சிறகை விரி உலகை அறி - 28: சிங்கம், கழுகு, பெண்!

By சூ.ம.ஜெயசீலன்

அசையாத புறாக்கள், அலையாத இலைகள், மறையாத பாதச் சுவடுகள் ஒவ்வொன்றையும் கடந்து தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தேன். கி.மு. 6000 முதல் கி.பி. 4-ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால கிரேக்க உலகினுள் கலந்தேன்.

கிரேக்கம், சைப்ரஸ், எகிப்து, இத்தாலி மற்றும் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. கலாச்சார சாதனைகளையும், கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளுடனான தொடர்புகளையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

ஆடையற்ற முழு மனிதன்

அருங்காட்சியகத்தில் என் கவனத்தை முதலில் களவாடியது ஆடை ஏதுமின்றி நின்ற ஆண் சிற்பமே! இவ்வகை ஆடவனுக்கு குராஸ் (Kouros) என்பது பெயர். கி.மு. 7-ம் நூற்றாண்டின் 2-வது பிற்பகுதியில் தொடங்கி, ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கும் மேலாக கிரேக்க கலை உலகில் கோலோச்சிய இக்கலைவடிவம் கி.மு 6-ம் நூற்றாண்டில் உச்சம் தொட்டது.

இச்சிற்பத்தில், இளைஞரின் ஒரு கால் முன்னோக்கி நடப்பதுபோல ஊன்றியிருக்கும் (பொதுவாக இடதுகால்). கைகள் இருபுறமும் நேரே, சிறிது மடங்கி தொங்கும். விரல்கள் குவித்து உள்ளங்கைகள் தொடைகளோடு ஒட்டியிருக்கும். என்றென்றைக்குமான நித்திய இளமை, நித்திய அழகு, வல்லமை, நம்பிக்கை, போற்றுதலுக்குரிய நிர்வாணம் மற்றும் வாழ்வின் பேரின்பத்தை விளக்கும் வகையில் இச்சிற்பங்கள் அமைந்திருக்கும்.

அகழாய்வின்போது அப்பல்லோ கோயிலில் நிறைய குராஸ் சிற்பங்கள் கிடைத்தன. எனவே, இது கடவுள் அப்பல்லோவின் உருவம் என நம்பினார்கள். தொடர் அகழாய்வில், பல்வேறு கோயில்களிலும் குராஸ் கிடைத்ததால், அக்கருத்து மாறியது. கோயில்களில் நிற்கும் குராஸ், கடவுளுக்குப் படைக்கப்பட்ட காணிக்கை; அது கடவுளின் சிற்பமாகவும் இருக்கலாம், காணிக்கை கொடுத்தவரின் சிற்பமாகவும் இருக்கலாம் என்கிறது அருங்காட்சியகக் குறிப்பு. மேலும், கல்லறைகளின் மீது நிற்கும் குராஸ் சிற்பங்கள் இறந்தவர்களின் நினைவாக, அவர்களின் இளமைக் காலத்தையும் வலிமையையும் பறைசாற்றுகின்ற நினைவுச் சின்னங்களாக இருக்கலாம் என்கிற கூடுதல் தகவலும் தருகிறது.

யாரோ யாரிவரோ?

அதோ பாருங்கள், இடதுகையை முன்னோக்கி நீட்டி, வலது கையில் இடி அல்லது திரிசூலத்தைத் தாங்கியபடி கம்பீரமாக ஒருவர் நிற்கிறார். செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த வெண்கலச் சிற்பம் அது (கி.மு. 460, Classical Period). கிரேக்க மத நம்பிக்கையில், சேயுஸ் (Zeus), வானம் மற்றும் இடியின் கடவுள். பொசைடோன் (Poseidon), கடல், புயல் மற்றும் நிலநடுக்கத்தின் கடவுள். இருவரில் யாருடைய சிற்பம் அது என்கிற கருத்து மாறுபாடு இருந்தாலும், சேயுஸ் கடவுளாக இருப்பதற்கான அடையாளங்களே அதிகம் இருப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. செந்நெறிக் காலத்தின் தொடக்ககாலச் சில அசல் சிலைகளுள் இச்சிலையும் ஒன்றாகும்.

சேயுஸ்

தொடர்ந்து நடந்தபோது, கி.மு. 570-ம் ஆண்டு ஸ்பிங்ஸ் (Sphinx) சிற்பம் தனியாக இருந்ததைப் பார்த்தேன். கல்லறைகளில் நிறுவப்படும் தூணின் உச்சியிலும் ஸ்பிங்ஸ் வீற்றிருந்ததைக் கவனித்தேன். யார் அந்த ஸ்பிங்ஸ்?

ஈடிபஸ் காம்ளக்ஸ்

வரலாற்றுக்கு முந்தைய கால கிரேக்கத்தில், தீப்ஸ் நிலப்பரப்பை லேயஸ் (Laius) எனும் அரசர் ஆட்சி செய்தார். அரசியின் பெயர் ஜகாஸ்டா (Jocasta). எதிர்காலத்தில் தனக்கு என்ன நடக்கும் என்பதை அரசன் அறிய விரும்பினார். கோவில் குருக்களிடம் கடவுளின் வாக்கு கேட்கும் அக்கால வழக்கப்படி, தூதுவரை டெல்பி கோயிலுக்கு அனுப்பினார். குருவைச் சந்தித்த தூதுவர் அரசர் முன்பாக, கவலையோடு வந்து நின்றார். “அரசே, உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் தன் தந்தையைக் கொன்று, தன் தாயை மணம் முடிப்பான். அவனால், இந்த அரசு அழியும்” என்றார். அரசர் அதிர்ச்சியடைந்தார். தடுமாறினார். தூக்கம் தொலைத்தார்.

கல்லறைத் தூண் உச்சியில் ஸ்பிங்ஸ்

மாதங்கள் கழிந்தன. மகன் பிறந்தான். அரண்மனை மகிழ்ந்திருக்க, குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தார் அரசர். ரத்தப் பழியில் இருந்து தான் தப்பிக்க, பணியாளரை அழைத்து, “நாட்டுக்கு வெளியே குழந்தையைக் கொன்றுவிடு” என்றார். ரத்தப் பழி தனக்கு வந்துவிடக்கூடாதென நினைத்த பணியாளரும், நாட்டு எல்லையைக் கடந்து, மலையோரத்தில் ஒரு மரத்தில் குழந்தையைக் கட்டினார். பசியில் தானாகவே இறக்கட்டும் என விட்டுவிட்டு நாடு திரும்பினார். குழந்தையைக் கொன்றுவிட்டதாக அரசரிடம் பொய் சொன்னார்.

குழந்தை சிணுங்கியது. அழுதது. வீறிட்டது. விட்டுவிட்டு எழுந்து காற்றில் கலந்து வந்த மழலையின் மூச்சிழுப்பும் அழுகையும் வழிப்போக்கரின் காதில் விழுந்தது. அவர் குழந்தையை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். வளர்ப்பதற்கான பொருளாதார வசதி இல்லாததால், கொரிந்து நாட்டு அரசரிடம் கொடுத்தார். குழந்தை இல்லாத அரசர் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். கயிறு கட்டிய தடம் கணுக்காலில் இருந்ததால், ஈடிபஸ் (Oedipus) அதாவது ‘கணுக்கால் வீங்கியவன்’ என குழந்தையை அழைத்தார் அரசி. கொரிந்து அரசரும் அரசியுமே தன் உண்மையான பெற்றோர் என நினைத்து ஈடிபஸ் வளர்ந்தான்.

வருடங்கள் கடந்தன. விழா ஒன்றில் நண்பர்கள் சிலர், “பெற்றோர் பெயர் தெரியாதவன்” என ஈடிபஸைக் கேலி செய்தனர். ‘நம் பெற்றோர் பற்றி நமக்குத் தெரியாத ஏதோ ஒன்று இருக்கிறதே’ என்று யோசித்த ஈடிபஸ், கடவுளின் வாக்கு அறிய கோயிலுக்குச் சென்றான். குருவானவர், பொத்தாம் பொதுவாக “ஈடிபஸ், நீ உன் அப்பாவைக் கொன்று அம்மாவைத் திருமணம் செய்வாய். அதனால் நாடே அழியும். கவனமாக இரு” என்றார். இதைக் கேட்டு அஞ்சி, பெற்றோருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாதென, கொரிந்து நாட்டைவிட்டு வெளியேறினான் ஈடிபஸ்.

பலநாட்கள் அலைந்து திரிந்தான். குறிப்பிட்ட ஒருநாள், சாலையில் நடந்தபோது, அவனுக்கு எதிரே தேர் வந்துகொண்டிருந்தது. உள்ளே வயதான ஒருவர் இருந்தார். சாலையில் நடந்து வரும் இளைஞரைப் பார்த்த தேரோட்டி, வழிவிட்டு விலகச் சொன்னார். ஈடிபஸ் இளவரசனாக வளர்ந்ததால், அவனைப் பார்த்து வழக்கமாக மற்றவர்கள்தானே வழி விடுவார்கள்! ஈடிபஸ் வழிவிட மறுத்தார். கோபப்பட்ட தேரோட்டி இளைஞரை அடிக்க சாட்டையைச் சுழற்றினார். அந்த நொடியில் தன் வாளினால் அவரைக் கொன்றான் ஈடிபஸ். தேரோட்டி கொல்லப்பட்டதைப் பார்த்த வயதானவர் தேரில் இருந்து இறங்கி வாள் உயர்த்தினார். அவர்தான் தன் உண்மையான தந்தை லேயஸ் என அறியாத ஈடிபஸ், அவரைக் கொன்றான். சூழ இருந்த வீரர்களையும் கொன்றான்.

ஸ்பிங்ஸிடம் பேசும் ஈடிபஸ்

தீப்ஸ் நகருக்குள் ஈடிபஸ் நுழைந்தபோது, நகரம் பரபரப்பாக இருந்ததைப் பார்த்தான். மக்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தான். “நகருக்கு வரும் மைய சாலையில் ஸ்பிங்ஸ் படுத்திருக்கிறது. அதற்கு, பெண்ணின் தலை, சிங்கத்தின் உடல், கழுகின் இறக்கைகள் இருக்கின்றன. அவ்வழியே வருகிற பயணிகளிடம் விடுகதை போடுகிறது. சரியாகச் சொல்லாத அனைவரையும் கொலை செய்கிறது. பதில் என்னவென்று கேட்டு வருவதற்காக டெல்பி கோயிலுக்கு அரசர் சென்றுள்ளார். எப்போது வேண்டுமென்றாலும் அரசர் வந்துவிடுவார்.”

அப்போது காயத்துடன் ஓடிவந்த சிலர், “அரசரையும், வீரர்களையும் ஒருவர் கொலை செய்துவிட்டார். யாரென்று தெரியவில்லை” என்றார்கள்.

தன்னால் கொல்லப்பட்டவர், அரசராக இருக்குமோ என யோசித்த ஈடிபஸ், நேரத்தை வீணாக்காமல் ஸ்பிங்ஸைப் பார்க்கச் சென்றான். நேருக்கு நேர் சந்தித்தான். அலட்சியமாக ஈடிபஸை பார்த்த ஸ்பிங்ஸ், “காலையில் நான்கு கால்களால் நடக்கும், மதியம் இரண்டு கால்களால் நடக்கும் இரவில் மூன்று கால்களால் நடக்கும் உயிரினத்தின் பெயர் என்ன?” என்று கேட்டது. சில நொடிகள் தீவிரமாக யோசித்த ஈடிபஸ் சரியான விடை சொன்னான். தான் தோல்வியுற்றதை அறிந்த ஸ்பிங்ஸ் கிளம்பியது. ஈடிபஸ் விரைந்து சென்று ஸ்பிங்ஸைக் கொன்றான். நாட்டைக் காத்த வீரன் ஈடிபஸைத் தங்கள் அரசனாக்கினார்கள் தீப்ஸ் மக்கள். அதோடு, கணவரை இழந்த அரசி ஜகாஸ்டாவை மணமுடிக்கச் செய்தார்கள். இவ்வாறு, தன் தந்தையைக் கொன்று, தன் தாயை மணந்தவன் ஈடிபஸ்.

சரி, ஸ்பிங்ஸிடம் ஈடிபஸ் சொன்ன பதில் என்ன தெரியுமா? தன் பதிலாக அவன் குறிப்பிட்ட உயிரினம் - மனிதன்!

ஈடிபஸ் சொன்னது இதுதான், “மனிதன் தன் வாழ்வின் காலையில் அல்லது குழந்தைப் பருவத்தில் கைகளாலும், முழங்கால்களாலும் நடக்கிறான். மதியம் அல்லது இளமைப் பருவத்தில் நிமிர்ந்து நடக்கிறான். மாலையில் அல்லது வயதான பிறகு ஊன்றுகோல் துணையுடன் நடக்கிறான்.”

(பாதை நீளும்)

ஏதேன்னா சிற்பம்

பெட்டிச் செய்தி

பெண் தெய்வம்

ஓர் அரங்கில், 1.5 மீட்டர் உயரத்தில், வடிவியல் அலங்காரத்துடன் கல்லறைகளில் வைக்கப்பட்ட மண் ஜாடியை (Dipylon) பார்த்தேன். அது, கி.மு 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதன், அருகிலேயே ‘எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறாள்’ எனும் பொருளில் வடிக்கப்பட்டுள்ள ஏதேன்னா (Athena) சிற்பம் ஒயிலாக நிற்கிறது. பெண் தெய்வம் ஏதென்னாவின் சிற்பம், ஏதென்ஸின் வடக்கே உள்ள பென்டெலிகன் மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட மார்பிள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை, கி.பி. 3-ம் நூற்றாண்டின் மத்தியில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு குறிப்பு!

வடிவியல் அழகுடன் டிப்பெலான் (Dipylon) ஜாடி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE