சிறகை விரி உலகை அறி - 29: தன்னுயிர் ஈந்து மன்னுயிர் காத்தவர்!

By சூ.ம.ஜெயசீலன்

வேடிக்கை பார்ப்பதும் வேறோர் உலகில் வீறுநடை இடுவதும் குழந்தைமையின் அமிழ்தம். வேடிக்கை மனிதராக வேரூன்றிய பிறகு எப்போதாவதே கிடைக்கும் இப்பாக்கியம். நிகழ் கணம் தொலைக்காது துளித்துளியாய் ரசித்தபடி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருந்து 2 கிலோமீட்டர் நடந்து சின்டாக்மா (syntagma) சதுக்கம் சென்றேன். வழியில், ஏதென்ஸ் பல்கலைக்கழக முகப்பில், கிரேக்க மெய்யியலாளர்கள் பிளேட்டோ, சாக்ரடீஸ் இடதுபுறமும் வலதுபுறமும் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால், பெண் தெய்வம் ஏதென்னா மற்றும் கிரேக்க கடவுள் அப்போலோ நிற்பதைப் பார்த்து ரசித்தேன்.

சின்டாக்மா சதுக்கம்

சாலையின் இடது பக்கம் சின்டாக்மா சதுக்கம், வலது பக்கம் கிரேக்க நாடாளுமன்றம். அதன் சுற்றுச்சுவரில், வீரர் ஒருவர் படுத்திருப்பதுபோல செதுக்கியுள்ளார்கள். அதன்கீழே, ‘அறியப்படாத வீரரின் கல்லறை’ (Tomb of the unknown Soldier) இருக்கிறது. போரில் கொல்லப்பட்ட பெயர் தெரியாத அனைத்து வீரர்களுக்குமான கல்லறை அது. ஆண்டு முழுதும் வெயில், மழை, குளிர் பாராது 24 மணி நேரமும் கிரேக்க அதிபரின் காவலர்கள் இருவர் காக்கி உடையில் காவல் காக்கிறார்கள். ஒவ்வொரு மணி நேரமும், 2 பிளஸ் 2 காவலர்கள் பொறுப்பு மாறும் காட்சியை அவ்வழியே செல்லும் பயணிகள் நின்று ரசிக்கலாம். நானும் ரசித்தேன். அருகில் சென்று படம் எடுத்தேன். கெடுபிடிகளெல்லாம் இல்லை.

400 மடிப்புகளுடன் ஆடை

ஒவ்வொரு ஞாயிறு காலை 11 மணிக்கு, ‘நேவி ப்ளூ’ உடையில் எண்ணற்ற வீரர்களின் அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடக்கிறது. வீரர்கள் அணிந்திருக்கும் ஒவ்வோர் ஆடைக்கும், அணிகலனுக்கும் அர்த்தம் உள்ளது. உதாரணமாக, இடுப்பைச் சுற்றி அணிந்திருக்கும் சிறிய வெள்ளைப் பாவாடையில் தொங்கும் 400 மடிப்புகள், கிரேக்கத்தின் மீதான துருக்கியின் 400 ஆண்டு ஆதிக்கத்தைக் குறிக்கிறது.

நாடாளுமன்றச் சுவரில் படுத்துறங்கும் ‘அறியப்படாத வீர’ருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, சதுக்கத்தில் அமர்ந்தேன். முன்பு அரண்மனையாக இருந்து, தற்போது ஜனநாயக வாசம் வீசும் நாடாளுமன்றத்தைப் பார்த்தேன். கிரேக்க வரலாற்றின் ஒரு பகுதி கறுப்பு வெள்ளைப் படமாக விழித்திரையில் விரிந்தது.

ஞாயிறு காலை 11 மணி அணிவகுப்பு

தன்னுயிர் தந்த மாமனிதர்

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பெலப்ஸ் (Pelops) எனும் நெஞ்சுரம் மிக்க வீரன் இருந்தான். அவன் வாரிசுகளும் ஓங்கிய வாள்களை ரத்தம் பார்க்காமல் கீழிறக்காததால், விரைவிலேயே கிரேக்க தீபகற்பத்தின் முழு அதிகாரமும் பெலப்ஸின் வாரிசுகள் கைகளில் வந்தது. ரத்தம் உறைய, உயிர் வடிய தப்பி ஓடிய ஹெலனிஸ்ட்டுகள் சிலர் அருகில் இருந்த தீவுகள், ஆசியா மைனர் (Asia minor) கடற்கரை மற்றும் இத்தாலியின் தென் பகுதியில் காலூன்றினார்கள். அக்கியான்ஸ் (Achaeans) மற்றும் ஐயோனியன்ஸ் (Ionians) சிலரும் தப்பி ஓடினார்கள்.

கரை தொட்ட அலைகளாக ஆண்டுகள் பல கடந்தன. அலைகளை உறிஞ்சிய தரையாக தன் நாடு மீதான ஏக்கத்தை ஈரத்தோடு வைத்திருந்த ஹெலனிஸ்ட்டான ஹெர்குலஸ் (Hercules), தான் பிறந்த பூமிக்குத் திரும்பிச் சென்றான். தன் மக்களுடன் சேர்ந்து களம் கண்டான். மீண்டும் தோல்வி. காயத்தோடு வந்தவர்களை தெஸெலி (Thessaly) பிராந்தியத்தின் மன்னர் அரவணைத்தார். “100 ஆண்டுகளுக்கு பெலப்ஸின் வாரிசுகளுடன் போரிட மாட்டோம்” எனும் உறுதிமொழி வாங்கி தங்க வைத்தார். வழியேதும் தெரியாமல், பழியேதும் நேராமல் தங்கினார்கள்.

நாடாளுமன்றம், கல்லறை முன்பாக, காக்கி உடையுடன் காவலர்கள்

100 ஆண்டுகள் கடந்தன. ஹெர்குலஸின் வாரிசுகள் (Heraclidae), அண்டை பிராந்தியத்தில் இருந்த டோரியன்களின் (Dorians) உதவியுடன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த நாட்டின் மீது போரிட்டார்கள். பெலப்ஸின் வாரிசுகளைக் கொன்று வெற்றிக்கொடி நாட்டினார்கள். உதவி செய்த டோரியன்களுக்கு தாங்கள் உதவ வந்த இடம் பிடித்துப்போனது. எனவே, மீதமிருந்த ஐயோனியர்களை அடித்து விரட்டிவிட்டு டோரியன்களும் அங்கேயே குடியேறினார்கள்.

டோரியன்ஸ் மற்றும் ஹெர்குலஸின் வாரிசுகளால் விரட்டப்பட்ட ஐயோனியர்கள் ஏதென்ஸ், அருகில் இருந்த தீவுகள், ஆசியா மைனருக்குச் சென்று குடியேறினர். நகரங்களை உருவாக்கினர். தாங்கள் இழந்த இடத்தை மீண்டும் பெற விரும்பி, ஏதென்ஸ் அரசர் காட்ரஸிடம் (Codrus) உதவி வேண்டினர். அரசர் சம்மதித்தார்.

தங்கள் வழக்கப்படி, போருக்கு முன்பாக, கோயில் குருவிடம் ‘கடவுளின் திருவுளம்’ கேட்டார் அரசர் காட்ரஸ், “எந்த அரசன் இறக்கிறானோ, அவனது நாடு வெல்லும்” என்பதை அறிந்தார். விரைந்து முடிவெடுத்தார். சாதாரண வீரர் போல உடையணிந்தார். எதிரியின் பாசறைக்குள் நுழைந்தார். தாக்கினார். கொல்லப்பட்டார். தன் உயிரைப் பணயம் வைத்து போரிட்ட அரசர் காட்ரஸின் வீரத்தை அறிந்த மக்கள் வெறிகொண்டு கிளம்பினார்கள், வெற்றியோடு திரும்பினார்கள்.

அரசரின் உயிரற்ற உடலுடன் மகிழ்வின்றி வந்த மக்கள், “இனி ஒருபோதும் இன்னொருவரை அரசர் என அழைக்க மாட்டோம்” என உறுதியெடுத்தார்கள். தங்களை வழிநடத்துகிறவரை ஆர்க்கான் (Archon) அதாவது, ‘தலைவர்’ என அழைத்தனர். முடியாட்சி முடிவுக்கு வந்தது.

தனிப் பயணர் தங்குமிடம்

வரலாற்றின் வாசலில் வசித்த பிறகு, சதுக்கத்திலிருந்து ரயிலேறினேன். சாலையோரக் கடையில் சாப்பிட்டேன். பேக்பேக்கர்ஸ் (Backpackers) விடுதிக்குச் சென்றேன். களைப்பில் உறங்கினேன்.

‘பேக்பேக்கர்ஸ்' விடுதியில் கட்டில் முன்பதிவு செய்யும் முன்பு கீழுள்ளவற்றைக் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்க வேண்டும்:

* இலவசமாக ரத்து செய்யும் வசதி உள்ளதா?

விசா கிடைக்காவிட்டாலோ, புறப்படுவதற்கு முன்பாக வேறு தங்குமிடம் குறைவான விலையில் கிடைத்தாலோ, முன்னதை ரத்து செய்யலாம்.

நாடாளுமன்றம், கல்லறை முன்பாக, காக்கி உடையுடன் காவலர்கள்...

* தங்குமிடத்திலிருந்து தொடர்வண்டி அல்லது பேருந்து நிலையம் எவ்வளவு தூரம்?

விடுதி முன்பதிவு செய்யும் செயலியில் இருக்கும். ஆனால், முழுமையாக நம்பாதீர்கள். தங்குமிட முகவரியையும், அன்றைய நாளின் கடைசியாக அல்லது மறுநாள் முதலாவதாக நீங்கள் பார்க்கப்போகும் இடத்தின் முகவரியையும் கூகுள் மேப்பில் (Google Map) போட்டுப் பார்த்து உறுதி செய்யுங்கள். இந்தியாவில் இருந்தே பார்க்கலாம்.

* ஒருநாள் என்பது எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை? எத்தனை மணிக்குள் விடுதிக்குள் வந்துவிட வேண்டும்?

விடுதியின் ஒருநாள் என்பது பொதுவாக, மதியம் 2 மணியில் இருந்து மறுநாள் காலை 10 அல்லது 12 மணிவரை இருக்கும். என்னுடைய முன்பதிவு மதியம் 2 மணிக்குத் தொடங்கினாலும், இரவு 9 மணி அல்லது மறுநாள் அதிகாலை 5 மணிக்குகூட செக்-இன் செய்திருக்கிறேன். தாமத வருகையை முன்கூட்டியே விடுதிக்குச் சொல்ல வேண்டும்.

* செக்-அவுட் நேரம் காலை 10 மணி. விமானம் இரவு 8 மணி. இடைப்பட்ட நேரம் பையோடுதான் சுற்ற வேண்டுமா?

இல்லை. காலையில் செக்-அவுட் செய்து, விடுதியின் பொறுப்பாளரிடம் சொல்லிவிட்டு பையை வைத்துச் செல்லலாம். மாலையில் எடுக்கலாம். பெரும்பாலும் இலவசம்.

* அடிப்படை வசதிகள் என்னென்ன?

காலை உணவு, அருகலை, குடிநீர் சுட வைக்க கெட்டில், குளிர்பதனப் பெட்டியில் பழம் அல்லது பிரட், குளிர்காலத்தில் ஹீட்டர், கோடையில் குளிர்சாதனம், துணி துவைக்க, சலவை செய்ய வசதி, இவை அனைத்தும் அல்லது பெரும்பாலானவை இலவசமாக பேக்பேக்கர்ஸ் விடுதியில் கிடைக்கும். சமைத்துச் சாப்பிட பொதுவான சமையலறையும் இருக்கும். பொறுமையோடு தேட வேண்டும்.

* விடுதி இருக்கும் இடம் பாதுகாப்பானதா?

பின்னூட்டங்களை வாசித்த பின்னர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். என்ன சந்தேகம் இருந்தாலும், பல வார்த்தைகளில் முயன்று கூகுளில் தட்டச்சு செய்தால் கண்டிப்பாக விடை கிடைக்கும்.

அனுபவத் தோல்வி

நீண்ட அனுபவம் இருந்தும், ஏதென்ஸில் அறையை முன்பதிவு செய்தபோது பின்னூட்டங்களை வாசிக்கத் தவறினேன். முன்பதிவு செய்த விடுதியில் ஏற்கெனவே தங்கியவர்கள், “இரவு 8 மணிக்கு மேல் வீதிக்கு வராதீர்கள், போதைப் பொருட்களுடன் பலர் இருப்பார்கள். பாதுகாப்பானது அல்ல” என எழுதியிருந்ததை தாமதமாகவே வாசித்தேன். தெருவின் பெயரை கூகுளில் எழுதி பார்த்தாலும் அதே பதில். முன்பதிவை ரத்து செய்ய முயன்றேன். இலவச ரத்து இல்லை என்பதையும் அப்போதுதான் கவனித்தேன். பணமா, பாதுகாப்பா? ஒருவாரம் யோசித்தேன். முன்பதிவை ரத்து செய்தேன்.

(மன்னுயிர் = மற்ற உயிர்; திருக்குறள் 244)

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி:

'பேக்பேக்கர்ஸ்' எனப்படுவது...

முதுகில் பையுடன் பயணிக்கும் தனிப் பயணர்களைக் குறிக்கும் வார்த்தை ‘பேக்பேக்கர்ஸ்’. நான் எப்போதும் பேக்பேக்கர்ஸ் விடுதியில்தான் தங்குவேன். கட்டணம் மிகவும் குறைவு. தங்குமிடத்தை Agoda; Booking.com உள்ளிட்ட செயலிகளில் தேடும்போது, பேக்பேக்கர்ஸ் என்று தேட வேண்டும். ஓர் அறையில் 4 பேர், 6 அல்லது 8 பேர் தங்குவார்கள். கீழே ஒரு கட்டில் மேலே ஒரு கட்டில். பெரும்பாலும், கட்டிலுக்குக் கீழே பொருள் வைப்பதற்கான இடம் இருக்கும் அல்லது தனி லாக்கர் இருக்கும். பூட்டு சாவி நாம்தான் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு கட்டிலுக்கும் தனி விளக்கு வசதி உண்டு. குளியலறை மற்றும் கழிப்பறை பொதுவில் இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE