சிறகை விரி உலகை அறி - 26: ஏங்கவைத்த அருங்காட்சியகம்!

By சூ.ம.ஜெயசீலன்

‘அடடா! இப்படி ஒரு அற்புதமான விஷயம் நம்மூரில் இல்லையே’ என எப்போதாவது ஏக்கத்துடன் நினைத்திருக்கிறீர்களா? சீனாவில் ஷான்ங்ஜி (Shaanxi) வரலாற்று அருங்காட்சியகத்தைப் பார்த்தபோது, நான் அப்படி நினைத்தேன். சீன நாகரிகத்தின் தொட்டில்களுள் ஒன்றான ஷான்ங்ஜி மாகாணத்தின் முக்கிய நகரம் ஷியான். தற்போது பெய்ஜிங் இருப்பதுபோல கடந்த காலங்களில், நாஞ்சிங், ஷியான், லுவோயாங் நகரங்கள் சீனாவின் முக்கியத் தலைநகரங்களாக இருந்துள்ளன.

ஷியான் நகரத்துக்கு வெளியே அமைந்துள்ள டெரகோட்டா ராணுவத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் நகரத்துக்குள் வந்தேன். கொதிக்கும் கோடையில் வியர்வை ஓடையில் நனைந்து, நுழைவுச் சீட்டு வாங்கினேன். நெற்றித் திலகமாய் நின்றது வரவேற்புப் பலகை. வாசித்தேன். ‘ஷியான் பட்டணத்தின் ஒளிரும் முத்து, சீன நாகரிகத்தின் கருவூலம் இந்த அருங்காட்சியகம். சீனாவின் முதல் பிரதமர் (1949-1976) ஜோவ் என்லேயின் (Zhou Enlai) கடைசி ஆசை இது’ எனும் தகவல் முழுதாய் என்னைத் தழுவியது.

கி.பி. 1983-ல் தொடங்கி கி.பி. 1991-ல் கட்டி முடிக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் தலைவாசல் திறந்தேன். பள்ளி மாணவர்கள் சில நூறுபேர் திரிந்தார்கள். இவர்களுக்குக் கோடை விடுமுறை இல்லையா? விசாரித்தேன். “விடுமுறையில் ஆசிரியர்களுடன் அருங்காட்சியகம் பார்க்க வந்திருக்கிறார்கள்” என்கிற பதிலில், மாணவர்களும் ஆசிரியர்களும் புதுமையின் குறியீடுகளானார்கள்.

மூடியுடன் வெள்ளி ஜாடி

தெளிந்த திட்டமிடல்

தங்கள் தலைநகரை ஷியான் நகரில் நிறுவி 14 வம்சங்கள் ஆட்சி செய்துள்ளன. அதில், கி.மு. 1046 முதல் கி.பி. 907 வரை சீனாவை ஆண்ட 4 முக்கிய அரச வம்வசங்களின் வரலாற்றுத் தகவல்களால் தன்னை அலங்கரித்துள்ளது இந்த அருங்காட்சியகம். பார்ப்பவர்களுக்குக் குழப்பம் ஏற்படாதபடி 4 வம்சங்களின் வரலாற்றையும் அமைத்திருக்கிறார்கள். சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணத் தட்டியில் கறுப்பு நிறத்தில் எழுதியிருப்பது, ஜோவ் வம்ச வரலாறு (கி.மு. 1046 - கி.மு. 256). கறுப்பு தட்டி சிவப்பு மற்றும் வெள்ளை நிற எழுத்து என்றால், அது ச்சின் வம்ச வரலாறு (கி.மு. 221 - கி.மு. 206). வெள்ளை தட்டியில் சிவப்பு எழுத்து ஹான் வம்ச வரலாறு (கி.மு. 206 - கி.பி. 220). சிவப்புப் பலகையில் மஞ்சள் எழுத்து டாங் வம்ச வரலாறு (கி.பி. 618 - கி.பி. 907).

முன்னோர்களின் சிறப்பு, அவர்களின் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்கள் வரலாற்றுக் குறிப்புகளிலும் இலக்கியப் பதிவுகளிலும் இருக்கும். அவற்றில் பல, அகழாய்வில் இதுவரை கிடைத்திருக்காது அல்லது அழிந்துபோயிருக்கும். பள்ளியில் படிக்கும்போது கற்பனையில் மட்டும் மாணவர்கள் பார்த்திருப்பார்கள். அதனதன் மாதிரியைச் செய்து இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். தாங்கள் படித்ததையும் இங்கு பார்ப்பதையும் பொருத்திச் சொல்லி மாணவர்கள் உற்சாகமானதைக் கண்டேன். நானும் உத்வேகம் கொண்டேன்.

வெண்கலப் பாத்திரம் (அடுப்பும் பாத்திரமும் ஒன்றாக உள்ளது)

ஜோவ் வம்சம்

வெண்கலக் கலை, கைவினைப் பொருட்கள், பணப் பரிமாற்றம், சடங்குகள் மற்றும் தண்டனைகள், போர் மற்றும் பரிமாற்றங்கள், சடங்குகளும் இசையும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வரலாற்றை வடித்துள்ளார்கள். விறகு அடுப்பில் சமைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அடுப்புக்கு 3 கால்கள் இருக்கும். தேவையான பாத்திரத்தை மேலே வைத்து சமைக்கலாம். சீனாவில், புதிய கற்காலத்தில், அடுப்பும் பாத்திரமும் தனித்தனியாக இல்லாமல் ஒட்டி இருப்பதுபோலவே மண்ணால் செய்துள்ளார்கள். அதே மாதிரியைப் பின்பற்றி மேற்கத்திய ஜோவ் (Western Zhou Dynasty) வம்சத்தினர் வெண்கலத்தில் செய்தார்கள். 3,000 ஆண்டுகளாக மண்ணில் கிடந்த இந்த வெண்கலச் சமையல் பாத்திரம், 1979 அகழாய்வில் கிடைத்தது. இப்போது அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

வெண்கலப் பாத்திரங்கள்

இவர்கள் காலத்தில், சடங்கு செய்யும் உரிமை மற்றும் மரியாதை பொதுமக்களுக்கு இல்லை. தண்டனை பிரபுக்களுக்கு இல்லை. குதிரைகள் மற்றும் கப்பல்கள் வாயிலாக வணிகம் செய்தார்கள். தேர் செய்வதில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அடிக்கடி போர் நடந்தாலும் அதன்வழியே கலாச்சாரம் மற்றும் பொருளாதார பரிமாற்றத்தில் பலன் பெற்றார்கள்.

ச்சின் வம்சம்

சிந்தனை, பொருளாதாரம், கலாச்சாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இவ்வம்சம். மற்ற அரசுகளை வெல்லுதல், ஒருங்கிணைந்த அதிகாரம், நாட்டை ஒருங்கிணைத்தல், பெரும் அடக்கச் சடங்குகள் எனும் பல்வேறு தலைப்புகளில் இந்த அரங்கம் அமைந்துள்ளது. கல்லறைகளின் வடிவமைப்பு, அதனுள் இருப்பவர் அரசவையில் வகித்த தகுதியையும் பொறுப்பையும் சொல்கிறது. தன்னைச் சுற்றி இருந்த 6 அரசர்களையும் 10 ஆண்டுகளில் (கி.மு. 231 – கி.மு. 221) வென்று ஒருங்கிணைந்த சீனாவை அமைத்த, பேரரசர் ச்சின் ஷி ஹுவாங் இந்த வம்சத்தைச் சேர்ந்தவரே. இவர்தான், சீனப் பெருஞ்சுவரின் பெரும்பகுதியை எழுப்பினார். டெரகோட்டா இராணுவத்தை பூமிக்குள் நிறுத்தினார்.

மண் சிற்பத்தில் நடனக் கலைஞர்

ஹான் வம்சம்

தனக்கு முந்தைய ச்சின் வம்ச ஆட்சியின் கடுமையான சட்டங்கள், வரிச்சுமையால் மக்கள் அவதிப்பட்டதை அறிந்த ஹான் வம்சத்தினர், கடுமை குறைவான சட்டங்களை உருவாக்கினர். கொத்தடிமை முறையைக் குறைத்தனர். வரியைக் குறைத்து பொருளாதாரம் பெருக்கினர். அண்டை நாட்டினருடன் வணிகம் செய்ய கி.மு.130-ல் வணிகப் பாதையை உருவாக்கினர். அதிகமாகப் பட்டு வணிகம் நடைபெற்றதால், அது பட்டுப்பாதை என்றே அழைக்கப்படலாயிற்று. கி.பி.1453-ல் ஆட்டமன் பேரரசு தடைசெய்யும் வரை இந்தப் பாதையில் வணிகம் நடைபெற்றது. இரும்பினால் கருவிகள் செய்து விவசாயம் செய்தனர். தண்ணீரை முறைப்படுத்தி விவசாயம் செய்யும் வழக்கம் இருந்தது. சீனாவின் அடையாளமாகத் திகழும் முக்கியமான கண்டுபிடிப்புகள் இவர்கள் காலத்தில் நிகழ்ந்தவைதான்!

கடல் அலையும், கடல் விலங்கும் உடைய வெள்ளி கிண்ணம்

டாங் வம்சம்

டாங் வம்சத்தினர் விவசாய சாகுபடி நிலத்தை அதிகரித்து பாசன முறைகளை நவீனப்படுத்தினார்கள். கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அரசருக்காக 7 லட்சம் குதிரைகள் வளர்க்கப்பட்டதாக ஆவணம் சொல்கிறது. திட்டமிட்டு தலைநகரை அமைத்தார்கள். மையத்தை நோக்கி சமச்சீராகச் சாலைகளை உருவாக்கினார்கள். இசை, நடனம், விளையாட்டு என எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன. பாடகர்கள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள் உள்ளிட்ட இசைக்குழுக்கள் இருந்தன. புத்த மதம், டாவோ மதம் பரவலாக பின்பற்றப்பட்டன.

சுவர் ஓவியம்

ஏக்கத்தின் காரணம்

அருங்காட்சியகத்தில், ஓவிய அரங்குகள், ஒலி ஒளி வழியாக வரலாறு சொல்லும் அரங்குகள் இருந்தன. பார்ப்பது, கேட்பது என கற்றுக்கொள்ளும் வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும். அனைத்தையும் இவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என உணர்ந்தேன். நான் சென்றிருந்தபோது, ஹங்கேரி நாட்டு இளவரசியும் ஆஸ்ட்ரியா நாட்டு அரசியுமான, ‘பேரரசி எலிசபெத் மற்றும் அவர்கால பிரபுக்களின் வாழ்க்கை’ எனும் சிறப்புக் கண்காட்சியும் நடைபெற்றது. சீன வரலாற்றை அறிந்த மகிழ்ச்சியில் அருங்காட்சியகத்தைவிட்டு வெளியேறினேன்.

தமிழகத்திலும் அரச வம்சத்தினர் பலர் ஆட்சி செய்துள்ளார்கள். நமக்கு ஓர் அருங்காட்சியகம் இல்லையே எனும் ஏக்கத்தோடு, தங்கும் இடம் நோக்கி இருசக்கர வாடகை வண்டியில் புறப்பட்டேன்.

பேரரசி எலிசபெத் சிலை

நல்ல மனதுக்காரர்

விடுதியின் முகவரியைத் தேடுதலில் கவனம் செலுத்திய ஓட்டுநர் வண்டியைத் திருப்புகையில் தடுமாறினார். என் அலைபேசியின் முதுகுப்பக்கம் ஒரு வளையம் வைத்து அதில் விரலை மாட்டியிருந்த நான், பையோடு தரையை நோக்கிப் போனேன். அலைபேசியோடு கையை ஊன்றியதால் சிறிது சேதம் ஏற்பட்டது. பதறிப்போனார் ஓட்டுநர். வாடகைப் பணம் கொடுத்தபோது “வேண்டாம்” எனச் சொல்லிவிட்டார். தான் தவறு செய்துவிட்ட குற்றஉணர்வு அவர் உடல்மொழியில் தெரிந்தது.

என்னைச் சந்திக்க வந்த சீன நண்பர்களோடு இரவு உணவுக்குச் சென்றேன். இந்நிகழ்வைப் பற்றிச் சொன்னேன். “என்னது, அவர் பணம் வாங்கவில்லையா? ஆச்சர்யமாக இருக்கு. நல்லவங்களும் இருக்காங்க” என சிரித்தார். வெளிநாட்டுப் பயணியை மதித்த ஓட்டுநர் மீது மரியாதை அதிகரித்தது. இரவு தூங்கி எழுந்து, காலையில் சாலையோர கடையில் சாப்பிடச் சென்றேன். எளிய கடைதான். ஆனால், பணம் செலுத்துவதற்கான க்யூ ஆர் கோர்டு அட்டைகள் தொங்கின. பாரம்பரிய சீனாவையும், டிஜிட்டல் சீனாவையும் வியந்து பார்த்துவிட்டு, இந்தியா திரும்பினேன்.

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி

நான்கு கண்டுபிடிப்புகள்

சீனா பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியுள்ளது. அதில் முக்கியமானது காகிதம், அச்சு, வெடிமருந்து மற்றும் திசைகாட்டி. கி.பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவில் பிறந்தவர் திருநங்கை கே லன் (Cai Lun). ஹான் வம்ச (Han) பேரரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் அரசவைக்குள் வேலைக்குச் சேர்ந்து, தன் திறமையால் பேரரசர் ஹெடி ஆட்சியில் தலைமை திருநங்கையாக உயர்ந்தார். இவர்தான் காகிதம் கண்டுபிடித்தவர். தற்போது, முப்பரிமாண பிரின்டிங், டிஜிட்டல் பிரின்டிங் என வளர்ந்துள்ள அச்சுத் துறையானது மரக்கட்டை அச்சு (Woodblock Printing) என்பதாக சீனாவில் ஹான் வம்ச ஆட்சியில்தான் தொடங்கியது. பயணத்தின்போது சூரியன், நிலா, நட்சத்திரங்களைப் பார்த்து முன்னோர்கள் திசைகளை அறிந்திருந்த சூழலில், முதன்முறையாக சீனாவில் திசைகாட்டி (Compass) கண்டுபிடிக்கப்பட்டதும் ஹான் வம்சம் ஆட்சி செய்தபோதுதான். வெடிமருந்தானது, சீன ரசவாதிகளால் டாங் வம்ச ஆட்சியில் (Tang) கண்டுபிடிக்கப்பட்டது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE