கிங் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி - 4

By பி.எம்.சுதிர்

இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் வரிசை 2009-ல் வலுவாக இருந்தது. சச்சின், சேவக், காம்பீர், யுவராஜ் சிங், தோனி, ரெய்னா ஆகியோர் முதல் 6 இடங்களில் உறுதியாய் இருக்க, இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே, மற்றவர்களுக்கு வாய்ப்பு என்ற நிலை அப்போது இருந்தது. அந்த இடத்தைப் பிடிக்க யூசுப் பதான், உத்தப்பா, ரோஹித் சர்மா என்று பலரும் வரிசை கட்டிக்கொண்டு நின்றிருந்தனர். கிட்டத்தட்ட மியூசிக்கல் சேர் போன்ற நிலை. இப்படிப்பட்ட சூழலில் இந்திய பேட்டிங் வரிசை என்ற சக்கர வியூகத்துக்குள் விராட் கோலி நுழைய ஒரு வாய்ப்பு கிடைத்தது.

தோனியின் நம்பிக்கையைப் பெற்ற தருணம்

2009 டிசம்பர் 24-ல், கொல்கத்தாவில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்த ஒருநாள் போட்டியில்தான் கோலிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, 23 ரன்களுக்குள் சேவக், சச்சின் ஆகியோரின் விக்கெட்களை இழக்க, காம்பீருடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தீர்க்கமாக முடிவெடுத்து, காம்பீருடன் சேர்ந்து கடுமையாகப் போராடினார் விராட் கோலி. 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கோலி 107 ரன்களைக் குவிக்க, மறுபுறம் 150 ரன்களைச் சேர்த்தார் காம்பீர். போட்டியின் ஆட்ட நாயகனாக கவுதம் காம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும் 21 வயதிலேயே சதம் அடித்த விராட் கோலியின் மீது பலரது கவனமும் குவிந்தது. முக்கியமாக, ‘இவரை வைத்து போட்டிகளில் வெல்ல முடியும்’ என்ற நம்பிக்கை கேப்டன் தோனிக்கு ஏற்பட்டது.

அன்றிலிருந்து, 14 பேரைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவராக விராட் கோலி இடம்பெறத் தொடங்கினார். முக்கிய வீரர்களான 6 பேட்ஸ்மேன்களில் யாருக்காவது ஓய்வு தேவைப்பட்டால், அந்த இடத்தில் விராட் கோலி களமிறக்கப்பட்டார். அதே நேரத்தில் இந்தக் காலகட்டத்தில் யுவராஜ் சிங் அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்பட, அந்த வாய்ப்புகள் விராட் கோலியை வந்தடைந்தன.

உலகக் கோப்பைப் போட்டியில்...

இந்திய அணியில் இடம்பிடித்தாலும், 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனாலும் பெங்களூரு அணி விராட் கோலியை நம்பியது. ‘இந்த இளைஞனுக்குள் என்னவோ இருக்கிறது. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுக்கப்போகிறார்’ என்ற நம்பிக்கையில், அடுத்த ஏலத்திலும் அவரைத் தக்கவைத்துக்கொண்டது.

இப்படி ஒருபுறம் இந்திய அணிக்கு உள்ளேயும், வெளியேயுமாய் இருந்த கோலி, மறுபுறம் ஐபிஎல்லில் பெங்களூரு அணியின் நிரந்தர அங்கமாகிப் போனார். இந்தச் சூழலில், அவரது வாழ்க்கையை மாற்றும் வகையிலான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

இந்த உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை சச்சின், சேவாக், காம்பீர், யுவராஜ் சிங் ஆகியோரின் பங்களிப்புதான் அதிகம் இருந்தது. இவர்கள் நால்வரும் இந்தத் தொடரில் 350 ரன்களுக்கு மேல் குவிக்க, விராட் கோலி மொத்தமாகவே 9 ஆட்டங்களில் 282 ரன்களைத்தான் எடுத்தார். இருப்பினும் அவர் இந்தத் தொடரில் கவனிக்கப்படும் நபராக மாறினார். இதற்குக் காரணம், இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டி.

உணர்ச்சிவசப்படாத கோலி

மிக முக்கியமான இப்போட்டியில், முதலில் ஆடிய இலங்கை 274 ரன்களைக் குவிக்க, அடுத்து விளையாடிய இந்தியா 31 ரன்களில் சேவாக், சச்சின் ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. ஆபத்தான இந்தக் கட்டத்தில் காம்பீருக்கு கோலி தோள் கொடுத்தார். இப்போட்டியில் கோலி 35 ரன்களை மட்டுமே எடுத்தாலும் காம்பீருடன் சேர்ந்து, 3-வது விக்கெட் ஜோடியாக 83 ரன்களைச் சேர்த்தது, இந்திய அணியை மீட்டது. இதைத் தொடர்ந்து ஆடவந்த கேப்டன் தோனி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இம்முறை இந்தியா உலகக் கோப்பையை வென்றதை அனைத்து வீரர்களும் உற்சாகமாகக் கொண்டாடினர். பொதுவாக தனது உணர்ச்சிகளைக் காட்டாத சச்சின் டெண்டுல்கர்கூட, அன்றைய தினம் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சியளித்தார். ஆனால், கோலி மட்டும் அதிக உற்சாகமடையவில்லை. ஒரு சாதாரண வெற்றிக்கான ரியாக்‌ஷனே அவரது முகத்தில் இருந்தது.

பிற்காலத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, “உலகக் கோப்பையை வெல்வதன் மகத்துவம் அப்போது எனக்குத் தெரியவில்லை. சச்சின் போன்ற வீரர்களின் நெடுநாளைய கனவாக உலகக் கோப்பை இருந்ததால், அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதேபோல், 1983-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா வெல்லும் உலகக் கோப்பை என்பதால் ரசிகர்களும் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தனர். ஆனால் எனக்கு அப்போது அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. மற்றவர்கள் உணர்ச்சிப் பெருக்கில் அழுதபோது, இதற்கு ஏன் அழுகிறார்கள் என்றுகூட யோசித்தேன்” என்கிறார்.

யுவராஜ் சிங்கின் இடத்தில்...

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடித் தீர்ப்பதற்குள், இந்திய அணியை ஒரு அதிர்ச்சி தாக்கியது. இத்தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மூலகாரணமாய் இருந்த யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி.

புற்றுநோய் சிகிச்சைக்காக யுவராஜ் சிங் செல்ல, அவரது இடம் விராட் கோலிக்குக் கிடைத்தது.

முழு தொடரை வாசிக்க....

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE