இன்று சர்வதேச மனித உரிமைகள் நாள். 1948, டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்நாளை 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமை நாளாகக் கடைபிடித்துவருகிறோம். உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளில் சர்வதேச மனித உரிமைப் பிரகடனமும் ஒன்று. 500-க்கும் மேற்பட்ட மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை
சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள மனித உரிமைகள், ‘இரண்டாம் தலைமுறை மனித உரிமைகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. முதலாவது தலைமுறை உரிமைகளையும் உள்ளடக்கியது அது. தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகிய இரண்டும் முதல் தலைமுறை உரிமைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. அரசின் எதேச்சாதிகாரத்திடமிருந்து அதன் குடிமக்களைப் பாதுகாப்பதே முதல் தலைமுறை உரிமைகளின் முதன்மையான நோக்கமாக இருந்துவந்தது. வாழ்வதற்கான உரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், கருத்துச் சுதந்திரம், சமய வழிபாட்டுக்கான சுதந்திரம், சொத்துரிமை, நேர்மையான விசாரணைக்கான உரிமை, வாக்குரிமை ஆகியவை முதல் தலைமுறை மனித உரிமைகளில் உள்ளடங்கும்.
1215-ல் வெளியான மனித உரிமைகளுக்கான ‘மேக்னா கார்டா’ சாசனம், 1689-ல் வெளியான ஆங்கிலக் குடிமக்களுக்கான உரிமைகள் சட்ட முன்வடிவு, 1789-ல் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைப் பிரகடனம், 1791-ல் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட உரிமைகளுக்கான சட்ட முன்வடிவு ஆகியவை சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டன.
இரண்டாம் தலைமுறை
20-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் நடந்த 2 உலகப் போர்களின் விளைவாக பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகளும் மனித உரிமைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த உரிமைகளை, 2-ம் தலைமுறை உரிமைகள் என்று வகைப்படுத்துகிறார்கள். பாதுகாப்பான சூழலில் பணிபுரிவதற்கான உரிமை, உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான உரிமை ஆகியவை இவற்றில் முக்கியமானவை.
தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், வேலைவாய்ப்பு இல்லாதபோது இழப்பீடுகள் ஆகியவற்றுக்கான உரிமைகளையும் இவை உள்ளடக்கும். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் 2-வது தலைமுறை உரிமைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன என்றாலும் பொருளாதார நிலையில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு இந்த இலக்குகள் பெரிதும் ஏட்டளவிலேயே இருக்கின்றன.
மூன்றாம் தலைமுறை
சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் தனிமனிதர்களின் அரசியல் உரிமைகளும் சமூக உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு 1972-ல் ஐக்கிய நாடுகளின் மனித சுற்றுச்சூழலுக்கான மாநாட்டில் வெளியான ஸ்டாக்ஹோம் பிரகடனம், 1992-ல் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ரியோ பிரகடனம் ஆகியவை மாசுபாடு இல்லாத சூழலையும் மனித உரிமைகளில் ஒன்றாகக் கூறுகின்றன.
ஒத்திசைவு மனித உரிமைகள் என்று அழைக்கப்படுகிற இந்த 3-வது தலைமுறை உரிமைகள், சுகாதார சுற்றுச்சூழலுக்கான உரிமை, இயற்கை வளங்களுக்கான உரிமை, பண்பாட்டு நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொள்வதற்கான உரிமை, தலைமுறைகளுக்கிடையிலான நிலையான வளர்ச்சிக்கான உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 1981-ல் வெளியான ஆப்பிரிக்க மனித உரிமைச் சாசனமானது இந்தச் சுற்றுச்சூழல் உரிமைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஹங்கேரி, பின்லாந்து ஆகிய நாடுகள் இந்த உரிமைகளைத் தங்களது அரசமைப்பின் ஒருபகுதியாக ஏற்றுக்கொண்டுள்ளன.
முதலாவது தலைமுறை உரிமைகளை நீல உரிமைகள் என்றும் 2-ம் தலைமுறை உரிமைகளை சிவப்பு உரிமைகள் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். 3-வது தலைமுறை உரிமைகள் பச்சை உரிமைகள் என்று தனித்துக்காட்டப்படுகின்றன.
நான்காம் தலைமுறை
நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில், மனிதர்களுக்கு டிஜிட்டல் உரிமைகள் என்ற புதிய தேவையும் எழுந்துள்ளது. இணைய வெளியை எல்லோரும் பயன்படுத்துவதற்கான உரிமை, தங்களது தரவுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை ஆகியவை குறித்து 4-ம் தலைமுறை மனித உரிமைகள் கவலைகொள்கின்றன.
இது தவிர, சுகாதாரமான சுற்றுச்சூழலுக்காகப் பேசிவரும் ஆர்வலர்கள், உயிரி தொழில்நுட்பத்தில் அறவிழுமியங்களைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதை 4-ம் தலைமுறைக்கான உரிமையாக அடையாளப்படுத்துகின்றனர். நாம் வாழும் காலத்தில் வெகுவேகமாக வளர்ச்சியடைந்துவரும் உயிரி - தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் இரண்டுமே லாப நோக்கத்துக்காகத் தனி மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிடக் கூடாது என்பது முக்கியம்.
(திங்கள்கிழமை சந்திப்போம்)