காதல் வேறு வடிவத்தில் திரும்பும்!

By ஆர்த்தி வேந்தன்

இலக்கிய ஆர்வலர்களால் கொண்டாடப்படும் ஐரோப்பிய இலக்கியவாதிகளில் ஒருவர் ஃபிரான்சிஸ் காஃப்கா. ‘காலை விழித்தெழும்போது, நீங்கள் கரப்பான் பூச்சியாக மாறியிருந்தால் எப்படி இருக்கும்?‘ அப்படியொரு கதையை எழுதியவர் காஃப்கா. 1915-ல் ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய இந்த நாவல் ஆங்கிலத்தில், ‘Metamorphosis’, தமிழில் ‘உருமாற்றம்’ என உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த காஃப்கா, இன்றுவரை அநேகரின் சிந்தனையில் தாக்கம் செலுத்தி வருகிறார். அதற்கு சிறிய உதாரணம், பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ’Kafka and the Doll’ சிறுகதை. படக் கதையாக வெளிவந்த இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியை, தமிழில் மொழிபெயர்த்துள்ளார் மொழி ஆய்வாளர் ஆர்த்தி வேந்தன்.

ஒருமுறை, ஃபிரான்ஸ் காஃப்கா பெர்லினில் உள்ள பூங்கா வழியாக நடந்து கொண்டிருக்கும்போது, பொம்மையை தொலைத்துவிட்டு அழுது கொண்டிருந்த ஒரு சிறுமியைச் சந்தித்தார். அவளுடன் சேர்ந்து காஃப்காவும் பொம்மையைத் தேடினார்; ஆனால் கிடைக்கவில்லை.

சிறுமியைச் சமாதானப்படுத்த , "உன் பொம்மை பயணம் சென்றுள்ளது" என்றார். "அது உனக்கு எப்படி தெரியும்?" என்று சிறுமி கேட்கிறாள். "பொம்மை என்னிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளது" என்கிறார் காஃப்கா.

அடுத்த நாள் காஃப்கா, கடிதத்துடன் மீண்டும் பூங்காவுக்கு வந்தார். சிறுமி அவருக்காக காத்திருக்கிறாள். அவள் இன்னும் படிக்கக் கற்றுக் கொள்ளாததால், காஃப்கா கடிதத்தை உரக்கப் படிக்கிறார்.

"தயவுசெய்து அழாதே. நான் இந்த உலகைப் பார்க்க ஒரு பயணம் போகிறேன். என்னுடைய பிரமிப்பான அனுபவங்களைப் பற்றி நான் உனக்கு எழுதுகிறேன்"

அவர்களின் ஒவ்வொரு சந்திப்பின் போதும், ​​காஃப்கா பொம்மையின் கடிதங்களை சிறுமிக்கு வாசித்துக் காட்டினார். இறுதியாக, பெர்லினுக்குத் திரும்பிய பொம்மையை காஃப்கா அந்தச் சிறுமிக்கு தந்தார்.

"இது என் பொம்மை போல் இல்லை" என்று அந்தச் சிறுமி சொன்னாள். காஃப்கா, பொம்மை எழுதிய மற்றொரு கடிதத்தை உரக்கப் படிக்கிறார்...

"என் பயணங்கள் என்னை மாற்றின"

சிறுமி, புதிய பொம்மையைக் கட்டிப்பிடித்தபடி மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பொம்மைக்குள் ஒரு கடிதம் இருப்பதை அந்தச் சிறுமி பார்த்தாள். காஃப்கா கையெழுத்திட்ட சிறிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

"நீங்கள் விரும்பும் அனைத்தும் அநேகமாக இழக்க நேரிடும். ஆனால் இறுதியில், காதல் வேறு வடிவத்தில் திரும்பும்."

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE