ஆன்மிக தியானங்கள் ஆன்மாவை வளப்படுத்தும், கறைபடிந்த மனதை பிறை நிலவாய் அழகுபடுத்தும், உறவுகளின் விரிசலில் பரிவு பூசும் என்றெல்லாம் அறிந்திருந்த எனக்கு, சுற்றுலாவுக்கான திறவுகோலாகவும் அமையும் என உணர்த்தியது ஓர் அழகான பயணம்.
யாக்கோபுவின் பாதை
சில ஆண்டுகளுக்கு முன்பு, பிலிப்பைன்ஸ் நாட்டு பாதிரியார் யூஜின் வழிநடத்திய தியானத்தில் பங்கெடுத்தேன். பல்வேறு புனித இடங்களுக்குப் பயணித்திருந்த திருப்பயணி அவர். தனிப் பயணியும்கூட. பயண அனுபவத்தினூடாக ஸ்பெயின் நாட்டில் சந்தியாகோ தே கம்போஸ்தெல்லா நகரத் திருக்கோயிலின் கதவைப் படமெடுத்து வந்திருந்தார். கதவில் இருந்த சிற்பங்களை மையமாக வைத்தே தியான உரைகள் வழங்கினார்.
இயேசுவின் 12 திருத்தூதர்களுள் ஒருவரான யாக்கோபுவின் கல்லறை கம்போஸ்தெல்லாவில் இருக்கிறது. யாக்கோபு என்றால் ஸ்பானிய மொழியில் சந்தியாகு என்பதால், சந்தியாகோ தே கம்போஸ்தெல்லா என இந்நகர் அழைக்கப்படுகிறது. கி.பி. 9-ம் நூற்றாண்டு தொடங்கி இப்போதும் மக்கள் அங்கே பாதயாத்திரை செல்கிறார்கள். மலைகளை ஏறி இறங்கிக் கடக்கிறார்கள். பயண வழித்தடம் ஐரோப்பாவின் 7 இடங்களில் தொடங்கி, கம்போஸ்தெல்லாவில் நிறைவடைகிறது. வழித்தடத்துக்கு யாக்கோபுவின் பாதை (Camino de Santiago) என்று பெயர். பாதயாத்திரைக்குப் பதிவு செய்தவுடன் திருப்பயண கடவுச்சீட்டு (pilgrim passport) தருவார்கள். வழியில் ஆங்காங்கே இருக்கும் திருப்பயண அலுவலகத்தில் முத்திரை வாங்க வேண்டும்.
ஏழு பாதைகளுள், 790 கி.மீ தூரம் உள்ள ‘பிரான்ஸ் பாதை’ மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு நாளும் 25-27 கி.மீ நடந்தால் 30-35 நாட்களில் இந்த வழியே கம்போஸ்தெல்லா சென்று சேரலாம். ‘திருப்பயணி சான்றிதழ்’ பெற வேண்டுமென்றால், குறைந்தபட்சம் கடைசி 100 கிலோ மீட்டராவது நடந்திருக்க வேண்டும். தனிப் பயணியாக 38 நாட்கள் நடந்து சென்ற பாதிரியார் யூஜின், பயணத்தின் வழியில் கிடைத்த புதிய நண்பர்கள், களைப்பு போக்கிய வான்மழை, கண்ணுக்குள் வந்தமர்ந்த பனிமழை, உயர்ந்து தாழ்ந்து தவழ்ந்து அழைத்துச் சென்ற பசுமலை என ஒவ்வொன்றையும் விவரித்த விதம் பயண ஆர்வத்தை எனக்குள் தூண்டியது.
பணம் சேமிக்கத் தொடங்கினேன். சில மாதங்களிலேயே வேறோர் எண்ணம் வேர்விட்டது. சேமிப்பு முழுவதையும் ஒரே இடத்தில் செலவிடுவதற்குப் பதிலாக, பல்வேறு இடங்களைப் பார்க்க முடிவெடுத்தேன். சுற்றுலாத் தலங்களையும் கத்தோலிக்கத் திருச்சபை அங்கீகரித்துள்ள புனிதர்கள் சிலர் வாழ்ந்த நிலங்களையும், இணைத்து ஐரோப்பியப் பயணத்தைத் திட்டமிட்டேன்.
ஷெங்கன் விசா
ஷெங்கன் (Schengen) விசா இருந்தால் ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிட்டென்ஸ்டெய்ன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்து எனும் 26 ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கலாம்.
விசா படிவம் நிரப்பும்போது, எத்தனைமுறை ஷெங்கன் பகுதிக்குள் நுழைய விரும்புகிறீர்கள் என்பதை எழுத வேண்டும். ஒருமுறை நுழைவு (single entry) விசா இருந்தால் ஷெங்கன் பகுதிக்குள் ஒருமுறை நுழைந்து 26 நாடுகளுக்கும் செல்லலாம். இருமுறை நுழைவு (double entry) விசா இருந்தால் ஷெங்கன் பகுதிக்குச் சென்ற பிறகு, அங்கிருந்து வெளியேறினாலும் குறிப்பிட்ட விசா நாட்களுக்குள் மீண்டும் ஷெங்கன் பகுதிக்குள் நுழைய அனுமதி உண்டு. உதாரணமாக, உங்களிடம் ஷெங்கன் விசா உள்ளது, லண்டன் விசாவும் உள்ளது. ஷெங்கன் பகுதிக்குள் நுழைந்து சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து லண்டன் செல்கிறீர்கள். மறுபடியும் ஷெங்கன் பகுதிக்குள் நீங்கள் ஒருமுறை வரலாம். பலமுறை நுழைவு (multiple entry) விசா இருந்தால் எத்தனை முறை வேண்டுமென்றாலும் ஷெங்கன் பகுதியைவிட்டு வெளியே சென்றுவிட்டு உள்ளே வரலாம். பொதுவாக, பலமுறை நுழைவு விசா வாங்குவது பாதுகாப்பானது.
கால வரையறை மற்றும் செல்லுபடி காலம்
ஐரோப்பியப் பயணத்தைப் பொறுத்தவரையில், எத்தனை நாள் தங்குவது (duration of stay) மற்றும் விசா அனுமதி காலம் (visa validity) இரண்டுக்குமான வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டும். எத்தனை நாள் தங்குவது: ஷெங்கன் பகுதியில் அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் தங்கலாம் என்பதைக் குறிக்கிறது. இங்கே கவனிக்க வேண்டியது, இரவு 12 மணிக்கு சில நிமிடங்கள் முன் நாட்டுக்குள் சென்றாலும், ஒரு நாள் கணக்கு தொடங்கிவிடும். கடைசிநாளில், இரவு 12 மணி கடந்து சில நிமிடங்களில் நாட்டைவிட்டு வெளியேறினாலும் மற்றொரு நாள் கணக்கில் சேர்ந்துவிடும். விசா அனுமதி காலம்: எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதிவரை நீங்கள் ஷெங்கன் பகுதிக்குள் நுழையவும் தங்கவும் அனுமதி இருக்கிறது என்பதைச் சொல்கிறது.
உதாரணமாக, (1) விசா நாட்கள் டிசம்பர் 1 முதல் 20 வரை எனக் குறிப்பிட்டு 10 நாட்கள் தங்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். இந்த 20 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் ஷெங்கன் பகுதிக்குள் சென்று 10 நாட்கள் தங்கலாம். அதாவது, டிசம்பர் 3-ம் தேதி சென்று 12-ம் தேதிகூட வெளியேறலாம். அதேவேளையில், டிசம்பர் 15-ம் தேதிதான் ஷெங்கன் பகுதிக்குள் போகிறீர்கள் என்றால், 10 நாள் கணக்கெல்லாம் பார்க்கக் கூடாது. விசா முடியும் 20-ம் தேதி வெளியேறிவிட வேண்டும். (2) இருமுறை நுழைவதற்கான விசா உங்களிடம் உள்ளது. விசா நாட்கள் டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 1 வரை எனக் குறிப்பிட்டு 10 நாட்கள் தங்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். இக்குறிப்பிட்ட நாட்களில் 2 முறை ஷெங்கன் எல்லையில் நீங்கள் நுழையலாம். முதல் முறை 4 நாட்கள் தங்கினால், அடுத்தமுறை நுழையும்போது 6 நாட்களுக்கு அனுமதியுண்டு. (3) பலமுறை நுழையும் விசா இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் நுழையலாம். தங்கும் நாட்கள் எத்தனை கொடுத்துள்ளார்கள் என்பதைப் பார்த்து முன்பு சொன்னது போலவே பின்பற்ற வேண்டும்.
எந்த நாட்டிடம் விசா வாங்குவது?
(1) எந்த நாட்டில் நுழைகிறோமோ அந்த நாட்டுத் தூதரகத்திடம்தான் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? (2) முதலில் நுழைந்த நாட்டில் இருந்துதான் கடைசியாக வெளியேற வேண்டுமா? இந்தக் கேள்விகள் எனக்குள் குழப்பம் ஏற்படுத்தின. 2 கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்பதே பதில். 26 நாடுகளுள் எதிலொன்றும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். வேறெந்த நாட்டிலும் நுழைந்து வேறெந்த நாடு வழியாகவும் வெளியேறலாம். விண்ணப்பப் படிவத்திலேயே இதற்கான கேள்விகள் இருக்கும். நான் ஜெர்மனி தூதரகத்தில் விண்ணப்பித்தேன். கிரேக்க நாட்டில் நுழைந்து, ஐஸ்லாந்து வழியாக வெளியேறுவதாகக் குறிப்பிட்டிருந்தேன்.
மேலும், விண்ணப்பம், பயண திட்டம், வங்கிக் கணக்கு, வங்கிச் சான்றிதழுடன், மருத்துவக் காப்பீடு படிவம் சமர்ப்பிக்க வேண்டும். இணையத்தில் வாங்கலாம். விசாவுக்கு விண்ணப்பிக்கும் நாட்டிலிருந்து அழைப்புக் கடிதம் வேண்டும் என்பது பொதுவான நடைமுறை. ஆனாலும், பலமுறை ஐரோப்பா சென்றுவந்த நண்பர்கள், “அழைப்புக் கடிதம் தேவையில்லை, தங்குமிட முன்பதிவு சான்று போதுமானது” என்று சொன்னதை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
கிரேக்க வான்வெளியில் இந்திய விழிகள்
எனக்கு விசா கிடைத்தது. தனிப் பயணியின் சவால்களைச் சமாளிக்கும் திடத்துடன், வெறும் 8 கிலோ எடையுள்ள பையைத் தூக்கிக்கொண்டு ஒருமாத பயணத்தைத் தொடங்கினேன். அதோ... ஏதென்ஸ்! வயல்களில் ஊன்றி நிற்கும் நாற்றுக் கட்டுகள் போல் சிறுசிறு தீவுகள் கடலில் தெரிகின்றன பாருங்கள்.
அலைகளையும் மலைகளையும் பார்த்துக்கொண்டே ஏதென்ஸில் இறங்கினேன். தங்குமிடம் சென்றேன். குளித்துவிட்டு உடனே கிளம்பினேன். ‘ஜெட் லாக்’(Jet lock) என்படும் நேர மாற்றத்தால் வரும் களைப்பே இல்லை.
தேசிய தொல்பொருள் அருங்காட்சியகம்
ஆட்டமன் பேரரசின் கொடுமையில் இருந்து விடுதலை பெற்ற பிறகு கிரேக்கம் உருவாக்கிய முதல் அருங்காட்சியகம், ஏதென்ஸ் தேசிய தொல்பொருள் அருங்காட்சியகம். கிரேக்கத்தில் உள்ள மிகப் பெரியதும் உலகின் முக்கியமான தொல்பொருள் அருங்காட்சியகங்களுள் ஒன்றுமான இதில், நாடு முழுதும் இருந்து கொண்டுவரப்பட்ட தொல்பொருட்களும் பழமைச் சின்னங்களும் பாதுகாக்கப்படுகின்றன. சுற்றுலாவின் முதல் இடமாக இந்த அருங்காட்சியகம்தான் சென்றேன். என் வருகையால் கவனம் சிதறாது, அதிர்ந்து பறக்காது வளாகத்தில் தியானம் செய்துகொண்டிருந்த புறாக்களின் அமைதியில் கலந்தேன்.
(பாதை நீளும்)
பெட்டிச் செய்தி:
தொல்பொருள் மறுபடியும் மண்ணுக்குள்!
தேசிய தொல்பொருள் அருங்காட்சியகம் (National Archaeological museum), 1829-ல் கிரேக்கத்தின் முதல் தலைநகர் அஜைனா-வில் (Aegina) உருவாக்கப்பட்டது. 1834-ல் ஏதென்ஸ் தலைநகரானவுடன் ஏதென்ஸுக்கு மாற்றப்பட்டது. தன் நாட்டு வரலாற்றின் மீது மிகுந்த மதிப்புடைய கிரேக்க அரசு, இரண்டாம் உலகப் போர் காலத்தில் வரலாற்றுப் பொக்கிஷங்கள் அழிந்துவிடுமோ என அஞ்சியது. தேசிய தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் பல்வேறு அருங்காட்சியகத்தில் இருந்த தொல்பொருட்களை அட்டைகட்டி, பூமிக்குள் மறைத்து வரலாற்றைக் காப்பாற்றியது.