ஏ.ஆர்.ரமணி: எல்.ஆர்.ஈஸ்வரியின் எதிரொலி

By ப.கவிதா குமார்

'தெய்வம்' படத்தில் இடம்பெற்ற 'குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘அவ்வளவு வயதான காலத்திலும் டெம்போ குறையாமல் பெங்களூர் ஏ.ஆர்.ரமணி அம்மாள் அப்பாடலைப் பாடியுள்ளாரே’ என்று, ஒவ்வொரு முறையும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அசந்துபோவேன்.

தமிழ் சினிமாவில் தனித்த அடையாளக் குரல்களில் பெங்களூர் ஏ.ஆர்.ரமணி அம்மாளின் குரலும் ஒன்று. தமிழ் சினிமாவில் ரமணி என்றவுடன் ‘எதிரும் புதிரும்’ இயக்கிய வி.சி.ரமணி என்ற இயக்குநர் பெயர் ஞாபகத்துக்கு வருகிறது. இதன்பின் இவர் தனது பெயரை தரணி என மாற்றிக் கொண்டு ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’, ‘குருவி’, ‘ஒஸ்தி’ படங்களை எடுத்து ஒரு ரவுண்ட் வந்தார்.

இன்றைய தலைமுறையினரிடம் ரமணி என்று யாரையாவது தெரியுமா என்று கேளுங்கள். மிக இயல்பாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 64 வயதான ரமணி பாட்டியைப் பற்றிகூட சொல்வார்கள்.

ஆனால், தமிழ் சினிமாவில் இந்தப் பெயரில் ஒரு பாடகி இருந்துள்ளார் என்று பலருக்குத் தெரியாது.

1979-ம் ஆண்டு எம்.கருணாநிதி இயக்கத்தில் வெளியான படம் ‘சிரி சிரி மாமா’. விஜயகுமார் ஹீரோவாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. இன்னிசை வேந்தர்கள் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசையில் இப்படத்தில் ஒலித்த ஒரு பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலைப் போலவே இருந்தது.

‘ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்

என்றும் வாய் பேசாமல்

கண் கூசுமால் பேசும் பாஷைதான்...’

எனத் தொடங்கும் அழகிய டூயட். இப்பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாணியில் கிருஷ்ணமூர்த்தி பாடியிருப்பார். அவருடன் இணைந்து பாடியவர் யார் என்று பார்த்தால், ஆஷா ரமணி என்றிருந்தது.

சங்கர் - கணேஷ் அறிமுகப்படுத்திய பல பாடகிகளில் இவரும் ஒருவர் என்று தெரியவருகிறது. மிக அழகான குரல் வளம் கொண்ட ஆஷா ரமணி பாடிய இந்தப் பாடல் யூடியூபில் பார்த்து ரசிக்கக் கிடைக்கிறது.

இதே பாடகி பி.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய ஒரு டூயட் பாடலை இலங்கை வானொலியில் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். 1980-ம் ஆண்டு கே.பி.ஜெகதீஸ் இயக்கத்தில் ஜெய்கணேஷ், சுஜாதா நடிப்பில் வெளியான படம் ‘கங்கை அவள் கண்ணுக்குள்’. சங்கர் - கணேஷ் இசையில் ஆஷா ரமணி பாடிய அழகிய பாடல்:

‘கட்டிப்பிடித்து காதல் கொடி

கண்ணே என் எண்ணப்படி

மெல்லத்தொடு சொல்லிக்கொடு

வெட்கத்தில் கொஞ்சம் விடு...’

என ஆஷா ரமணியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலில் பி.ஜெயச்சந்திரன் இணைந்து அழகூட்டியிருப்பார். பாடலின் இடையே வரும் ஆஷா ரமணியின் அழகிய ஹம்மிங் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.

நாடகத்திலகம் ஆர்.வி.உடையப்பாதேவர் 1981-ல் தயாரித்த படம் ‘அனிச்சமலர்’. ஸ்ரீவிஜயகுமார் திரைக்கதை எழுதி இயக்கிய படம் இது.

இப்படத்தில் ஆஷா ரமணி குழுவினருடன் இணைந்து ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

‘குலுங்குதடி கொலுசு தண்டை காலிலே

குளுகுளு இருக்குதடி காத்துல

ஆத்துப்பக்கம் மச்சான்

உன்னைச் சந்திக்கச் சொன்னானா...’

கிராமத்து கீதங்களுக்கு சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் வழங்கிய இசை பெரும்பாலும் ஹிட் அடித்துவிடும். அப்படியொரு பாடல்தான் இது.

தமிழ் சினிமாவின் முழுமையான முதல் ஹீரோ என புகழப்பட்ட பி.யூ. சின்னப்பாவின் மகன் ராஜா பகதூர் கதாநாயகனாக அறிமுகமான படம் இது. லட்சுமி கலா என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

‘கோவில்புறா’ உள்ளிட்ட சில படங்களில் ராஜா பகதூர் ஹீரோவாக நடித்தார். ஆனால், பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தில் ஆட்டுக்கறி கடைக்காரராக வந்து அடிவாங்கி, கனகா காலில் கத்தியை விட்டு வீசும் கேரக்டரில் நடித்தவர், பின்னாளில் குடிக்கு அடிமையாகி இறந்தும்போனார்.

1997-ம் ஆண்டு சேரன், ‘பொற்காலம்’ படம் இயக்குவதற்கு முன்பே 1980-ல் அதே பெயரில் படம் வெளியாகிவிட்டது. துரை இயக்கத்தில் வெளிவந்த ‘பொற்கால’த்தில் விஜயன், எம்.ஜி.சி.சுகுமார், சத்யகலா உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படத்தில் சங்கர் - கணேஷ் இசையில், பி.எஸ்.சசிரேகாவுடன் ஆஷா ரமணி பாடிய இந்த பாடல், ‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே’ அப்படியே நினைவூட்டும். பொற்காலம் படத்தில் இடம் பெற்ற பாடல்,

‘பண்ணாதே பண்ணாதே

தப்பு பண்ண சொல்லாதே...’

சங்கர் - கணேஷ் இரட்டையர்களில் கணேஷ் சில படங்களில் நடித்தார். 1980-ல் பேராசிரியர் பிரகாசம் இயக்கிய ‘ஒத்தையடிப் பாதையிலே’ என்ற படத்தில் கணேஷ் கதாநாயகனாக நடித்தார். மிஸ் ஆந்திரா பௌர்ணமி கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘மலையோரம் கிணறு வெட்டி’ பாடலை கணேஷுடன் இணைந்து ஆஷா ரமணி பாடியுள்ளார்.

1983-ல் ராஜீவ் நடிப்பில் ஹரிதயராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘இளையபிறவிகள்’. இப்படத்தில் கணேஷ் (சங்கர்), கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ் ஆகியோருடன் இணைந்து, ‘பாடுவேன் கேளுங்கள் நண்பர்களே’ பாடலை ஆஷா ரமணி பாடியுள்ளார்.

‘புலி வருது புலி’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் ‘சங்கர் - கணேஷ்’ இரட்டையர்கள் இசையில் பாடல்கள் அத்தனையும் கேட்கும் ரகம் தான். மலேசியா வாசுதேவனுடன், ஆஷா ரமணி இணைந்து பாடிய

‘அய்யனாரு கோவிலிலே

அமைச்சிருந்த மேடையிலே

மாலையிட்டு ஓடி வந்த

மணமகளே மணமகளே...’

பாடல் முழுவதும் ஆஷா ரமணியின் அழகிய ஹம்மிங் இடம்பெற்றுள்ளது.

இதே படத்தில் எஸ்.பி.பொன்னுச்சாமி, வெங்கடேஷ், லலிதாசகாரியுடன் இணைந்து ஆஷா ரமணி பாடிய

‘தாளம் குடம் பிடிச்சு

தண்ணியில தவமிருக்கும்..

பாடல் அழகிய மெட்டு.’

இப்படி இத்தனை பாடல்களைப் பாடிய ஆஷா ரமணி குறித்து வேறு எந்த விவரமும் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு பாடலைப் பாடியவர்கள், திரைப்படப் புகழ் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கும்போது, இத்தனைப் பாடலைப் பாடிய ஆஷா ரமணி குறித்து எந்த விவரமும் இல்லையென்ற கவலைதான் இந்தப் பதிவு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE