சண்முகநாதன்: மீதியின் மரணம்!

By முனைவர் து.ரவிக்குமார் எம்.பி.,

அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்ததும் ஐயையோ என்று மனம் பதறியது. திரு மா.ரா அவர்களுக்கு போன் செய்தேன். அவர் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார். அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். திடுமென்று மறைந்து போய்விடுவார் என்று நினைக்கவில்லை.

தலைவர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றவர்கள் எல்லோருக்கும் திரு சண்முகநாதன் அவர்களைத் தெரிந்திருக்கும். தலைவரின் உதவியாளர் என்பது மட்டுமல்ல அங்கே சகலமும் அவர்தான். மாடிப்படி ஓரம் தடுத்து அமைக்கப்பட்ட ஒரு சிறிய அறை மாதிரியான ஏற்பாட்டில் எப்போதும் கணினி முன் அமர்ந்து எதையாவது டைப் செய்து கொண்டிருப்பார். தலைவர் கலைஞர் மணி அடித்துக் கூப்பிட்டால் மேலே போவார். இப்போதும் தலைவர்தான் அவரைக் கூப்பிட்டு விட்டார் போலும்.

’தலைவரை விட்டுவிட்டுப் போறீங்களே. நீங்க இல்லாம அவர் எப்படி இருப்பார்?” என்று நான் ஆரம்பித்ததும் மறுமுனையில் அவர் தழுதழுத்து அழுவது கேட்டது. அவரால் பேச முடியவில்லை.

நான் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பு நான் சிண்டிகேட் வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்திலேயே அவரோடு எனக்கு அறிமுகம் உண்டு. அவரது சகோதரர் திரு கருணாநிதி நான் பணியாற்றிய வங்கியிலேயே பணியாற்றியவர். நான் உறுப்பினராக இருந்த தொழிற்சங்கத்திலேயே அவரும் இருந்தவர். எனினும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதுதான் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது நான் ஜூனியர் விகடனில் எழுதிவந்த கட்டுரைகளையெல்லாம் தவறாமல் படித்துவிட்டு, என்னைப் பார்க்கும்போது பாராட்டுவார். தமிழக அரசின் சார்பில் அண்ணா விருது எனக்கு வழங்கப்பட்டது. அது பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

“தலைவர் உங்களுக்கு அண்ணா விருது கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். அந்த விருதுக்கு உங்கள் பெயரை தலைவரே எழுதினார். உங்கள் மீது அவர் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்பது எனக்குத்தான் தெரியும்” என்று சொன்னார். அறிவிப்பு வரும்வரை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

தலைவர் கலைஞருக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் உறவைப் பார்த்து நானும் வியந்து போயிருக்கிறேன். கலைஞர் போன்ற ஒரு தலைவருக்குத் தொண்டனாக இருப்பதில் சிக்கலில்லை. ஆனால் உதவியாளராக இருப்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை அண்ணன் சண்முகநாதன் தவிர வேறு எவராலும் சமாளித்திருக்க முடியாது. இப்படி ஒருவர் கிடைக்காமல் போயிருந்தால் தலைவர் கலைஞர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்று எண்ணிப் பார்த்திருக்கிறேன். அவர் எண்ணுவதையெல்லாம் எழுத்தாக மாற்றக் கூடிய அளவுக்கு அவருடைய இதயமாகத் துடித்துக்கொண்டிருந்தவர் அண்ணன் சண்முகநாதன். அப்படியான அந்த உறவிலும்கூட அவ்வப்போது உரசல் ஏற்படும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஒரு சம்பவம் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நடந்தது.

தலைவர் கலைஞரிடம் கோபித்துக்கொண்டு திடீரென்று சென்னை வீட்டைக் காலி செய்துவிட்டு பொருட்களையெல்லாம் லாரியில் ஏற்றிக்கொண்டு அவரும் சொந்த ஊருக்குக் கிளம்பிவிட்டார். சண்முகநாதன் சகோதரர் திரு கருணாநிதி அவர்கள்தான் எனக்கு போன் செய்து, “இப்படி அண்ணன் போய்க்கொண்டிருக்கிறார், நானும் அவரைத் தொடர்ந்து காரில் போய்க்கொண்டு இருக்கிறேன்” என்று தெரிவித்தார். “அவரிடம் போனைக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டேன். “நான் வேறு வண்டியில் போய்க்கொண்டிருக்கிறேன். காப்பி குடிப்பதற்காக நிறுத்துவோம் அப்பொழுது தருகிறேன்” என்றார். காபி குடிக்க கார் நின்றதும் சண்முகநாதனின் சகோதரர் திரு கருணாநிதி தொலைபேசியில் அழைத்தார். நான் அவரிடம் பேசினேன். ’தலைவரை விட்டுவிட்டுப் போறீங்களே. நீங்க இல்லாம அவர் எப்படி இருப்பார்?” என்று நான் ஆரம்பித்ததும் மறுமுனையில் அவர் தழுதழுத்து அழுவது கேட்டது. அவரால் பேச முடியவில்லை.

“இல்ல சார், போதும். நான் போறேன் சார்” என்றார். அம்மா மீது கோபித்துக கொண்டு முரண்டுபிடிக்கும் குழந்தையின் பேச்சாகவே அது இருந்தது. “அப்படியெல்லாம் சொல்லாதீங்க” என்று பலவாறாகப் பேசி அவரை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவரது அழுகை அதிகரித்துக்கொண்டே போனது. சிறிது நேரம் கழித்து “நான் கொஞ்ச நாள் போயி ஊர்ல இருக்கன் சார், அப்புறம் வரேன்” என்று சொன்னார். அவருடைய கோபம் தணிய ஆரம்பித்துவிட்டது என்பது தெரிந்தது. நானும் ஒப்புக்கொண்டேன்.

கனிமொழி அவர்களுக்கு இதைத் தெரிவித்தேன். “ ‘குட்டி பிஏ’ வந்துடுவார். நானும் பேசினேன். அப்பாவும் அவர் இல்லாம இருக்க மாட்டாங்க. அவரும் அப்பாவ விட்டுட்டு இருக்க மாட்டார். நாமெல்லாம் சமாதானம் பேசத் தேவையே இல்ல” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அதுபோல சில நாட்களிலேயே அவர் மீண்டும் தலைவர் கலைஞரிடம் பணிக்குத் திரும்பிவிட்டார்.

அவர் மாரடைப்பு வந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களும் நானும் அவர் வீட்டில் சென்று சந்தித்தோம். எங்களைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். அந்த நிலையிலும் கூட எனது கட்டுரைகளை அவர் பாராட்டத் தவறவில்லை. இடையில் ஓரிரு முறை தொலைபேசியில் நலம் விசாரித்தேன். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று மா.ரா சொன்னபோது போய் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படி நினைத்து பார்க்கமுடியாமலேயே போனவர்கள் பட்டியலில் அவர் பெயரும் சேர்ந்துவிட்டது.

தலைவர் கலைஞர் இறந்தபோதே அவரும் பாதி இறந்துவிட்டார். எஞ்சியிருந்தது இப்போது போய்விட்டது. கலைஞரின் வரலாறு எழுதப்படும்போது அண்ணன் சண்முகநாதனைத் தவிர்த்துவிட்டு அதை எழுத முடியாது.

தமிழ்நாடு தன்னலம் பாராத ஒரு உழைப்பாளியை, தகவல் களஞ்சியத்தை, அபூர்வமான ஒரு ஆளுமையை இழந்து விட்டது. அண்ணனுக்கு என் அஞ்சலி !

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE