கிங் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி - 3

By பி.எம்.சுதிர்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்குப் பட்டம் பெற்றுத் தந்ததால், விராட் கோலியின் கிரிக்கெட் கிராஃப் ஏறியது. இந்தக் கோப்பையை வென்ற சில நாட்களில் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்றது.

மிகக் குறைந்த விலை மதிப்பு

விராட் கோலி டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால், 'டெல்லி டேர்டெவில்ஸ்' அணி அவரை அதிக விலைக்கு வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி அணியோ, விராட் கோலி மீது ஆர்வம் காட்டவில்லை. வீரேந்தர் ஷேவக், கவுதம் காம்பீர், டிவில்லியர்ஸ், ஷிகர் தவன் என்று நன்றாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அணியில் நிறைய இருப்பதாக நினைத்த அணி நிர்வாகம், ஏலத்தில் கோலியைச் சட்டை செய்யவில்லை. மாறாக அப்போதைய இளம் பந்துவீச்சாளரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டவருமான பிரதீப் சங்வானை வாங்கியது.

இந்தச் சூழலில் விராட் கோலி மீது நம்பிக்கை வைத்து, மிகக் குறைந்த விலையான 12 லட்ச ரூபாய்க்கு விராட் கோலியை வாங்கியது ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ அணி. இந்தக் காலகட்டத்தில் தோனிக்கு சிஎஸ்கே அணி நிர்ணயித்த விலை 6 கோடி ரூபாய். தனக்குக் கிடைத்த தொகை சிறிதாக இருந்தாலும், கோலி அதற்காக கவலைப்படவில்லை. அவரது நோக்கமெல்லாம் பெரிய தொகைக்கு ஏற்றதாகத் தன்னை தயார்படுத்திக்கொள்வதில் இருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைக்கத் தொடங்கினார்.

சுமாரான தொடக்கம்

ராகுல் திராவிட் தலைமையில், அனில் கும்ப்ளே, மார்க் பவுச்சர், ஜாக் கல்லிஸ் போன்ற நட்சத்திரங்களைக் கொண்ட ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூரு அணியில், விராட் கோலியை முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு ஏற்றாற்போல் அவரது ஆட்டமும் சோபிக்கவில்லை. முதலாவது ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் ஆடிய விராட் கோலி, மொத்தமாகவே 165 ரன்களைத்தான் எடுத்தார்.

இதேபோல் இந்தியாவுக்காக 2008-ல் முதல்முறையாக ஆடிய ஒருநாள் போட்டியிலும் (இலங்கை அணிக்கு எதிராக) கோலியால் 12 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இளையோர் கிரிக்கெட்டில் பெரிய நட்சத்திரமாக இருக்கும் தான், மூத்தவர்களுடன் ஆட இன்னும் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் கோலி. தன்னிடம் உள்ள குறைகள் என்ன என்று ஆராயத் தொடங்கினார். அந்தக் காலத்தில் கோலி சாப்பாட்டுப் பிரியராக இருந்தார். அதிலும் அசைவ உணவுகளை ஒரு பிடி பிடிப்பார். அதனாலேயே கொழுக் மொழுக்கென்று குண்டாக இருப்பார். அந்த உடல் அமைப்புதான் தனக்கு முக்கிய எதிரி என்று அறிந்துகொண்டார் விராட்.

உணவுக் கட்டுப்பாடும் தாயின் வருத்தமும்

அடுத்தநாள் முதல், உடல் நலனில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அள்ளி அள்ளிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்ட கோலி, கிள்ளிச் சாப்பிட ஆரம்பித்தார். உடற்பயிற்சி கூடத்தில் நிறைய நேரத்தை செலவிட்டார். இதன் விளைவாக அவரது உடல் எடை குறையத் தொடங்கியது. அதே நேரத்தில், ஆசை ஆசையாகச் சாப்பிட்டு, வாட்டசாட்டமாக இருந்துவந்த தனது மகன் சாப்பாட்டை குறைத்ததும், மெலிந்து வருவதும் கோலியின் அம்மா சரோஜ் கோலிக்குக் கவலையை ஏற்படுத்தியது.

மகனைப் பழையபடி சாப்பிடவைத்து எப்படியாவது குண்டாக்க வேண்டும் என்று நினைத்த சரோஜ் கோலி, சமையலில் கற்ற மொத்த வித்தைகளையும் பயன்படுத்தினார். தினந்தோறும் டைனிங் டேபிளில் கோலிக்குப் பிடித்த விஷயங்களாக சமைத்து அடுக்கினார். கோலிக்கு அதுவே அக்னிப் பரீட்சையானது. தனக்குப் பிடித்த உணவுகள் ஒரு பக்கம், கிரிக்கெட் வாழ்க்கை மறுபக்கம் என எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் தவித்தார்.

உணவைவிட கிரிக்கெட் மீதான காதல் அதிகமாக இருந்ததால், அம்மா சமைத்த அருமையான உணவுகளைத் தவிர்த்தார். இது அவரது அம்மாவின் கவலையை மேலும் அதிகப்படுத்தியது. “என்ன ஆச்சுன்னே தெரியல. கோலி இப்ப முன்ன மாதிரி சாப்பிடறதே இல்ல. கன்னமெல்லாம் ஒட்டிப் போயிருக்கு. எப்ப பார்த்தாலும் கிரிக்கெட்... கிரிக்கெட்னு உடம்பைக் கெடுத்துக்கிறான்” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பினார்.

இதுபற்றி அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி, “நான் டயட்டில் இருப்பது தெரியாமல், என் அம்மா எப்போதும் நான் சரியாகச் சாப்பிடுவதில்லை என புகார் கூறிக்கொண்டே இருப்பார். அத்துடன் என் கன்னங்கள் ஒட்டிப்போய் கிடப்பதாகவும், நான் மெலிந்துவிட்டதாகவும் குறைபட்டுக்கொள்வார். அம்மாக்களுக்கு எப்போதும் தங்கள் குழந்தைகள் கொழுக் மொழுக்கென்று இருக்க வேண்டும். என் அம்மாவும் அப்படித்தான் விரும்பினார். நான் எடை குறைந்து ஸ்லிம்மாக இருப்பது என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்குப் புரியவைக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்று குறிப்பிட்டார்.

உதவிக்கு வந்த சச்சின்

வெறும் உணவுக் கட்டுப்பாடு மட்டுமின்றி, காலை மாலை என தினமும் இரு வேளைகளில் சுமார் ஒன்றரை மணிநேரம் தீவிர உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார் விராட் கோலி. இதன் பயனாக அவரது உடல் ஸ்லிம்மானது.

உடம்பைச் சரி செய்தபிறகு, பேட்டிங்கைச் சரிசெய்வதில் விராட் கோலியின் கவனம் சென்றது. இந்தச் சூழலில் விராட் கோலிக்கு உதவ சச்சின் முன்வந்தார். இளம் வீரராக துடிப்புடன் இருந்த விராட் கோலிக்கு உபயோகமாக சில டிப்ஸை சச்சின் டெண்டுல்கர் வழங்க, அதை சிக்கென பிடித்துக் கொண்டார் ‘சிக்கூ’ (விராட் கோலியின் செல்லப் பெயர் இது!).

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உடல் ரீதியாகவும், பேட்டிங் ரீதியாகவும் மேம்படுத்திக்கொண்ட விராட், சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை முழுமையாக நிரூபிக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். 2009-ல் நடந்த இலங்கைத் தொடரில் அந்த வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.

முழு தொடரை வாசிக்க....

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE