அழித்துவிடும்’ என பயந்த கிரேக்கர்கள், எண்ணற்ற பலிபீடங்கள் அமைத்து வழிபட்டதைக் கண்டார். கிரேக்கர்களைச் சாடினார். எனவே, அரயோப்பாகு வந்து பேசுமாறு சிலர் பவுலை அழைத்தார்கள். கைது செய்து அழைத்துச் சென்றார்களா என்கிற தகவல் ஏதும் இல்லை. போகும் வழியில் தான் பார்த்ததை வைத்தே தன் பேச்சைத் தொடங்கினார். “நான் வரும் வழியில், ‘அறியாத தெய்வத்துக்கு’ (To an unknown God) என ஒரு பீடம் இருந்தது. நீங்கள் அறியாத தெய்வத்தைப் பற்றி பேசப் போகிறேன். அவர் பெயர் இயேசு” (திருத்தூதர் பணி 17:22-31) என்று ஆரம்பித்தார். விவிலியத்தில் என் ரசனைக்குரிய பகுதிகளுள் ஒன்று அது. கிடைத்த வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திய கில்லாடி அவர். அந்தக் குன்றில் ஒரு சிலுவை நிறுவியுள்ளார்கள். படம் எடுத்தேன். அங்கிருந்து, அக்ரோபோலிஸ் குன்றுக்கு நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடத்துக்குச் சென்றேன்.
அக்ரோபோலிஸ்
உயரமான இடத்தில் அல்லது குன்றின் மீது கட்டப்பட்டுள்ள நகரத்துக்கு ‘அக்ரோபோலிஸ்’ என்பது பொருள். கிரேக்க வார்த்தையில் அக்ரோ (Acro) என்றால் முனை, போலிஸ் (Polis) என்றால் நகரம். ஆனால் பொதுவாக, அக்ரோபோலிஸ் என்றதும் ஏதென்ஸில் இருப்பதையே அது குறிக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 156 மீட்டர் உயரத்தில் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடுகள் மற்றும் வீடுகளின் எச்சங்களும், ஏதென்னா கோவிலின் அருகே கிடைத்துள்ள தொடக்க மற்றும் மத்திய வெண்கல காலத்தின் பொருட்களும் கி.மு. 5000 முதல் மக்கள் இப்பகுதியில் இருந்ததைச் சொல்கிறது.
மனைவிக்கொரு ரெஜிமஹால்
இணையத்தில் ஏற்கெனவே வாங்கியிருந்த நுழைவுச்சீட்டைச் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தேன். பல்வேறு குழுக்கள் வழிகாட்டியுடன் சென்றதைப் பார்த்து, ஆங்கிலம் பேசிய ஒரு குழுவுடன் மெல்ல நடந்துகொண்டே கவனித்தேன்.
முதல் இடம், அக்ரோபோலிஸ் குன்றின் தென் மேற்கே அமைந்துள்ள ஹெரோடியஸ் அடிகஸ் தியேட்டர் (Odeon of Herodes Atticus). ஏதென்ஸின் புகழ்மிக்க பேச்சாளரும் கொடையாளருமான ஹெரோடியஸ் அடிகஸ், தன் மனைவி ரெஜிலாவின் (Rhegilla) நினைவாக கி.பி. 161-ல் கட்டிய அரங்கம் இது.
“எல்லா காலத்திலுமே, மனைவிகளுக்காகக் கணவர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள்” என வழிகாட்டி சொன்னதும், மற்ற பயணிகளுடன் சேர்ந்து நானும் சிரித்தேன். என்னைப் பார்த்த வழிகாட்டி, “இது தனிப்பட்ட குழு. நீங்கள் இங்கு நிற்காதீர்கள்” என்றார். சிரிச்சது ஒரு குத்தமானு நம்ம வைகைப் புயலை நினைத்தபடியே நகர்ந்தேன்.
இந்த அரங்கில், பாறையைச் செதுக்கி அரைவட்ட வடிவில், கீழிருந்து மேல் படிப்படியாக 39 வரிசை மார்பிள் இருக்கை அமைத்தார்கள். கூரை செடார் மரத்திலானது. ஏறக்குறைய 6,000 பார்வையாளர்கள் அமரலாம். இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. தத்துவ உரைகள் நிகழ்ந்தன. கி.பி.267-ல், போர் நடந்தபோது எரியூட்டப்பட்ட இந்த அரங்கைப் பலமுறை புனரமைத்தார்கள். இப்போதும், கூரை இல்லாத அரங்கில், சிதிலமான மேடையில் நாடகம் அரங்கேறுகிறது. இசைச் சங்கமம் களைகட்டுகிறது. அங்கிருந்து நடந்தால், கி.பி. 3-ம் நூற்றாண்டு பியூல் வாயில் (Beule gate) வனப்போடு வரவேற்கிறது.
(பாதை நீளும்)
பெட்டிச் செய்தி
நுழைவுச் சீட்டு பெறும் முறை
அக்ரோபோலிஸ் உள்ளிட்ட இடங்களைப் பார்க்க www.etickets.tap.gr இணையதளத்தில் முன்பதிவு செய்வது நல்லது. ‘எந்தப் பகுதியைப் பார்க்க விரும்புகிறீர்கள்?’ என்கிற கேள்விக்கு Attica என்பதையும், எந்த இடம் என்பதற்கு, ‘அக்ரோபோலிஸ்’ என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். நாள், நேரம் தேர்வு செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில், Single-use or combined என இருக்கும். combined தேர்வு செய்தால், 7 இடங்களை ஒவ்வொருமுறை சென்று, 5 நாட்களில் பார்க்கலாம். பணம் மிச்சம். Single-use என்றால், குறிப்பிட்ட நாளில் ஒருமுறை, ஓரிடம் மட்டும் போகலாம்.
மின்னஞ்சலில் நுழைவுச்சீட்டு அனுப்புவார்கள். முதல் இடத்தைப் பார்க்கும்போது, அங்குள்ள அலுவலகத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். மாணவர்களுக்குச் சலுகை உண்டு. குறிப்பாக, ஐரோப்பிய பயணத்தின்போது மாணவர் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது நல்லது. பெரும்பாலும் எல்லா முக்கிய இடங்களிலும் சலுகை கிடைக்கிறது.