சிறகை விரி உலகை அறி - 19

By சூ.ம.ஜெயசீலன்

பயணங்களின்போது வழி தெரியாமல் அலைவது ஒருவித மகிழ்ச்சி. திட்டமிடாத புதிய இடங்கள் கண்களில் படும். சுற்றிச் சுற்றி ஒரே இடத்துக்கே கால்கள் வரும். ‘பாதுகாப்பற்ற இடம்’ என உள்ளுணர்வு உணர்த்துகின்ற இடத்தையும் கால்கள் தொடும். தேடலின் சுகம் எழும். தன் மடத்தனத்தை மனது தொழும். தனக்குள் தொலைவது ஞானிகளுக்கான வரமென்றால், புதிய ஊருக்குள்ளே தொலைந்து அலைவது தனிப் பயணருக்கே உரிய வரம்.

நற்குணமிக்க சீனர்கள்

பெய்ஜிங்கில் முதல்நாள் பயணம் முடித்து, தூங்கும் இடத்துக்குப் புறப்பட்டேன். பயணத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடியே சரியான தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி சாலைக்குச் சென்றேன். எந்தத் திசையில் நடப்பது என்கிற அதே குழப்பம் மீண்டும் எழுந்தது. ஓர் இளம் பெண்ணிடம், தாளில் இருந்த விடுதியின் பெயரைக் காட்டி விசாரித்தேன். மொழியறியா உலகில் கேள்வியும் பதிலும் விழிகளுக்கிடையே ஊடாடின. பதில் சொல்லும் ஆர்வமும் இயலாமையும் அவர் கண்களில் மாறி மாறி ஊசலாடின.

தன் அலைபேசியின் வரைபடத்தில் விடுதியின் பெயரைத் தட்டச்சு செய்து, நடந்து செல்லும் திசையைக் காட்டினார். அவரின் அனுமதியுடன் வரைபடத்தை என்னுடைய அலைபேசியில் படமெடுத்துவிட்டு நடந்தேன். 2 நிமிட நடையிலேயே பாதை தவறென உணர்ந்து திரும்பிச் சென்றேன். இளம் பெண் அங்கேயே நின்றார். மறுபடியும் வரைபடத்தைப் பார்த்துவிட்டு, “மன்னிக்கவும். பாதை சரிதான். வடக்கே போகச் சொல்வதற்குப் பதிலாக தெற்கே அனுப்பிவிட்டேன்” என்றார்.

புன்னகையை நினைவுப் பரிசாக வழங்கிவிட்டு, வடதிசையில் நடந்தேன். 3 நிமிடங்கள் கடந்திருக்கும். வழி சரிதானா எனும் குழப்பத்தில், சாவடியில் இருந்த காவலரிடம் முகவரியைக் காட்டினேன். பார்த்தார். இருசக்கர வாகனத்தில் அமரச் சொன்னார். நேரே கொண்டுபோய் நிறுத்தி, ‘இதோ’ என காட்டினார். விடுதியின் பெயரைப் பார்த்தவுடன், மகிழ்ச்சியோடு நன்றி சொன்னேன். இருவருக்கிடையேயும் வார்த்தைப் பரிமாற்றமே இல்லை. செயல்களில் மனம் நிறைந்திருந்தது.

முதல்நாள் இரவு அறையில் பையைத் திறந்தேன். பயணத்தில் மிகவும் முக்கியமானது உடல் நலத்துடன் இருப்பது. தொடர்ந்து பல்வேறு இடங்களைப் பார்ப்பதால் குறைவான ஓய்வு, அதிக அலைச்சல், புதிய காலநிலை, தண்ணீர் அல்லது உணவு ஒவ்வாமை, திடீரென ஏற்படும் காயம் எல்லாவற்றுக்கும் மருத்துவரைத் தேடுவது அதிக செலவு பிடித்த ஒன்று. எனவே எப்போதும் மருத்துவ முதலுதவிப் பை என்னுடைய பயணத்தில் இருக்கும். அதேபோல, பிளக் பாய்ன்ட் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதால், பன்னாட்டு பிளக் பாய்ன்ட் மற்றும் பவர் பேங்க் வைத்திருப்பேன். எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்நாட்டுப் பணம் அல்லது அமெரிக்க டாலர் கொண்டுபோவதே சிறந்த முடிவு என்பதால், அமெரிக்க டாலருடன், ‘ரென்மின்பி’ எனப்படும் சீனப் பணமும் மாற்றி வைத்திருந்தேன். எல்லாவற்றையும் சிறு அலமாரியில் வைத்துப் பூட்டியபிறகு, குளித்துவிட்டு சாப்பிடக் கிளம்பினேன். மக்கள் நெருக்கடி மிகுந்த அந்தத் தெரு மின்னொளியில் மினுமினுத்தது.

கடையில் அமர்ந்து, சுவரில் இருந்த படத்தைக் காட்டி இரு வகையான உணவு கேட்டேன். முதல் உணவிலேயே வயிறு நிறைந்தது. வீட்டுக்கு எடுத்துச் செல்ல மற்றொன்றைப் பொட்டலம் கட்டிக் கொடுத்தார்கள். சாலையோரத்தில் இருப்பவர்களிடம் கொடுக்கலாம் எனத் தெருவில் நடந்தேன். ஒருவரும் இல்லை. சாலையில் எதிர்ப்பட்ட தூய்மைப் பணியாளரிடம் உணவுப் பொட்டலத்தை நீட்டினேன். என்னைக் கூர்ந்து பார்த்தார். மீதியான உணவைக் கொடுத்து அவரைக் காயப்படுத்திவிட்டதாக நினைக்கிறாரோ என உணர்ந்து, ‘புதிதாக அப்போதுதான் வாங்கி வருகிறேன்’ என்பதைப் புரியவைக்க மெனக்கிட்டேன். வாங்கிக்கொண்டார். அறைக்குத் திரும்பியதும், பெய்ஜிங் நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீன நண்பரை ‘வீ சேட்’ செயலியில் அழைத்தேன். பயணத்தின்போது உதவி தேவையென்றால் இவரை அழைக்குமாறு, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சீன நண்பர் என்னிடம் சொல்லியிருந்ததால், ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தோம். இரு நண்பர்களுமே ஆங்கிலம் பேசுவார்கள்.

பயணம் குறித்து விசாரித்த பிறகு, “நீங்கள் விரும்பினால் உங்களை நான் அழைத்துச் செல்கிறேன்” என்றார் சீனாவில் இருப்பவர். இன்னொருவருடன் செல்லும்போது அதிகம் கற்றுக்கொள்ள இயலாது. அவரைச் சார்ந்தே இருக்க வேண்டும். உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு, “தடுமாற்றம் ஏற்பட்டால் உடனே அழைக்கிறேன்” என்றேன். “எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள்” என்றவருக்கு இரவு வணக்கம் கூறிவிட்டு, மலர்ந்த முகத்துடன் தூங்கி எழுந்தேன். காலையில் தியானன்மென் சதுக்கம் நோக்கிப் புறப்பட்டேன்.

சுத்தமென்பது சுய ஒழுக்கம். சுற்றுலா செல்லும் கண்களுக்கு, காற்றில் தவழும் இலை, கரையில் உருளும் அலை, உள்ளம் குளிர்விக்கும் மழை, பாடி அழைக்கும் குருவி, படர்ந்து பாயும் அருவி என ஒவ்வொன்றும் ஆச்சரியங்களின் அகராதிகள். சீனாவில், நான் கண்ட சாலைகளின் தூய்மை அப்படியான ஓர் ஆச்சரியம்தான். “குப்பைகள் இல்லாத பள்ளி வளாகம், வாழ்விடம் இந்தியாவில் சாத்தியம் இல்லை. காரணம், மக்கள்தொகைப் பெருக்கம்” என்று பலர் சொன்னார்கள்.

நானும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவைப் பார்த்ததும் என் கருத்தை மாற்றிக்கொண்டேன். கண் பார்க்கும் தூரத்தில் எங்கும் குப்பைத் தொட்டிகள் இருந்தன. எவையும் நிறைந்து வழியவில்லை. மையச் சாலைகள் மட்டுமல்ல, நான் தங்கியிருந்த மக்கள் நெருக்கடி நிறைந்த சந்தைச் சாலையும் சுற்றுலா இடங்களும் மிகத் தூய்மையாக இருந்தன. கிளைகளின் புன்னகையில் உதிரும் இலைகளையும், சுற்றுலாப் பயணிகளின் கைகள் தவறவிடும் தாள்களையும் எடுப்பதற்குக் குறிப்பிட்ட இடைவெளியில் தொழிலாளர்கள் நடந்துகொண்டே இருக்கிறார்கள் அல்லது இருசக்கர வாகனத்தில் வட்டமிடுகிறார்கள். நீண்ட குச்சிகளின் நுனியில் உள்ள கிளிப்பின் உதவியுடன் குப்பைகளைச் சேகரித்து பைகளில் போடுகிறார்கள். இதனால், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட எண்ணற்றோருக்கு வேலை கிடைத்திருக்கிறது. நாடு சுத்தமாக உள்ளது.

தியானன்மென் சதுக்கம்

வடக்கு தெற்காக 800 மீட்டர் நீளமும், கிழக்கு மேற்காக 500 மீட்டர் அகலமும் உடையது தியானன்மென் சதுக்கம். கோடை விடுமுறையில் சுட்டெரிக்கும் சூரியனைப் பொருட்படுத்தாது அதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் எண்ணற்ற கல்லூரி மாணவர்களைக் கண்டேன்.

பயிற்சி, சீருடை மற்றும் ஊதியம் கொடுத்து கோடை விடுமுறை நாட்களில் வேலைக்கு அமர்த்தியிருந்தது அரசாங்கம். வரிசையில் நின்று பரிசோதனை முடித்து சதுக்கத்தில் கால் பதிக்க 2 மணி நேரத்துக்கும் மேல் ஆனது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தில், என் கால்களும் கடந்தகால நிகழ்வுகளும் ஒன்றாக நடந்தன.

சீனாவின் உள்நாட்டுப் போர் 1949-ல் முடிந்தது. புரட்சியாளர் மாவோ சேதுங் (Mao Zedong), 1949 அக்டோபர் 1-ல் இச்சதுக்கத்தில் நின்றுதான் ‘சீன மக்கள் குடியரசு’ நாடு உதயமானதை அறிவித்தார். சதுக்கத்தின் மையத்தில் மக்களின் நாயகர்களுக்கான (People’s Heroes) 38 மீட்டர் உயர நினைவுத் தூண் நிற்கிறது. அதன் முகப்பில், ‘மக்களின் நாயகர்களுக்கு எக்காலமும் புகழ் உரித்தாகட்டும்’ எனும் வாசகம், மாவோவின் கையெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாவோ நினைவிடத்தின் முகப்பிலும் பின்புறத்திலும், ‘புரட்சியின் நினைவுச் சிலைகள்’ உள்ளன. போர் வீரர்கள், பல்வேறு தொழில் செய்யும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் எல்லோரும் இணைந்து முன்னேறுவது போல் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இச்சதுக்கத்தில்தான் அரசியல் சீர்திருத்தம், பத்திரிகைகளுக்குக் குறைவான தணிக்கை, பேச்சுரிமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 1989-ல் மாணவர்கள் போராடினார்கள். ஜுன் 4-ம் தேதி நள்ளிரவில் சீன அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் பலியானார்கள். சுதந்திர உறுதியைக் கேட்ட இச்சதுக்கம் மாணவர்களின் குருதியைத் தன் முகத்தில் அப்பிக்கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இங்கு வருகிறார்கள். சுத்தமான சூழலில் நாள்தோறும் புரட்சிகர வணக்கம் செலுத்துகிறார்கள்.

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி

டம்மி பயணச்சீட்டு

விமானப் பயணச்சீட்டு விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, இருவழி விமான பயணச்சீட்டு ஒப்படைக்க வேண்டும் என சீனா உள்ளிட்ட சில நாடுகள் அறிவுறுத்துகின்றன. அதிகக் கட்டணம் கட்டிப் பயணச்சீட்டு வாங்கிய பிறகு, விசா கிடைக்காவிட்டால் என்ன செய்வது? விசா காரணங்களுக்காகவே டம்மி பயணச்சீட்டு அளிக்கின்ற இணையதளங்கள் பல இருக்கின்றன. உண்மையான பயணச்சீட்டு போலவே இருக்கும் (Fake இல்லை, Dummy). முறையான பி.என்.ஆர் (Valid, Passenger Name Record) உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் அதில் இருக்கும். விசா அலுவலகத்துக்குச் செல்வதற்கு முந்தைய நாள் உங்களுக்குப் பயணச்சீட்டை மின்னஞ்சல் செய்வார்கள். அதிகபட்சம் 14 நாட்கள் செல்லுபடியாகும். இதன் விலை 15 முதல் 50 அமெரிக்க டாலர் ஆகும். இதே தளத்தில், தங்கும் அறை டம்மியாக முன்பதிவு செய்வதற்கும் வாய்ப்புள்ளது. அதற்குத் தனியாகப் பணம் செலுத்த வேண்டும். ஆனாலும், இத்தளத்தில் நீங்கள் இதைத் தவிர்க்கலாம். எப்படியாகினும், இதன் நன்மை தீமை குறித்து இணையத்தில் கூடுதலாக வாசித்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE