சமத்துவம் பேசும் பார்பி பொம்மைகள்!

By என்.பாரதி

பார்பி பொம்மைகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். விதவிதமான தோற்றங்களில் விற்பனையில் சாதனை படைத்துவரும் பொம்மை இது.

இந்த பார்பி பொம்மையைப் பெரிதும் நேசிக்கும் கேரள மூதாட்டி ஒருவர், தன் வீட்டில் இருக்கும் பழைய பார்பி பொம்மைகளைப் புராண, இதிகாசப் பாத்திரங்களாக மாற்றி அமைத்திருக்கிறார். அதில் சமூகநீதியையும் நுட்பமாகக் கலந்து அசத்துகிறார்!

மணக்கோலத்தில் பார்பி பொம்மைகள்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தேவகிக்கு 75 வயது. கேரளத்தில் கரோனா 2-வது அலையின்போது கடுமையாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த தேவகி, அப்போது கிடைத்த ஓய்வு நேரத்தில், தன் வீட்டில் இருந்த பார்பி பொம்மைகளிலிருந்து இதிகாசப் பாத்திரங்களை வார்த்திருக்கிறார். சகுந்தலா தேவி தொடங்கி, புத்தரின் பெண் சீடருக்குத் தண்ணீர் கொடுக்கும் பட்டியல் இனப் பெண்வரை விதவிதமாக பார்பிகள் இவரது வீட்டில் அணிவகுக்கின்றன.

அதைப் பற்றி நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார் தேவகி. “பொதுமுடக்கத்தால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல். அந்த நேரத்தில் வீட்டில் சமையல் வேலைக்கு ஒரு பெண் சேர்ந்தார். இதனால் எனக்கு நிறைய ஓய்வு கிடைத்தது. அப்போதுதான் கழிவுப்பொருட்களிலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். வீட்டில் நிறைய பார்பி பொம்மைகள் இருப்பதைப் பார்த்தேன். குழந்தைகள் குழந்தைகளாக இருந்தவரை அவற்றைப் பொக்கிஷமாகப் பாவித்தனர். அவர்கள் கொஞ்சம் வளர்ந்ததும் பார்பி பொம்மைகள் வீட்டில் வெறுமனே ஒரு ஓரத்தில் ஒதுங்கிக்கிடந்தன. அவற்றைத்தான் இப்படி மாற்றியமைத்திருக்கிறேன்” என்றவர், இதிகாசப் பாத்திரங்களாக்கப்பட்ட பார்பி பொம்மைகளைக் காட்டுகிறார்.

புத்தரின் பெண் சீடர் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் காட்சி

ஹம்ச தமயந்தி தொடங்கி, புடவை கட்டி இந்தியப் பாரம்பரிய உடையில் இருக்கும் பார்பிகள் வரை இவரது வீட்டில் வரிசைகட்டுகின்றன. மலையாளத்தில் பிரசித்தி பெற்ற குமாராசனின் கவிதையில் புத்தரின் பெண் சீடர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்பார். உடனே அதற்கு அந்தப் பெண், ‘நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். பரவாயில்லையா?’ என வேதனையோடு வினவுவார். உடனே புத்தரின் சீடர், ‘நான் உன்னிடம் தண்ணீர்தான் கேட்டேன். சாதி இல்லை’ எனச் சொல்வார். இந்தக் காட்சியை அப்படியே சித்தரிக்கும்வகையில், பார்பி பொம்மையை உருவாக்கிவைத்துள்ளார் தேவகி.

அதேபோல் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மும்மதத்தைச் சேர்ந்த மணப்பெண்களாகவும் பார்பி பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தேவகியின் பழைய பட்டாடைகளின் பார்டர்களே பொம்மைகளின் ஆடைகளாகியிருக்கின்றன. தனது பேத்தி பயன்படுத்திய கவரிங் ஆபரணங்களை பார்பிகளுக்கு அணிவித்துள்ளார். இந்தியப் பெண்களின் வடிவம் என்பதால், பார்பிகளின் கூந்தல் கருமையாக இருக்கும்படியும் பார்த்துக்கொண்டார்.

நிறைவாக தேவகி நம்மிடம் கூறும்போது, “நான் நன்றாக ஓவியமும் வரைவேன். இதனால் என் பார்பி பொம்மைகளைச் சுற்றி ஓவியங்களும் வரைந்து இன்னும் அழகாக்கிவிட்டேன். இதுபோக தென்னை நார்களைக் கொண்டு அலங்காரப் பொருட்களையும் உருவாக்கியுள்ளேன். முதலில் இதைப் பொழுதுபோக்காக மட்டுமே செய்தேன். காலப்போக்கில், பார்பி பொம்மைகளின் மூலம் சமூகநீதி பேசுவது எனக்கே பிடித்துப்போனது. அதிகமான குழந்தைகள் இதைப் பார்க்க ஆர்வத்துடன் வருகிறார்கள். இந்த பார்பிகள் புராதனமும், சமூகநீதியும் பேசும். இது குழந்தைகளுக்கும் சமத்துவத்தைப் போதிக்கும்’’ என்கிறார்.

கலை நுணுக்கம் கொண்டவர்களின் கைகளில் பொம்மைகள்கூட உயிர்பெற்றுக் கதை பேசும். சமூகநீதிப் பார்வை கொண்ட தேவகியின் கலை நுணுக்கம், கேரளம் தாண்டிப் பேசப்படுவதில் ஆச்சரியமில்லை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE