பொழுதுபோக்கு, பரீட்சார்த்தம் என 2 வகைமைகளிலுமே பெரும்பாலான எழுத்தாளர்கள் சினிமா வசன வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. ஆனால், எழுத்தாளர்களாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற சில முன்னோடிகள், வசனகர்த்தா வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் தாங்களே திரைப்பட இயக்குநர்களாக, தயாரிப்பாளர்களாகத் தங்களது எல்லையை விஸ்தரிக்கும் முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஜெயகாந்தன், புலமைப்பித்தன், குருவிக்கரம்பை சண்முகம் என்று தொடரும் அந்த வரிசையில், சரித்திர நாவலாசிரியராகப் புகழ்பெற்ற கோவி.மணிசேகரனும் (1927-2021) ஒருவர். அவரது மறைவு குறித்த செய்தி, அவரைப் பற்றிய நினைவலைகளை என்னுள் ஏற்படுத்தியது.
2006-ல், அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது நான் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவன். நாளிதழ் ஒன்றில் பயிற்சிநிலைச் செய்தியாளராகவும் இருந்தேன். கோவி.மணிசேகரனின் எண்பதாவது அகவை நிறைவையொட்டி இணைப்பிதழுக்காகச் சிறு பேட்டியொன்றை எடுப்பதற்கான சந்திப்பு அது. சென்ற சில நிமிடங்களிலேயே என் நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆனால், அவருடனான உரையாடல் சில மணி நேரங்களுக்கு நீண்டுவிட்டது. நந்திக் கலம்பகத்தின் அடிப்படையில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருப்பதாக அவர் சொல்ல, ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்’ என நான் கலம்பகப் பாடலொன்றைச் சொல்ல, எங்களுக்கிடையே நெருக்கம் கூடிவிட்டது.
“நான் எந்த எழுத்தாளனையும் மதிப்பதே கிடையாது. என்னை முழுக்க முழுக்க ஆட்கொண்டவன் ஜெயகாந்தன் மட்டுமே” என்றார் கோவி.மணிசேகரன்.
கோவி. மணிசேகரன் என்றதுமே அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியராகவோ தமிழாசிரியராகவோ இருக்கக்கூடும் என்ற எண்ணம் எழுவது இயல்பானது. ஆனால், பள்ளிப் படிப்பையே முடிக்காதவர் அவர். இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில், படிப்பைத் தொடர முடியாதவர். தனது இலக்கிய ஆர்வத்தால் பழந்தமிழிலக்கியங்களையும் வரலாற்று நூல்களையும் படித்து தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டார் என்பது பெரும் வியப்புக்குரியது. சிறுவயதில், தண்ணீரில் கண்டம் என்று அவரது தாயார் அறிவுறுத்தியதால், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துவிட்டதாக என்னிடம் ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதையே தலைப்புச் செய்தியாக்கி இணைப்பிதழுக்கான பேட்டியை எழுதிக்கொடுத்துவிட்டேன். அவருடனான உரையாடலில், நவீன இலக்கியவாதிகள் குறித்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தெரிவித்த கருத்துகள் ‘கோவி.குணசேகரனிடம் சில கேள்விகள்’ என்ற தலைப்பில் தஞ்சையிலிருந்து வெளிவந்த ‘சௌந்தர சுகன்’ இலக்கிய மாத இதழில் செப்டம்பர் 2006 இதழில் வெளியானது.
எனது முக்கியமான கேள்வியே, அவருடன் சேர்ந்து ஒரே மேடையில் பரிசைப் பகிர்ந்துகொள்வதற்கு ஜெயமோகன் மறுத்ததைப் பற்றித்தான். “எல்லா மோகங்களும் கோவி என்றால் குத்தித்தான் பார்ப்பார்கள். அதையெல்லாம் சட்டை செய்கிறவன் கோவி அல்ல. காரணம், அவன் இரும்பு மனிதன். நான் எந்த எழுத்தாளனையும் மதிப்பதே கிடையாது. என்னை முழுக்க முழுக்க ஆட்கொண்டவன் ஜெயகாந்தன் மட்டுமே” என்றார்.
“ஜெயமோகன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜெயகாந்தன், நான் எழுதி முடித்த பின் அவரிடமிருந்து எழுத்து பீறிட்டு வருகிறது, இந்த இரண்டுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று மறைமுகமாகத் தன் இலக்கிய வாரிசாக ஜெயமோகனை அடையாளம் காட்டினார். அப்படியென்றால், ஜெயகாந்தன் மதிக்கும் எழுத்தாளர் அல்லவா ஜெயமோகன்?” என்பது எனது குறுக்குக் கேள்வி.
“அது ஜெயகாந்தனுடைய பலவீனம். ஜெயகாந்தன் பேச்சை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை, ஆசிர்வதிப்பதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம் அல்லவா?” என்று எதிர்க்கேள்வி கேட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கோவி. மணிசேகரன்.
இலக்கிய உலகம் குழு மனப்பான்மையோடு செயல்படுவதாகவும் பிரபல வார இதழ்கள் தொடர் எழுதக் கூப்பிட்டால், எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு அவற்றின் பின்னால் ஓடுவார்கள் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். அவர் அன்று சொன்னது உண்மைதான் என்பதைப் பின்பு நானும் உணர்ந்துகொண்டேன். தீவிர இலக்கியம் பேசியவர்களும் இன்று சரித்திர நாவல்களின் திரையாக்கத்துக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
நாவல்கள், சிறுகதைகள் என்று ஐநூறுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியவர் கோவி.மணிசேகரன். கல்கிக்குப் பிறகு தன்னை மட்டுமே அவர் சரித்திர நாவலாசிரியராகக் கருதிக்கொண்டார். மற்றவர்கள் எழுதியவை தரித்திரக் கதைகள் என்பது அவரது கடுமை தொனிக்கும் விமர்சனம். ஆசிரிய விருத்தங்களும் அவருக்குக் கைவரப்பெற்றிருந்தது.
அண்மையில் மறைந்த விஜயரமணி என்கிற டி.எஸ்.ராகவேந்திராவை ஒரு குணச்சித்திர நடிகராகவே தமிழ் திரையுலகம் நினைவுகூர்கிறது. அவரது இசைத் திறமையை தான் இயக்கிய ‘யாகசாலை’ திரைப்படத்தின் வாயிலாக உலகறியச் செய்தவர் கோவி.மணிசேகரன். அதே படத்தில், அவரும் சில பாடல்களை எழுதியிருக்கிறார். ‘கண்ணன் அவன் என்ன சொன்னான்’ என்ற அவரது பாடல் கீதையின் சாரத்தைப் பல்லவியாகக் கொண்டது.
அவர் இயக்கிய மற்றொரு திரைப்படமான ‘தென்னங்கீற்று’ கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விருதும் பெற்றது. டி.எஸ்.ராகவேந்திராவின் கரகரத்த குரலுக்காகவே அவர் பாடிய ‘ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது’ பாடலை அடிக்கடி கேட்பதுண்டு. அப்போது, ‘யாகசாலை’ இயக்குநரான கோவி.மணிசேகரனும் நினைவுக்கு வந்துவிடுவார்.
(திங்கள்கிழமை சந்திப்போம்)