பயணம் செல்வதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருக்கும். என் நண்பர் ஒருவர், கிராமங்களையும் மலைகளையுமே எப்போதும் தேடிச் செல்வார். சிறு குடில் அமைத்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு மூன்று நாட்கள் கழித்துத் திரும்புவார்.
அப்பயணத்துக்கென தனியாக ஷு, குளிராடை, குடில் அமைக்கத் தேவையான பொருட்கள், சிறிய சமையல்வாயு அடுப்பு, சமையல் பொருட்கள் என அவரின் திட்டமிடுதலைக் கேட்கும்போதே உற்சாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும். அவரோடு சேர்ந்து செல்ல ஆசை ஆர்ப்பரிக்கும். ஆனால், அவரும் என்னைப்போல, தனிப்பயணர் என்பதனால் கேட்பதைத் தவிர்த்துவிட்டேன்.
திட்டமிடலுக்கான செயலி
நகரங்களைத் தேடிச் செல்வதே எனக்குப் பிடிக்கும். எந்த நாடு, எந்த மாநிலம், அதில் எந்த நகரம் என்பதை முதலில் முடிவு செய்வேன். அந்நகரத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் எவை என கூகுளில் தேடுவேன். நான் விரும்பும் இடங்களைக் குறித்துக்கொள்வேன். ’Visit A City’ எனும் செயலி என் பயணத் திட்டமிடலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நகரத்தின் பெயரைப் பதிவிட்டால், அங்குள்ள முக்கிய இடங்களுக்குத் தகுந்தாற்போல எத்தனை நாட்களில் பார்க்கலாம் என்பதைக் காட்டும். நமக்கான நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (உதாரணமாக 2 நாட்கள்). தேர்ந்தெடுத்தவுடன், குடும்பத்துடன் பார்க்க, ஆறஅமர பொறுமையாகப் பார்க்க, குறைந்த நேரத்தில் நிறைய இடங்களைப் பார்க்க, வரலாற்று இடங்கள், அருங்காட்சியகங்கள் என பல்வேறு தலைப்புகள் இருக்கும். ஏதாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தால், ஒரு நாளில் எத்தனை இடங்களைப் பார்க்கலாம் என்பது தெரியும் (உதாரணமாக 4 அல்லது 5 இடங்கள்).
பிறகு, ஓர் இடத்தின் பெயரைத் தொடவேண்டும். அந்த இடம் எங்குள்ளது, எந்தெந்த நாளில் எந்தெந்த நேரத்தில் திறந்திருக்கும், பார்க்க எவ்வளவு நேரம் தேவைப்படும் மற்றும் அந்த இடத்தைப் பற்றிய சிறு குறிப்பு என அனைத்தும் கிடைக்கும். ஓர் இடத்தைப் பார்த்த பிறகு அடுத்த இடத்துக்கு நடந்து செல்ல வேண்டுமா, பேருந்து அல்லது தொடர்வண்டியில் செல்ல வேண்டுமா, எவ்வளவு நேரம் எடுக்கும் என்கிற தகவலும் இருக்கும். செயலி காட்டாத, ஆனால் நமக்குத் தெரிந்த மற்ற இடங்களைச் சேர்க்கவும், விரும்பாத இடத்தை நீக்கவும், முதல் நாளில் உள்ளதை 2-ம் நாளிலும் 2-ம் நாளில் உள்ளதை முதல் நாளில் இணைக்கவும் வாய்ப்புள்ளது. காலையில் நாம் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்கலாம். நகரில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்தை அறிந்து முன்பதிவும் செய்யலாம்.
திட்டமிடல் தொடங்கியது
சீனப் பெருஞ்சுவரை பார்க்க விரும்பி Visit A City செயலியிலும் கூகுளிலும் தேடினேன். ஒருநாள் பயணத்துக்கான கட்டணம், 300 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருந்ததால் மலைத்துப் போனேன். பேருந்து அல்லது தொடர்வண்டி இருந்தால் நாமே தனியாகச் சென்று வந்துவிடலாமே என அதற்கான வாய்ப்பையும் தேடினேன். அது எளிதானதல்ல என்பதை அறிந்து, பல நாட்கள் பல்வேறு இணையப் பக்கங்களில் உலாவினேன். மதிய உணவுடன் சேர்த்து 37 அமெரிக்க டாலர் மட்டுமே வசூலிக்கும் நிறுவனம் கண்ணில்பட்டது. அந்நிறுவனம் தொடர்பான பின்னூட்டங்களையும் வாசித்தபிறகு முன்பதிவு செய்தேன்.
பெய்ஜிங்கில் இருந்து செல்கிறவர்கள் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்கு வசதியாக, மியூசியானாயு (Mutianyu) மற்றும் படாலிங் (Badaling) என்னும் 2 இடங்களைச் சீன அரசு பராமரிக்கிறது. மிகவும் உயரமான மியூசியானாயு பகுதியில் உள்ள சுவரின் இருமருங்கிலும் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. பெருஞ்சுவர் நெடுந்தொடரில் அரிதாகக் காணக்கிடைக்கும் 3 கண்காணிப்பு கோபுரங்களும் இப்பகுதியில் உள்ளன. எனவே மியூசியானாயு செல்கின்ற சுற்றுலா குழுவைத் தேர்வு செய்தேன்.
பேருந்து நிற்கும் இடத்தை ஓட்டுநர் சொன்னார். நான் நடந்து சென்றபோது, பேருந்து உதவியாளர் ஒருவர் என் விடுதி தேடி வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். அவருடன் சென்று பேருந்தில் ஏறினேன். இத்தாலி தம்பதி, லண்டனில் வாழும் பாகிஸ்தானியர் குடும்பம், சீனாவின் வேறொரு மாகாணத்தில் தங்கியிருந்த கேரளக் குடும்பம், நான் என மொத்தமே 11 பேர்தான். அனைவரும் மியூசியானாயு நோக்கிப் பயணித்தோம்.
பெருஞ்சுவரின் வரலாறு!
சீனப் பெருஞ்சுவரில் நடக்கப்போகிறேன் என நினைத்த நொடியே, இதயத் தமனிக்குள் வேகமாக நீந்தியது ரத்தம். வழி நெடுக பெருஞ்சுவரின் வரலாற்றை எம் செவி வழியே புகட்டினார் வழிகாட்டி.
“சீனப் பெருஞ்சுவர் ஒரே சுவர் அல்ல. முற்காலத்தில் சிறு சிறு நாடுகளாக சீனா இருந்தபோது அரசர்கள் கோட்டைச் சுவர்கள் எழுப்பினார்கள். பேரரசர் சின் ஷி ஹுவாங் கி.மு. 221-ல் சீனாவை ஒரே நாடாக்கி, சுவர்கள் சிலவற்றை இடிக்கவும் கட்டவும் ஆணையிட்டார். கி.பி. 1644-ல் முடிவுக்கு வந்த மிங் வம்ச ஆட்சிவரை, பேரரசர்கள் ஆங்காங்கே சுவர்கள் கட்டினார்கள். மலை, புல்வெளி, பீடபூமி, பாலைவனம், ஏரிக்கரை அனைத்தின் மீதும் பெருவிரல் ஊன்றி நிற்கும் சுவர்களின் மொத்த நீளம் ஏறக்குறைய 21,196 கிலோமீட்டர். அவற்றுள் மிக நீண்ட சுவர் ஏறக்குறைய 6,300 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாண்கிடையாக கிடக்கிறது. பராமரிப்பின்மை, இயற்கைப் பேரிடர், நகர விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்காக அரசாங்கம் இடித்தது, சீனப் பண்பாட்டுப் புரட்சியில் (1966-1976) கற்களை மக்கள் பெயர்த்தது போன்ற காரணங்களால் பெருஞ்சுவர் அழிந்துவிட்டது என்றுகூட சொல்லலாம். மிங் வம்சத்தினர் கட்டிய பகுதிகள்தான் நல்ல நிலையில் இன்றும் இருக்கின்றன. நிலவில் இருந்தும் இச்சுவரைப் பார்க்கலாம் என்பது மெய்யல்ல. வேலை செய்கையில் இறந்தவர்கள் சுவருக்குள்ளேயே புதைக்கப்பட்டார்கள் என்பதுவும் தற்போதுவரை உண்மையல்ல.”
பெருஞ்சுவர் பேரனுபவம்
2 மணி நேரம் பயணித்து மலையடிவாரம் சென்றோம். “அதோ தெரியுது பெருஞ்சுவர்” - சுட்டிப் பெண் ஒருத்தி சுட்டிக்காட்டினாள். ஆமாம், மலைகளின் மேலே மேகம் படுத்துக் கிறங்குவதுபோல தெரிந்தது சுவரின் வனப்பு. பெருஞ்சுவரை அடைய மலையேறலாம் அல்லது கம்பிவட ஊர்தியில் (Cable car) பயணிக்கலாம். கம்பிவட ஊர்திக்கான 7 டாலர் கட்டணத்தை நாங்கள் தனியாக வழங்கியபிறகு, மலையில் தவம் செய்யும் மரங்களுக்கு மேலே பவனி போனோம். காற்றில் தவழும் நீர் போல மலையில் இலைகள் தவழ்வதைக் கண்டோம். நாங்கள் இறங்கிய இடத்தில் பெருஞ்சுவரின் அகலம் 4 முதல் 5 மீட்டர். மொட்டை மாடியிலிருந்து தடுமாறி விழுந்துவிடக் கூடாதென்று சுவர் கட்டியிருப்பார்களே அதே அமைப்பில் உயரமான சுவர்கள் இருபுறமும் கண்டேன். பெருஞ்சுவரைத் தொட்டுத் தடவி ஆனந்தித்து உள்ளே இறங்கினேன். உண்மையில், அதைச் சுவர் என்று சொல்வதைவிட தெரு என்பதே சரி.
பாதை முழுவதும் கல் படிகள். பாறைகளைச் செதுக்கி அடுக்கியதால் அவை பாறை பற்கள் போல் தோன்றின. ஓர் ஒழுங்கில்லை. நீளமாக, உயரமாக, குட்டையாக, சமதளமாக மாறி மாறி கொலாஜ் (Collage) பேரனுபவம் தந்தது. தெரு வளைந்து நெளிந்து சென்றது. கீழே இறங்கியது. மேலே ஏறியது. நடந்தேன். தாவினேன். கைகளை மேலே எழுப்பி கால் மடக்கி எம்பிக் குதித்தேன். தனியாகப் புன்னகைத்தேன். கை விரித்து அடிவயிறுவரை முழு மூச்சு இழுத்து வெளியேற்றினேன். தடையில்லா மூச்சு இதயத்தின் வலுவை இசைத்தது.
தாழ்வான இடப்பக்கம் 10 நிமிடம் ஏறிய பிறகு, திரும்பி வலப்பக்கம் 25 நிமிடங்களுக்குப் படியேறி இறங்கினேன். குறிப்புகளை வாசித்தேன். வீரர்களின் ஓய்வுக்கும் உணவுக்கும் தேவையான அறைகள் இருந்தது அந்தக் குறிப்புகளில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்களும் ரகசியப் பாதைகளும் பெருஞ்சுவரின் பயன்பாட்டை விளக்கின.
'தூங்கும் புலியைப் பறை கொண்டு எழுப்பினோம்' எனும் பாரதிதாசன் கவிதை பொறித்த ஆடை அணிந்திருந்த நான், உலகின் முதுமொழியாம் தமிழ் மொழியுடன் உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் பெருமிதத்துடன் சுற்றித் திரிந்தேன். மக்கள் உயிர் கொடுத்து கட்டிய, வீரர்கள் கண் விழித்துப் போரிட்ட கற்களின் மீது நன்றியுணர்வுடன் நடந்து மகிழ்ந்து திரும்பினேன்.
(பாதை நீளும்)
பாக்ஸ்
முன்பதிவின்போது கவனிக்க வேண்டியவை!
சுற்றுலாத் தலங்களின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நிறுவனங்கள், ஏறக்குறைய உலகின் எல்லா முக்கிய நகரங்களிலும் உண்டு. கட்டணம் எவ்வளவு, அரை நாளா அல்லது ஒருநாள் பயணமா (பகல் மட்டும்), எத்தனை நாளுக்குள் ரத்து செய்யும் வசதி உள்ளது, ரத்து செய்தால் பணம் திரும்பி கிடைக்குமா, முக்கிய இடத்துக்குச் சென்று சேருவதற்கு முன்பாக வேறு என்னென்ன இடங்களையும் கூடுதலாகக் காட்டுவார்கள், நாம் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து அழைத்துச் செல்வார்களா, அவர்களின் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டுமா அல்லது பொது இடம் எங்காவது வரச்சொல்லி அழைத்துச் செல்வார்களா, இதற்கு முன்னாள் சென்று வந்தவர்களின் பின்னூட்டங்கள் என்ன சொல்கின்றன, நாம் பார்க்க விரும்பும் இடங்கள் அனைத்தும் அதில் இருக்கின்றனவா என எல்லா தகவல்களையும் மிகக் கவனமாகப் பார்த்து பதிவு செய்ய வேண்டும்.