திண்டுக்கலில் தனி ஆளாக போராடிய பாமக வேட்பாளர் திலகபாமா!

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் கட்சித் தலைவர்களை எதிர்பார்த்து காத்திராமல், தனி ஒருவராக நாற்று நடுவது, வடை சுடுவது, வெங்காயம் விற்பது என பல்வேறு செயல்களில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் திலகபாமா, கடந்த தேர்தலைவிட 95 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக போட்டியிடும் என அக்கட்சியினர் ஆர்வமுடன் இருந்த நிலையில், கூட்டணியில் பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு பாட்டாளி மக்கள் கட்சி 2019 தேர்தலில் போட்டியிட்ட நிலையில் 2-வது முறையாக தற்போதைய தேர்தலிலும் களம் இறங்கியது. அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார்.

இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அவரது கட்சித் தலைவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. பிரச்சாரம் முடியும் தினத்துக்கு முந்தைய நாள் கட்சித் தலைவர் அன்புமணி ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டும் பேசினார்.

இவரை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய வில்லை. கூட்டணிக் கட்சியான பாஜக-வில் இருந்து ஒருவர்கூட பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வில்லை. இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் வடை சுடுவது, நாற்று நடுவது, வெங்காயம், மாம்பழம் விற்பனை செய்வது போன்ற பணிகளை செய்து வாக்காளர்களை கவர்ந்தார்.

கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் செய்த பழைய முறைதான் இது என்றாலும், பாமக வேட்பாளர் திலகபாமாவின் நடவடிக்கைகள் வாக்காளர்களை கவர்ந்தது.

பாஜக, பாமக-வின் உள்ளூர் நிர்வாகிகள் மட்டுமே இவரது பிரச்சாரத்துக்கு துணை நின்றனர். பிரச்சாரத்துக்கு சென்ற இடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதையும் கண்டறிந்து போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்தார். மொத்தத்தில் தேர்தல் களத்தில் தனி ஆளாக போராடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் ஆர்வமுடன் காலையிலேயே வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 2019 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து 2,07,551 வாக்குகள் பெற்று டெபாசிட் பெற்ற நிலையில், தற்போதைய தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட திலகபாமா பெற்ற வாக்குகள் 1,12,503 மட்டுமே. டெபாசிட்டையும் இழந்தார்.

கடந்தமுறை அதிமுக கூட்டணி என்பதால் பாமகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தன. இந்த முறை பாஜக கூட்டணியில் 95 ஆயிரம் வாக்குகள் குறைந்து விட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE