சிறகை விரி உலகை அறி - 22

By சூ.ம.ஜெயசீலன்

அருகாமை கூறும் கிராமப் பேருந்தின் ஒலி, முதல் புரிதலில் காதலைக் கசியவிடும் விழி, மழைதாங்கிய மேகத்தில் பரவும் மின்னொளி அனைத்தும் அழகியல் பொதிந்த அறிமுகங்கள். நல்லதோர் அறிமுகம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும். எதிர்வரும் பொழுதுகளை பழுதின்றி ரசிக்கச் செய்யும். சீனாவில் ஆங்கிலம் பேசுவோர் மிகக் குறைவுதான். ஆனாலும், உலகப் பயணிகளுக்காகச் சுற்றுலாத் தளங்களிலும், அருங்காட்சியகத்திலும் முக்கியத் தகவல்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்து ஆவலைத் தூண்டுகிறார்கள்.

’மக்களும் தலைவர்களும்’ அரங்கில்

ஆப்பிரிக்கச் சிற்பக்கலை

சீன தேசிய அருங்காட்சியகத்தில் நான் வியந்து ரசித்த ஓர் அரங்கம், ‘ஆப்பிரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்பங்களின் கண்காட்சி’. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் அகலம் குறைவான, உயரமான மரக்கட்டைகளில் உருவாக்கியுள்ள ஏறக்குறைய 600 சிற்பங்கள் அங்கு இருந்தன.

குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை முறையை, செங்குத்தான ஒரு கட்டையின் மேல் அடுத்தடுத்து செதுக்கியுள்ளார்கள். இதே போன்ற நுட்பத்தில், குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பதும் குரங்குகளின் கூட்டு வாழ்க்கையும் செதுக்கப்பட்டுள்ளன. கருமைநிறச் சிற்பங்களைப் பார்க்கும்போதே ஆப்பிரிக்க மக்களின் அழகு நம் மனதில் அப்பிக்கொள்கிறது. “ஆப்பிரிக்கக் கலைகளில் தனித்துவமிக்கது அவர்களின் சிற்பக் கலை. பிகாசோ, ஹென்றி மட்டிஸ் (Henri Matisse), ஜார்ஜ் பிராக் (George Braque) உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு ஆப்பிரிக்க சிற்பங்கள் பெரும் உந்துதலாக இருந்துள்ளன. பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே நட்பையும் கலாச்சாரத் தொடர்பையும் உறுதிப்படுத்துகின்ற அற்புதமான தொடர்பு சாதனம் கலை. எங்கள் பார்வையாளர்கள், அழகைக் கண்டு ரசிப்பதோடு மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கக் கலைகள் குறித்து தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் உந்துதல் பெறுவார்கள் என நம்புகிறேன்” என அருங்காட்சியகத்தின் இயக்குநர் சொல்வதைத் தகவல் பலகையில் வாசித்தேன்.

’மக்களும் தலைவர்களும்’ அரங்கில் உள்ள சிலை

’மக்களும் தலைவர்களும்’ அரங்கில் உள்ள சிலை

’மக்களும் தலைவர்களும்’ அரங்கில் உள்ள ஓவியம்

ஆப்பிரிக்காவின் சிற்பங்கள்

ஆப்பிரிக்காவின் சிற்பங்கள் - குரங்குகள்

ஆப்பிரிக்காவின் சிற்பங்கள் - தண்டனைகள்

சீன மக்கள் குடியரசு உதயமானதை மாவோ அறிவித்த நிகழ்வு

சீனாவில் மகாத்மா காந்தி

அடுத்தாக, ‘மக்களும் தலைவர்களும்’ அரங்கில் நுழைந்தேன். நாடு புத்துயிராக்கம் பெறுவதற்காக, 20-ம் நூற்றாண்டில் உழைத்த தலைவர்கள் மற்றும் மக்களைக் குறித்த ஓவியங்களும், சிலைகளும் அங்கே இருந்தன. அரங்கத்தின் மையத்தில் மிகப்பெரிய ஓவியம் பார்த்தேன். மேடையில், 65 முக்கிய அதிகாரிகளுடன் சேர்ந்து சீன மக்கள் குடியரசு உதயமானதை மாவோ அறிவித்த நிகழ்வு அது. சமூக வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய 20-ம் நூற்றாண்டின் 100 வரலாற்று நாயகர்களின் உருவங்கள் வரையப்பட்ட, மற்றொரு பிரம்மாண்ட ஓவியம் அங்கே இருக்கிறது. அதில், நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படத்தைப் பார்த்து பெருமிதம் கொண்டேன்.

அருங்காட்சியகத்திலிருந்து வெளியேறி, புரட்சியாளர் மாவோவின் கல்லறையைப் பார்க்கச் சென்றேன். உடலைப் புதைக்காமல் மருந்து செலுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் (embalm). உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. நேர்த்தியாக உடை அணிந்திருக்க வேண்டும். பை மற்றும் புகைப்படக் கருவிகளைப் பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும், அலைபேசியை அமைதியாகவோ அணைத்தோ வைக்க வேண்டும், தொப்பி அணியக்கூடாது போன்ற பல நிபந்தனைகள் அங்கு விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை மனதில் அசைபோட்டுக்கொண்டே சென்றேன். ஜுலை மாதம் காலை 7 மணி முதல் 11 மணி வரைதான் பார்க்க அனுமதியாம். நான் சென்றபோது 4 மணியாகிவிட்டதால் உள்ளே செல்ல இயலவில்லை. சதுக்கத்தில் அமர்ந்து களைப்பு நீங்கிய பிறகு, இச்சதுக்கத்தை முழுமையாகப் பார்க்க 2 நாட்களாவது வேண்டும் என நினைத்துக்கொண்டே அறைக்குத் திரும்பினேன்.

அதிகாலை ஆனந்தமே!

காலையில், விண்ணக ஆலயத்துக்கு (The Temple of Heaven) புறப்பட்டேன். பேருந்திலிருந்து இறங்கி, பெரிய பூங்காவை நடந்து கடக்க வேண்டும். பூங்காவில் மக்கள் குழுவாக உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். இறகுப் பந்து விளையாடினார்கள். மிதிவண்டி ஓட்டினார்கள். உடல் உறுப்புகளை மெல்ல தியான நிலையில் வளைத்து தாய் சி (Tai Chi) உடற்பயிற்சி செய்தார்கள். பெண்களும் ஆண்களும் சும்பா (Zumba) நடனம் ஆடினார்கள். அதாவது, எல்லாரும் போதுமான இடைவெளியில் நிற்க, இசை இசைக்க, வழிகாட்டி ஒருவர் அனைவருக்கும் முன்பாக நின்று உடற்பயிற்சி நடனம் ஆடுகிறார். அவர் ஆடுவதையே மற்றவர்களும் ஆடுகிறார்கள். மேலும் சிலர், சிபா (Sipa) விளையாடினார்கள். அதாவது, நம் கிராமங்களில் சாமிக்கு நேர்ச்சை எனச் சொல்லி காசு முடிந்து வைத்திருப்பார்களே! அதை நினைத்துக்கொள்ளுங்கள். நாணயம் அளவுள்ள உலோகம் ஒன்றைத் துணியில் முடிந்து அதைக் கரண்டை காலால் எதிரில் நிற்பவரை நோக்கி உதைக்க வேண்டும். கீழே விழுந்துவிடாமல் கரண்டை காலால் அவர் இன்னொருவருக்கு உதைப்பார். இது படு சுவாரசியமாக இருக்கும். கீழே விழுந்துவிடக்கூடாது என்பதால், கால்களைப் பல திசைகளில் கொண்டுசென்று முன்னோக்கி உதைப்பார்கள். சில வேளைகளில் கீழே விழாமல் தனக்குத்தானே எத்தனை முறை ஒருவர் அடிக்கிறார் எனவும் எண்ணுவார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தேன்.

நல் அறுவடைக்கான செப அறை

பழங்காலத்தில் பருவ மாற்றங்களையும் இயற்கைப் பேரழிவுகளையும் அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இயலாததால், விண்ணகத்தில் இருந்து யாரோ இயக்குவதாகவும், தங்களை ஆளும் பேரரசர் விண்ணகத்தின் மகன் எனவும் சீன மக்கள் நம்பினார்கள். எனவே, மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும், தங்களைப் பாதுகாக்கும் விண்ணகக் கடவுளைத் திருப்திபடுத்தவும், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் விண்ணக மண்ணகக் கடவுளுக்கு பலி செலுத்துவதை, சடங்குகள் செய்வதை சீனப் பேரரசர்கள் தங்கள் கடமையாக நினைத்தார்கள். அதன்படி, 1420-ல் பேரரசர் யாங்ல (Yongle), பலி செலுத்தும் பெரிய அறை ஒன்றை (The great hall of sacrifice) செவ்வக வடிவில் நிர்மாணித்தார். அது, 38 மீட்டர் உயரம், 36 மீட்டர் அகலத்தில் ஆணிகளே இல்லாமல் முழுவதும் மரத்தால் கட்டப்பட்டது.

அக்காலச் சீனர்கள், விண்ணகம் வட்டமாகவும், மண்ணகம் சதுரமாகவும் இருப்பதாக நம்பினார்கள். அதன்படி, 1545-ல் சதுர வடிவ அடித்தளத்தில் மரத்தாலான வட்ட வடிவுக் கூடம் இருப்பதுபோல் அமைத்தார்கள். அதன் 3 அடுக்குக் கூரை 28 தூண்களின் துணையுடன் நிற்கிறது. இதில், மையத்தில் உள்ள 4 தூண்கள் பருவங்களையும், 12 உள் தூண்கள் மாதங்களையும், 12 வெளித் தூண்கள் ஒரு நாளையும் குறிக்கின்றன (சீனாவில் பாரம்பரியமாக, ஒரு பகலையும் இரவையும் 12 காலங்களாகப் பிரித்தார்கள். தற்போதைய வழக்கப்படி யோசித்தால், ஒவ்வொரு காலமும் 2 மணி நேரங்களை உள்ளடக்கியதாகும்). வானத்தின் நீல நிறம் விண்ணகத்தின் நிறம் என்கிற நம்பிக்கையில், 1751-ல் கூரையை நீல நிறத்தில் மாற்றியதுடன், ‘பலி செலுத்தும் பெரிய அறை’ எனும் பெயரை, ‘நல் அறுவடைக்கான செப அறை’ (The hall of prayer for good harvest) எனவும் மாற்றினார்கள்.

விண்ணகக் கோயில்

இன்னொரு முக்கியமான மாற்றமும் இதே கோயில் வளாகத்தில் நிகழ்ந்துள்ளது. 1530-ல் மிங் வம்சத்தின் 11-வது பேரரசரைச் சந்தித்த அமைச்சர்கள், விண்ணகத்தையும் மண்ணகத்தையும் தனித்தனியாக வணங்க வேண்டும் எனச் சொன்னார்கள். இதை ஏற்றுக்கொண்ட பேரரசர், தற்போதைய, நல் அறுவடைக்கான செப அறைக்குத் தெற்கே வட்ட வடிவில் படிப்படியாக மேலே உயர்ந்து செல்லும் மூன்றடுக்கு (Circle mount alter) பீடத்தை மார்பிள் கற்கலால் கட்டினார். பீடத்தின் உச்சியில் பேரரசர் பலி செலுத்தினார். இந்த வட்டத்துக்கு வெளியே சதுர வடிவில் 2 சுற்றுச்சுவர்கள் உள்ளன. 1534-ல் விண்ணகக் கோயில் (Temple of Heaven) என இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. பெய்ஜிங் நகரின் வடக்கே மண்ணகத்துக்கான பீடம் உருவாக்கப்பட்டது. நல் அறுவடைக்கான செப அறைக்கும் விண்ணகக் கோயிலுக்கும் நடுவே அமைந்துள்ள கூடாரத்தில், செபங்கள் அடங்கிய கற்பலகைகள் பாதுகாக்கப்பட்டன.

சிரிக்கும் புத்தர்

சிரிக்கும் புத்தரின் சிற்பம் வாங்க வேண்டும் என்பது என் பல நாள் அவா. பாங்காக்கில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவேயில்லை. ‘ஜிம் தாம்சன் வீடு அருங்காட்சியக’ வளாகத்தில் விற்பனை செய்யப்பட்ட புத்தரின் பழைய சிலை ஒன்று மட்டுமே வாங்கிவந்தேன். சீனாவிலும் தேடினேன். விண்ணகக் கோயிலின் நடைபாதைக் கடையொன்றில், சிரிக்கும் புத்தரின் மரச்சிலை பார்த்தேன். விடுவேனா நான்… உடனடியாக வாங்கிவிட்டேன்!

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி

மூன்று முக்கியச் சடங்குகள்

விண்ணகக் கோயில் வளாகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 3 முக்கியமான நாட்களில் பேரரசர் பலி செலுத்தினார். 1. லூனார் நாட்காட்டியின் முதல் மாதம் (ஜனவரி அல்லது பிப்ரவரி): எதிர்வரும் ஆண்டு நல்ல அறுவடை நடக்க வேண்டும் என நல் அறுவடைக்கான செப அறையில் செபித்தார். 2. கோடைக்காலத்துக்கான நகர்வு (On the summer solstice ஜுன் 21 அல்லது 22): வட்ட வடிவ மலை பீடத்துக்குச் சென்று, நல்விளைச்சலுக்காக நல்ல மழையும், பாதுகாப்பான பருவநிலையும் வேண்டி மன்றாடினார். 3. குளிர்காலத்துக்கான நகர்வு (On the winter solstice டிசம்பர் 21 அல்லது 22): வட்ட வடிவ மலை பீடத்தில், அந்த ஆண்டு நடந்த அறுவடைக்காக நன்றி சொல்லி ஒப்புக்கொடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE