சிறகை விரி உலகை அறி- 21

By சூ.ம.ஜெயசீலன்

நாம் சுற்றுலாவுக்காக ஆயத்தமாகும்போது பெற்றோர்களும் நண்பர்களும், “தைரியமா போய்ட்டு வா, பாத்து செலவு செய், எப்போதும் சேர்ந்தே போ, தெரியாத ஆட்களிடம் கவனமா இரு, பணம் பத்திரம்” என சொல்லி அனுப்புவார்கள்.

“சொல்லுவது உங்கள் கடமை! சொல்லுங்க சொல்லுங்க” என சிலவேளைகளில் மனம் கேலி செய்யும். ஆனால், கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சீனப் பெண்களின் புன்னகைக் கண்கள் என் புத்திக்குள் புகுத்தியது இன்னும் உலராமல் இருக்கிறது.

“நெடும் பயணத்தில்” பங்குபெற்ற செஞ் சீனத்தின் ராணுவத் தளபதிகள்

தடைசெய்யப்பட்ட நகரத்தைப் பார்க்க நுழைவுச் சீட்டு கிடைக்காததும், வரிசையில் மணிக்கணக்கில் நின்றதும், தியானன்மென் சதுக்கத்தின் முகப்பிலிருந்து தீர்க்கரேகை வாயில்வரை கூட்டத்தோடு 2 கிலோ மீட்டர் நடந்ததும் ஏற்கெனவே கிறுகிறுக்கச் செய்திருந்தது. உச்சி வெயில் என் தலையில் முடி இல்லாத இடம் பார்த்து ஒளி நடவு செய்தது. நாவில் இருந்த ஈரத்தையும் நாசூக்காக உறிஞ்சியது. மரங்களெல்லாம் இலைகளை இசைக்காமல் வெயிலை முறைத்தன.

பீங்கான் பாத்திரங்கள்

சீன தேசிய அருங்காட்சியகம்

பண்டைய சீன நாணயங்கள்

டிரம் இசைத்துக்கொண்டு பாடும் கலைஞர் (மண் சிலை)

அமர்ந்த நிலையில் போதிசத்துவா (மிங் வம்ச காலம் 1368-1644)

டிரம் இசைத்துக்கொண்டு பாடும் கலைஞர் (மண் சிலை)

அனுபவ ஞானம்

தண்ணீர் புட்டி வாங்கி முகத்தையும் நாவையும் குளிர்வித்தேன். சதுக்கத்தின் கிழக்கில் இருக்கும் சீன தேசிய அருங்காட்சியகம் (National museum of China) நோக்கி நடக்கத் தொடங்கினேன். மெல்ல அப்படியே சுற்றி, 3 கிலோமீட்டர் நடந்து மறுபடியும் 2 மணி நேரம் வரிசையில் நின்றால் அருங்காட்சியகத்தினுள் நுழையலாம்.

முன்னும் பின்னும் உற்சாகமாக நடந்தவர்கள் எனக்கும் உற்சாகம் ஊட்டினார்கள். திடீரென ஒரு குரல்: “என்ன சார் டிக்கெட் கிடைக்கலியா?” திரும்பினேன். கேட்டவர்கள் இரண்டு இளம் பெண்கள். சீனர்கள் என்பதை முக வடிவு சொல்லியது. அவர்கள் பேசிய சுத்தமான ஆங்கிலம் ஆச்சரியம் தந்தது.

“ஆமாம் டிக்கெட் முடிந்துவிட்டது.”

“எங்களுக்கும் கிடைக்கல சார்.”

“இணையதளம் வழியாக முன்பதிவு செய்திருக்கலாம். நேரடியாக வாங்கலாமே என வந்தேன். கிடைக்கவில்லை.”

“இன்று மக்களும் அதிகம் வெயிலும் அதிகம்” என்று சொல்லி உதட்டில் தொடங்கி கண்களில் சிரித்தார்கள்.

“நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்களே சீனாவா அல்லது வேறு நாடா?”

“சீனாதான். அடுத்து எங்க சார் போறிங்க?”

“அருங்காட்சியகத்துக்குப் போகிறேன்.”

“இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணுமே. சரி நாங்களும் அந்தப் பக்கம்தான் செல்கிறோம். வாங்க போவோம்.”

இருமருங்கிலும் இருந்த பெரிய மரங்களின் உதவியால் நிழற்சாலையில் பேசிக்கொண்டே நடந்தோம். தொடக்கத்திலிருந்தே ஒருவர்தான் அதிகம் கலகலப்பாகப் பேசினார். எங்கிருந்து வருகிறேன், எங்கு தங்கியிருக்கிறேன், அடுத்து எந்தெந்த இடங்களைப் பார்க்கப் போகிறேன் என பலவற்றைக் கேட்டார்கள், அவர்களைப் பற்றியும் சொன்னார்கள்.

மக்களோடு மக்களாக 200 மீட்டர் நடந்திருப்போம். “வாங்க சார் சேர்ந்து பியர் குடிக்கலாம்” என வாஞ்சையோடு அழைத்தார்கள். என் மூளையில் பல்பு எரிந்தது. “நன்றி. நான் குடிக்கிறது இல்லை” என்றேன். “டீயாவது சேர்ந்து குடிக்கலாம் வாங்க” என்றார்கள். சேர்ந்து என்பதை அழுத்தமாக உச்சரித்தார்கள். “இல்லை நீங்கள் குடியுங்கள். நன்றி” முன்னோக்கி நடந்தபடி புன்னகை மாறாமல் சொன்னேன். அவ்வளவுதான் இருவரும் ஆங்கிலத்தில் அசிங்கமாகத் திட்டத் தொடங்கினார்கள். அவர்கள் எதிர்பார்த்த ஏதோ கிடைக்கவில்லை. நான் சிரித்துக்கொண்டே நடந்தேன். அவர்களின் வார்த்தைகள் என் பின்னந்தலையில் பட்டு சரிந்தன.

நான் சென்றிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என நினைக்கவே சிரிப்பாகவும் கொஞ்சம் நடுக்கமாகவும் இருந்தது. வியட்நாம் பயணத்தின்போது, “ஹோ சி மின் நகரில் உள்ள கோகனட் கேர்ஸிடம் (பாலியல் தொழிலாளிகள்) கவனமாக இருங்கள்” என வழிகாட்டி எச்சரித்ததும் நினைவில் வந்தது.

ஒருவேளை அப்பெண்களிடம் என் கடவுச்சீட்டு பறிபோயிருந்தால், இந்திய தூதரகத்துக்கு சென்று கடவுச்சீட்டு மற்றும் விசா நகலைக் காட்டி நடந்ததை விளக்கியிருக்க வேண்டும். அடுத்து செய்ய வேண்டியதை அவர்கள் செய்திருப்பார்கள். ஆயினும், அவமானம், இயலாமை, ஆபத்து அனைத்திலும் இருந்து மீண்டு வருவது எளிதான காரியம் இல்லைதானே!

தீர்க்கமான திட்டமிடல்

தியானன்மென் சதுக்கத்தின் தெற்கே மாவோவின் கல்லறை, வடக்கே தடைசெய்யப்பட்ட நகரம், மேற்கே, ‘மக்களின் பெரிய மண்டபம்’ (Great Hall of the People) இருக்கின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் வருகிறார்கள். அத்தனை பேரும் எங்கு சென்று இளைப்பாறுவது? எங்கே கால் நீட்டி அமர்ந்து வாய்வழியே களைப்பை வெளியேற்றி முகம் துடைப்பது? கிழக்கே இருக்கும் சீன தேசிய அருங்காட்சியகம்தான் அனைவரையும் அரவணைக்கிறது. 65,000 சதுர மீட்டர் பரப்பளவில், 7 மாடிகளில் 48 காட்சி அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இது, உலகில் 3-வது பெரிய அருங்காட்சியகமாகும்.

இங்கு நிரந்தரமான பல்வேறு அரங்குகளை இலவசமாகப் பார்க்கலாம். குறிப்பிட்ட சில அரங்குகளையும் சிறப்பு கண்காட்சிகளையும் பார்ப்பதற்கு அந்தந்த அரங்கத்துக்கு முன்பாகப் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். இணையம் வழியாகவும் வாங்கலாம். 2013-ல் 7 கோடியே 45 லட்சம் மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள். உலகில் அதிக மக்கள் பார்த்த அருங்காட்சியகத்தில் இது 2-ம் இடம் பெற்றது.

பெரிய பைகளுக்கும், செல்ஃபி குச்சிகளுக்கும் உள்ளே அனுமதி இல்லாததால், தரைதளத்தில் இருக்கும் பொருட்கள் வைப்பறையில் அவற்றை வைத்துவிட்டு நீண்ட வரிசையில் நின்றேன். கடவுச்சீட்டு காட்டியவுடன் நுழைவுச்சீட்டு கொடுத்து, தீவிரப் பரிசோதனைக்குப் பிறகு அனுமதித்தார்கள். அருங்காட்சியகமானது வடக்கு மற்றும் தெற்கு என 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் இணைக்கும் இடத்தில் பெரிய வளாகமும், கருத்தரங்க அறையும், திரையரங்கமும் இருக்கின்றன. நான் வளாகத்தில் நுழைந்தேன். கால் வைத்தவுடன் குளிர்ந்த காற்று தாய் மடி போல் இதயம் தொட்டது. மக்கள் ஆங்காங்கே கால் நீட்டி அமர்ந்திருந்தார்கள். வளாகத்தின் மையத்தில் சுவரோரமாக, நெடும் பயணத்தில் பங்குபெற்ற செஞ்சீன இராணுவ தளபதிகள் 8 பேரின் சிலைகளைப் (The Generals in the Long March of the Red Army) பார்த்தேன். தங்கள் தலைவர்களின் சிலைகளோடு நின்று மக்கள் படம் எடுத்தார்கள். 2 சீன மாணவிகள் என் அனுமதியோடு என்னோடும் படம் எடுத்துக்கொண்டார்கள். (சீனாவில் பல இடங்களில் இப்படி நடந்தது. ‘நம்ம நிறம் அப்படி’ என நினைத்துக்கொண்டேன்!)

சீன தேசிய அருங்காட்சியகம்

முதல் தளத்தில் இருக்கும் ‘பழங்கால சீனா’ எனும் அரங்கில், சீன நாகரிகத்தின் வளர்ச்சி படிப்படியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வோர் அரச வம்சத்தின் அழகைக் காணும்போதே சீனக் கலாச்சாரத்தின் வளர்ச்சி குறித்து சீனரும், வெளிநாட்டுப் பயணிகளும் பொதுவான புரிதலைப் பெற முடிகிறது. அடுத்தடுத்து செல்கையில், மிங் (Ming) மற்றும் ச்சிங் (Qing) வம்சத்தின் மரச்சாமான்கள், சாங் வம்சத்தின் கல் சிற்பங்கள் இருக்கின்றன. சிற்பங்களில் கலாச்சாரம், பொருளாதாரம், அன்றாட வாழ்க்கை செதுக்கப்பட்டுள்ளன. கல்லறைகளின் மேலுள்ள கற்களில் இறந்தவர்கள் செய்த தொழில்கள் வடிக்கப்பட்டுள்ளன. பெரிய அரங்கில் பண்டைய கால நாணயங்கள் உள்ளன. தொடர்ந்து போர் நடந்துகொண்டிருந்த காலத்தில், விவசாயிகள் தானியங்கள் அல்லது துணிகளை வரியாகக் கொடுத்திருக்கிறார்கள்; அரச அலுவலர்களும் தானியங்களாக, துணிகளாக ஊதியம் பெற்றிருக்கிறார்கள்; சில காலம் நாணயம் அச்சடிப்பதே நிறுத்தப்பட்டிருக்கிறது; குறைந்த மதிப்புடைய நாணயங்களுக்கு அதிக மதிப்பு வைத்து பயன்படுத்தியதுடன், மற்ற அரச வம்சங்கள் பயன்படுத்திய நாணயங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் போன்ற போர்க்கால துயரத்தை அறிந்தேன்.

அடுத்ததாக, ‘திபெத்திய புத்த மதத்தின் சிற்பங்கள்’ எனும் அரங்குக்குள் சென்றேன். கி.பி முதல் நூற்றாண்டுவாக்கில் சீனாவில் பரவத் தொடங்கிய புத்த மதம் சீன கலாச்சாரத்தை உள்வாங்கியிருப்பதை, அங்குள்ள சிற்பங்கள் வெளிப்படுத்தின. சிற்பங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், அழகியல், செய்முறை, புத்த தத்துவத்தை மக்கள் புரிந்துகொண்டிருந்த விதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த புத்த சிற்பங்கள் விளக்கின.

(பாதை நீளும்)

நாகரிகத் தொன்மை

இந்தியாவைப் போலவே பல்வேறு மொழிகளும், மாநிலங்களும் உள்ள, பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்த, படையெடுப்புகளைச் சந்தித்த நாடு சீனா. அந்நாட்டின் நாகரிகத் தொன்மையையும், கலாச்சார மேன்மையையும் புரிந்துகொள்ள, சீனாவின் ஒவ்வோர் அரச வம்சத்தையும், மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் தொல்லியல் ஆய்வில் கிடைத்த மிக முக்கியமான பொருட்களை சீன தேசிய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள்.

குறிப்பாக, வெண்கல முகமூடி (3,600-3,100 ஆண்டுகளுக்கு முந்தையது), மீன் படம் வரையப்பட்ட மண் பாத்திரம் (கி.மு.5000-கி.மு.3000), டிரம் இசைத்துக்கொண்டு பாட்டுப் பாடும் கலைஞரின் மண் சிலை (கி.பி.25-கி.பி.220) , புதிய கற்காலத்தின் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் பச்சை மாணிக்கக் கல்லால் (Jade) ஆன டிராகன் (5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது), மிங் வம்ச (கி.பி. 1368-கி.பி.1644) பேரரசி ஷையாடுவன் (Xiaoduan) அணிந்திருந்த அழகிய பீனிக்ஸ் கிரீடம் போன்றவை மிகச் சிறப்பானவை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE