திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு பாடங்களை எடுத்துக் கூறியுள்ளது. இனி வரும் தேர்தல்களில் வெற்றி அடைந்த கட்சி அதை தக்க வைக்கவும், தோல்வி அடைந்த கட்சிகள் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என இந்த தேர்தல் அறிவுறுத்தி உள்ளது.
திமுக: திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக, மாநிலத்திலேயே அதிகபட்சமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டாலும் பாரபட்சம் பார்க்காமல் மாவட்ட அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றினர்.
அமைச்சர்களின் தேர்தல் பணி, கூட்டணி பலம் ஆகியவற்றால் 4.43 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றிபெற்றார். இருப்பினும், கடந்த தேர்தலை விட 50 ஆயிரம் வாக்குகள் குறைந்தது. வாக்கு வங்கியில் பெரிய சரிவு இல்லை எனினும், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை திமுக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.
» ட்ரோன்கள் பறக்க தடை, பல அடுக்கு பாதுகாப்பு: மோடியின் பதவியேற்புக்கு தயாராகும் டெல்லி
» ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு: விவசாயிகள் மகிழ்ச்சி
அதிமுக (எஸ்.டி.பி.ஐ.,) - மக்களவைத் தேர்தல் என்றாலே ஒதுங்கி விடுவது, சட்டப்பேரவைத் தேர்தல் போதும் என்ற எண்ணம் திண்டுக்கல் மாவட்ட அதிமுக முதன்மை நிர்வாகிகளிடம் உள்ளது. இதற்கு கடந்த 2 மக்களவைத் தேர்தல்களே உதாரணம்.
திண்டுக்கல் தொகுதியில் வாக்குவங்கி இல்லாத பா.ம.க.வுக்கு 2019 தேர்தலிலும், இதேபோல, பல இடங்களில் கட்சி நிர்வாகிகளே இல்லாத எஸ்.டி.பி.ஐ.க்கு இந்த தேர்தலிலும் சீட் ஒதுக்கி அதிமுகவினர் ஒதுங்கி கொண்டனர்.
இது அக்கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. வெற்றியோ தோல்வியோ அதிமுக நேரடியாக களம் இறங்கி ஒருங்கிணைந்து பணியாற்றி இருந்தால் கடும் போட்டியை கொடுத்திருக்கலாம் என்பதே தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.
தற்போதைய தேர்தலில் பெறும் வாக்குகளை வைத்துதான், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவின் வாக்கு வங்கியை அறிய முடியும். அதிமுக போட்டியிடாமல் கூட்டணிக்கு ஒதுக்கியதால் தேர்தல் பணியில் கட்சியினர் தொய்வு காட்டியதால் வாக்குகள் குறைந்து விட்டன.
அதிமுக வேட்பாளரை களம் இறக்கி இருந்தால் மேலும் சில ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கலாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலை தொடருமானால் அக்கட்சி இழந்த வாக்கு வங்கியை மீட்க முடியுமா என்ற நிலை உள்ளது.
பா.ஜ.க. கூட்டணி (பா.ம.க.,) - கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., இந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் களமிறங்கியது. வாக்கு வங்கியே இல்லாத, மாவட்டத்தில் பல இடங்களில் அடிப்படை அமைப்பு நிர்வாகிகள் கூட இல்லாத நிலையில், பா.ம.க.வினர் திண்டுக்கல்லில் போட்டியிட ஆர்வம் காட்டுவது புதிராக உள்ளது.
2019 தேர்தலில் பா.ம.க.வினரின் டெபாசிட்டை அதிமுக வாக்கு வங்கி காப்பாற்றியது. இந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து டெபாசிட் கூட பெற முடியவில்லை.
திண்டுக்கல் மக்களவைத் தொகு திக்கு உட்பட்ட நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் தேசிய கட்சியான பா.ஜ.க. மாநில கட்சியான பா.ம.க., ஆகியவை இணைந்து நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளைக் கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சி: கடந்த 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றதால் அக்கட்சியில் உள்ள இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நாம் சரியான பாதையில் செல்கிறோம். இருந்தாலும் வெற்றிக்கோடு தொலைதூரத்தில் இருக்கிறது என்பதை புரிந்து வைத்துள்ளனர்.
அந்த இலக்கை நோக்கி நகர்கின்றனர். நடந்த தேர்தலில் இவர்களது பிரச்சாரம் வெளியில் அதிகம் பேசப்படவில்லை. ஊருக்கு 4 இளைஞர்கள் இருந்தாலும் அந்த ஊரில் உள்ள மக்களிடம் தங்கள் கருத்துகளை கொண்டு சேர்ப்பவர்களாக இருக்கின்றனர். மேலும் தொடர் தோல்விகளை கண்டு தடம் மாறாதவர்களாகவும் இருக்கின்றனர். வெற்றியோ, தோல்வியோ தொடர்ந்து போராடுவோம் என்ற மனப்பான்மை நாம் தமிழர் கட்சியி னரிடம் உள்ளது.