சமூக ஊடக வானவில்-3

By சைபர்சிம்மன்

சமூக ஊடகத்துக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு சுவாரசியமான முன்கதையையும் கொண்டிருக்கிறது. சமூக ஊடகத்தின் தன்மையை நன்றாகப் புரிந்துகொள்ள இந்த முன் வரலாற்றையும் தெரிந்துகொள்வது அவசியம்.

சமூக ஊடக வரலாற்றுக்குச் செல்லும் முன், ‘வலை 2.0’ பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில், இரண்டாம் வலை எனப் புரிந்துகொள்ளக்கூடிய ‘வலை 2.0’ எனும் கருத்தாக்கம் சமூக ஊடகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த இடத்தில் வலை பற்றியும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. பொதுவாக, ‘இணையம்’ மற்றும் ‘வலை’ எனும் வார்த்தைகளை இணையம் எனும் ஒரே பொருளைக் குறிக்க நாம் மாற்றி மாற்றிப் பயன்படுத்தினாலும், இரண்டும் ஒன்றல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.

என்ன வித்தியாசம்?

இணையம் எனும்போது, கணினிகளின் வலைப்பின்னலைக் குறிக்கிறோம். அதாவது இன்டெர்நெட் (Internet). வலை எனும்போது வைய விரிவு வலையை (world wide web) குறிக்கிறோம். இரண்டும் வெவ்வேறானது. இணையம் என்பது கணினிகளால் இணைக்கப்பட்ட வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். அந்த வலைப்பின்னலில், தகவல்களை எளிதாக அணுகுவதற்கான வழிதான் வைய விரிவு வலை. அதாவது, வலை என்பது இணையத்தின் ஓர் அங்கம்.


இணையத்தில் உள்ள தகவல்களை எளிதாக பிரவுசர் மூலம் அணுக வழிசெய்ததே வலையின் சாதனை. 1993-ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வலை அறிமுகமானது. அதன்பிறகு உருவாக்கப்பட்ட முதல்கட்ட இணையதளங்கள் பெரும்பாலும், நிலையான உள்ளடக்கத்தைக் கொண்டதாக இருந்தன. மேலும், இவை ஒருவழிப் பாதையாக உள்ளடக்கத்தை வழங்கின. இந்த இணையதளங்கள் செய்திகள் அல்லது தகவல்களை வெளியிடுவதோடு நிறுத்திக்கொண்டன. இணையவாசிகளும் இந்தத் தளங்கள் மூலம் தகவல்களை அணுகுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது.


அதாவது, அச்சு வடிவிலான நாளிதழைப் புரட்டி செய்திகளைப் படிப்பது போல, இணையதளங்கள் வாயிலாகத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம், அவ்வளவுதான்! இணையதளங்களில் இருந்த இணைப்புகளை ‘க்ளிக்’ செய்யும் வசதி, தகவல்களை அறிய மெனு வசதி உள்ளிட்ட அம்சங்கள் அச்சுப் பதிப்பைவிட மேம்பட்டதாக இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு வெளியீட்டு வசதியாக மட்டுமே இருந்தது.

இதற்கு மாறாக, இணையவாசிகள் தகவல்களைப் பெறுவதுடன் தாங்களும் பங்கேற்கும் வகையிலான அம்சங்களைக் கொண்ட இணையதளங்கள் பின்னர் உருவாக்கப்பட்டன. புத்தாயிரமாண்டுவாக்கில் அலையென உருவாகத் தொடங்கிய இத்தகைய தளங்களே, இரண்டாம் அலை தளங்கள் என வர்ணிக்கப்பட்டன. சுருக்கமாக வலை 2.0 (Web 2.0).

திறக்கப்பட்ட கதவு

2-ம் அலை இணையதளங்கள், பயனாளிகள் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பலவிதமாக வழங்கின. உள்ளடக்கத்தை அவர்களே உருவாக்கிக்கொள்ள வழிசெய்யும் வகையிலான தளங்கள் அறிமுகம் ஆயின. இவை, வலைப்பதிவுகள் என அழைக்கப்பட்டன. பயனாளிகள் தாங்களே வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் தளங்கள் உருவாயின. (உதாரணம்: யூடியூப், விமியோ (Vimeo)). இதேபோல புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ள ‘ஃபிளிக்கர்’ உள்ளிட்ட தளங்கள் உதவின.

விக்கி மென்பொருள் சார்ந்த தளங்கள், பயனாளிகளே கட்டுரைகளை உருவாக்கி, அவற்றைத் திருத்தி மேம்படுத்தி, கூட்டு முயற்சி மூலம் உள்ளடக்கத்தை உருவாக்க வழி செய்தன. (உதாரணம்: விக்கிபீடியா). இவை தவிர ’ஸ்லேஷ்டாட்’ போன்ற சமூகச் செய்தி தளங்கள், செய்திகளைத் தேர்ந்தெடுத்து முன்வைப்பதையும் பயனாளிகளின் கைகளில் வழங்கின. ‘டெலிஷியஸ்’ போன்ற சேவைகள், புதிய இணையதளங்களைக் கண்டறிவதைப் பயனாளிகளின் கூட்டுப் பொறுப்பாக்கின. இன்னொரு பக்கம், ‘மேஷ்-அப்’ வகை தளங்கள், இணைய வரைபடம் மீது பயனாளிகளே தகவல்களைப் பதிவுசெய்து புதிய வகை உள்ளடக்கத்தை உருவாக்க வழிவகுத்தன. தொழில்நுட்ப நோக்கிலான முன்னேற்றங்களும் இந்தப் போக்குக்கு வலு சேர்த்தன.

இப்படியாக, அதுவரை நுகர்வோராக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்திவந்த பயனாளிகள் அதில் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கான வாயில்கள் திறக்கப்பட்டன. இதற்கு வழி வகுத்த இணையதளங்கள் அவற்றின் பயனர் பங்கேற்பு உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக, முதல் தலைமுறை தளங்களிலிருந்து வேறுபட்டிருந்தன.

முன்னோடி தளங்கள்


‘வலை 2.0’ எனும் பெயரில் பெரும் இயக்கமாக எழுச்சிபெற்ற இந்தத் தளங்களின் அங்கமாகவே, பல்வேறு வகையான சமூக ஊடகங்களும் உருவாயின. பங்கேற்பு தன்மை மூலம், பயனாளிகளை நுகர்வோர் எனும் இடத்திலிருந்து உருவாக்குநர்கள் எனும் இடத்துக்கு இந்தத் தளங்கள் உயர்த்தின. இவற்றின் ஓர் அங்கமாகவே சமூக வலைப்பின்னல் சேவைகள் அறிமுகமாயின.

ஆரம்பகால வலையில் உருவான தட்டையான தளங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட துடிப்பான இயங்குதன்மை கொண்ட தளங்களை வேறுபடுத்திக்காட்ட, ‘வலை 2.0’ எனும் பதம் தேவைப்பட்டாலும், இந்த அம்சங்களைக் கச்சிதமாகப் பிரதிபலித்த சமூக ஊடக சேவைகளுக்கு நிகரான அம்சங்கள் இணையத்தில் இருந்தன என்பது பலரும் அறியாத வரலாறு.

உதாரணத்துக்கு, பிபிஎஸ் (bulletin board system) எனக் குறிப்பிடப்படும் தகவல் பலகை சேவை, தொலைபேசி மோடம் மூலம் இணைக்கப்பட்ட கணினியில் பயனாளிகள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வழிசெய்தது. 1980-களில் இத்தகைய தகவல் பலகை சேவைகள் ஆயிரக்கணக்கில் இருந்தன என்பதோடு, இவை அனைத்தும் இணைக்கப்பட்டு ஃபிடோநெட் (FidoNet) எனும் வலைப்பின்னல் சேவையாகவும் அமைந்தன. அதேபோல, ஐ.ஆர்.சி (Internet Relay Chat (IRC)) அரட்டை வசதி இணையம் வழியே உடனடியாகப் பயனாளிகள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழிசெய்தது. மேலும், இணைய விவாதக் குழுக்களும், செய்திக் குழுக்களும் பயனாளிகள் இடையிலான செய்தி மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கு வழிவகுத்தன.

பிபிஎஸ், ஐ.ஆர்.சி போன்ற சேவைகள் இப்போது சமூக ஊடகங்களில் நாம் பயன்படுத்தும் பல்வேறு ஆதார அம்சங்களைக் கொண்டிருந்தன. அந்த வகையில், சமூக ஊடகங்களின் முன்னோடியாக இவற்றைக் கருதலாம். இதன் முக்கியக் கிளையாக சமூக வலைப்பின்னல் தளங்கள் பிறந்த கதையை இனி பார்க்கலாம்!

(தொடரும்)

பெட்டிச் செய்தி

இணைய பிளேட்டோ

கிரேக்க தத்துவஞானி பிளேட்டோவை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இணையத்திலும் ஒரு பிளேட்டோ உண்டு. இந்த பிளேட்டோ ஒரு கணினி அமைப்பு. இணையத்துக்கான விதை விதைக்கப்படுவதற்கு முன்பே, 1960-களில் அப்போதைய ‘மெயின்ஃபிரேம் கம்ப்யூட்டர்’ கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்ற வசதியை அளித்தது. இணைய கல்வியில் ஒரு முன்னோடி முயற்சியாகக் கருதப்படும் இந்தக் கணினி அமைப்பு, விவாதக் குழுக்கள், மின்னஞ்சல், அரட்டை, வீடியோ விளையாட்டு என நவீன சமூக ஊடக வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்தது. மேலும் தகவல் அறிய:

http://platohistory.org/

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE