நான் நடந்துகொண்டிருக்கும் தியானன்மென் சதுக்கம் 109 ஏக்கர் பரப்பளவில் விரிந்து, வானம் முகம் பார்க்கும் கண்ணாடியாகப் பளிச்சிடுகிறது. 10 லட்சம் மக்கள் ஒரேநேரத்தில் கூடக்கூடிய சதுக்கத்தைச் சுற்றிலும் உள்ள வரலாற்றுக் கட்டிடங்களுக்குள் நுழைய ஒவ்வொருவரின் கால்களும் ஆவர்த்தனம் செய்கின்றன.
தடைசெய்யப்பட்ட நகரம்
தியானன்மென் சதுக்கத்தின் வடக்கே உள்ள ‘தடைசெய்யப்பட்ட நகரம்’ (Forbidden City), ஒரு லட்சம் கைவினைஞர்கள் உள்ளிட்ட 10 லட்சம் பேரின் உழைப்பில் உருவானதாகும். 178 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நகரத்தை 1420-ல் கட்டி முடித்தார்கள். இந்த அரண்மனை நகரத்தில் தங்கியிருந்து, 24 பேரரசர்கள் 492 ஆண்டுகள் சீனாவை ஆண்டார்கள். சீன பண்பாட்டில், பேரரசரை விண்ணகத்தின் மகன் (Son of Heaven) எனவும், விண்ணகத்தின் உச்சபட்ச அதிகாரம் பேரரசர் மீது பொழியப்பட்டுள்ளதாகவும் மக்கள் நம்பினார்கள். புனிதமான இடம் என்பதால், பொதுமக்கள் இங்கு செல்ல அனுமதியில்லை. அரச குடும்பத்தினர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகளுமேகூட சில இடங்களுக்குள் செல்ல முடியாது. எல்லா இடங்களுக்கும் செல்வதற்கு முழு அதிகாரமும் உரிமையும் கொண்டவர் பேரரசர் மட்டுமே.
ஆணிகளே பயன்படுத்தாமல் மரத் தூண்களையும், உத்திரங்களையும் இணைத்து எழுப்பப்பட்டுள்ள இந்நகரத்தின் சுவர்கள், தூண்கள் மற்றும் சன்னல்களில் பெரும்பாலும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வண்ணங்களே பூசப்பட்டுள்ளன. சீனர்களுக்கு சிவப்பு நிறமானது அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, ஆசிர்வாதத்தின் நிறமாகும். மிங் (Ming) மற்றும் ச்சிங் (Qing) வம்ச காலத்தில் மஞ்சள் நிறம் அரச குடும்பத்தினருக்கான நிறமாக இருந்தது. இந்த அரண்மனையின் கடைசிப் பேரரசர் பூயி (Puyi) 6 வயதில் பதவி துறந்து (1912), சீன குடியரசு மலர்ந்ததும் அரண்மனை அருங்காட்சியகமானது. சீன மக்கள் குடியரசு 1949-ல் அமைந்த பிறகு மிகப்பெரும் அளவில் புனரமைக்கப்பட்ட இந்நகரம், 1987 முதல் யுனெஸ்கோ புராதன சின்னமாக விளங்குகிறது.
பாதுகாப்புப் பகுதி
இந்நகரம் பாதுகாப்புப் பகுதி, வெளி முற்றம், உள் முற்றம் என 3 பகுதிகளைக் கொண்டது. முதலில் இருப்பது பாதுகாப்புப் பகுதி. இதன் தொடக்கத்தில் உள்ள 53 மீட்டர் அகல அகழியைக் கடக்க, கூட்டத்தில் உடல் வளைந்து நெளிந்து சதுக்கத்தின் வடக்கு நோக்கி பல மீட்டர்கள் நடந்தேன். பிறகு, சுரங்கப்பாதை வழியாக அகழியைக் கடந்தேன். 10 மீட்டர் உயரத்தில் கோட்டைச் சுவர் நிமிர்ந்து நிற்கிறது. 3,430 மீட்டர்கள் சுற்றளவுள்ள கோட்டைச் சுவரின் ஒவ்வொரு மூலையிலும் கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. காவலர்களின் கண்கள் இப்போதும் நம்மைக் கவனிக்கின்றன. கோட்டை நுழைவாயிலின் இடதுபுறத்தில், ‘சீன மக்கள் குடியரசு நீடித்து நிலைத்திருக்கட்டும்’; வலதுபுறத்தில், ‘உலக மக்களின் உயரிய ஒற்றுமை நீடித்து நிலைத்திருக்கட்டும்’ என எழுதப்பட்டுள்ளது. நடுவில் மாவோ சேதுங்கின் படம் இருக்கிறது. விண்ணக அமைதியின் நுழைவு வாயில் எனப்படும் அவ்வாயில், சீன மொழியில் தியானன்மென் எனப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்புவரை, எளியவர்களின் கால்கள் அனுமதிக்கப்படாத பாதையில் நடக்கத் தொடங்கினேன். மரங்களும், செடிகளுமாகச் சூழ்ந்திருந்த அப்பகுதியில் ஓடித் திரிந்த குழந்தைகளை, கூடிக்களித்த காதலர்களை, கால்வலி போக்க அமர்ந்திருந்த பயணிகளை, உணவு, விளையாட்டு, குளிர்பானக் கடைகளைப் பார்த்துக்கொண்டே சென்றேன்.
உள் வாயில்கள்
பாதுகாப்பு வாயிலைக் கடந்து 550 மீட்டர் சென்றபின் முதன்மையான தீர்க்கரேகை (Meridian) வாசல் இருக்கிறது. வலது, இடது, மையம் என 3 பாதைகள் இங்கு உள்ளன. நடுவில் உள்ள பாதை பேரரசருக்கு மட்டுமே உரியது. அரசாணைகளும், போர்க் கட்டளைகளும் இங்கிருந்துதான் பேரரசர்களால் பிறப்பிக்கப்பட்டன. அரண்மனையின் வடக்கு திசையில், ‘இறை வல்லமையின் வாயில்’ (The gate of Divine might) இருக்கிறது. தடைசெய்யப்பட்ட நகரத்தின் இந்தப் பின்பக்க வாயிலை, பேரரசிகள், அந்தப்புர மகளிர், அரச குடும்பத்தினர் வந்துபோக பயன்படுத்தினார்கள். அரண்மனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு பயணிகள் இவ்வாயில் வழியாக தற்போது வெளியேறுகிறார்கள்.
கிழக்கே இருக்கும் ‘வளமை வாயில்’ (East Prosperity Gate) வழியாக மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும், உயர் மதிப்பு மிகுந்தவர்களும், இளவரசர்களும் வந்துபோனார்கள். தற்போது சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதற்கான மற்றொரு வாயிலாக இது விளங்குகிறது. மேற்கே அமைந்திருக்கும் ‘வளமை வாயில்’ வழியாகப் பேரரசரும், பேரரசியும் நந்தவனத்தைப் பார்க்கச் சென்றார்கள். அதிகாரிகளுமேகூட வந்துபோனார்கள். தற்போது பணியாளர்கள் மட்டுமே இப்பாதையைப் பயன்படுத்துகிறார்கள்.
வெளி முற்றமும் உள் முற்றமும்
வெளி முற்றம் சடங்குகளுக்கான இடமாகும். இங்கே 3 கட்டிடங்கள் உண்டு. முக்கியமான சடங்குகளில் பேரரசர் பங்கெடுத்தார். ஓர் அரங்கில், பேரரசரின் ட்ராகன் சிம்மாசனம் உள்ளது. அரச முடிசூட்டுதல், பட்டமளித்தல், அரச குடும்பத்தின் திருமணங்கள் இங்கு நடந்தன. முக்கிய சடங்குகள் தொடங்கும் முன்பாக மற்றோர் அரங்கில் பேரரசர் ஓய்வெடுத்தார். விண்ணக ஆலயத்தில் (The Temple of Heaven) நடக்கும் சடங்குகளுக்குச் செல்வதற்கு முன்பாக, தன் உரைகளைப் பேரரசர் இங்கு பயிற்சி எடுப்பது வழக்கம். அடுத்த கட்டிடம், விருந்துண்டு களிப்பதற்கான இடம். உள் முற்றத்தில் பேரரசர் மற்றும் அவரின் குடும்பத்தினர் வாழ்ந்த கட்டிடங்கள் இருக்கின்றன.
ஏமாற்றமும் மெய்ஞானமும்
அரண்மனையைச் சுற்றிப் பார்க்க வரும் பயணிகள், தீர்க்கரேகை வாயில் வழியாகவே அரண்மனை கட்டிடத்துக்குள் நுழைய முடியும். இணையதளம் வழியாகவும் நேரடியாகவும் நுழைவுச் சீட்டு வாங்கலாம். எப்படியாகினும், நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டு காட்டிய பிறகுதான் அனுமதிப்பார்கள். நேரடியாக வாங்க முடிவுசெய்து தீர்க்கரேகை வாயிலின் அருகில் சென்றேன். என்னைத் தடுத்த பெண் காவலர், “நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன. ஒருநாளைக்கு 80,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. நாளை வாருங்கள்” என்றார். மணியைப் பார்த்தேன். காலை 10.30 தான் ஆகியிருந்தது. களைத்துப்போனேன். பெரும் ஏமாற்றத்துடன், வேறெங்கு செல்லலாம் என வரைபடத்தைப் பார்க்கத் தொடங்கினேன். இன்னொருவர் வந்தார். இந்தியர் போல் தெரிந்தார். அவருக்கும் அதே பதில்.
“ஒரே ஒரு டிக்கெட் தாங்களேன்!” அவர் கெஞ்சத் தொடங்கினார்.
“நாங்க ரெண்டு பேர்தான் இருக்கிறோம் உள்ளே விடுங்களேன்” அனுமதி இன்றி என்னையும் பங்காளி ஆக்கினார்.
“கூட கொஞ்சம் பணம் தருகிறேன் உள்ளே விடுங்களேன்.”
“போன வாரம் வந்தேன் அப்பவும் இப்படித்தான் சொன்னீங்க. இன்றாவது தாருங்களேன்.”
“நாளை நான் இந்தியாவிற்குத் திரும்பிப்போகிறேன். இன்று அனுமதியுங்களேன்.”
அவரின் எல்லா கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடன், “நுழைவுச் சீட்டு முடிந்துவிட்டது. நாளை வாருங்கள்” என்றார் பெண் காவலர். என் பக்கம் திரும்பி, “ரெண்டு டிக்கெட் கொடுத்தா கொறைஞ்சா போயிடுவாங்க” என தமிழில் பேசினார். ஆதரவுக்கு ஆள் சேர்க்கிறார் என்பது புரிந்தது. தமிழ் தெரியாதவன்போல் நான் நின்றேன். மீண்டும் அந்தப் பெண்ணிடம், “இந்தா அவங்க எல்லாம் போறாங்க... எனக்கு மட்டும் டிக்கெட் இல்லையா?” என்றார். “அவர்கள் இணையதளம் வழியாக முன்பதிவு செய்தவர்கள். கடவுச்சீட்டுப் பரிசோதனைக்காகச் செல்கிறார்கள்” என்று பதில் வந்தது.
பிறகு, வேறொரு வெளிநாட்டுக்காரர் வந்தார். நம்மவரைவிட வேகமாக இருந்தார். இருவரும் கெஞ்சினார்கள். விதிமுறையைக் கண்டிப்புடன் கடைபிடிக்கும் காவலரைக் குறை சொன்னார்கள். குரல் உயர்த்தி சிறிது கோபம் காட்டினார்கள். ஒருமணி நேரத்துக்கும் மேல் இது நடந்தது. நாடகம் பார்ப்பதுபோல் இருந்தது எனக்கு. நாடகத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். “ப்ளீஸ் என்னைய மட்டும் உள்ளே விடுங்களேன்”, “இந்த ஒரு தடவ மட்டும் செய்து கொடுங்களேன்” என நாமும் எங்காவது கெஞ்சியிருப்போம். “என்னமோ இவர்தான் பேங்கு ஓனரு மாதிரி பேசுறாரு” என திட்டியிருக்கலாம். “ஒருத்தர்தானே... பரவாயில்ல விடுங்க சார்” என யாரோ ஒருவருக்கு வக்காலத்து வாங்கியிருக்கலாம். இதை, இனி செய்யக்கூடாது என்ற மெய்ஞானம் எனக்குப் பிறந்தது.
நேர்மையாக இருப்பதும், நேர்மையாக இருக்க அடுத்தவரை அனுமதிப்பதும் மிகச் சிறந்த மதிப்பீடுகளல்லவா!
(பாதை நீளும்)
பெட்டிச் செய்தி
கடவுளின் மொத்த அரண்மனை
‘தடைசெய்யப்பட்ட நகரம்’ உலகில் மிகப் பெரிய, பழமையான அரண்மனையாகும். மிங் வம்சத்தின் மூன்றாவது பேரரசர் யாங்ல (Yongle) ஆட்சியின்போது, 1406-ல் தொடங்கி 14 ஆண்டுகளில் கட்டப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான இந்நகரத்துக்குள், 90 அரண்மனைகளும் 980 கட்டிடங்களும் இருக்கின்றன. மொத்தம் 8,707 அறைகள் இங்கே இருப்பதாக 1972 கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. ஆனாலும்கூட இன்னொரு செவிவழி கதையும் உலாவுகிறது. பேரரசர் யாங்ல 10,000 அறைகள் கட்ட விரும்பியதாகவும், இது விண்ணகத்தில் இருக்கும் மொத்த அரண்மனைகளின் எண்ணிக்கைக்கு இணையாக இருப்பதாகச் சொல்லி கடவுள் மிகவும் கோபம் கொண்டதாகவும்; அதனாலேயே 9999.5 அறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும் அக்கதை குறிப்பிடுகிறது.