டெல்லியில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண சடங்கின்போது வாயில் குட்காவை வைத்து மென்று கொண்டிருந்த மணமகனை, மணப்பெண் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் குட்கா உள்ளிட்ட தீய பழக்கங்களை கைவிட வேண்டிய அவசியத்தைக் குறித்து. தனது முகநூல் பக்கத்தில் எழுத்தாளர் கீதப்ப்ரியன் எழுதிய பதிவு இது:
குட்கா , மாவா, பீடா, கைனி மகா மோசமான கெட்ட பழக்கம், இது தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை தொடரும்.
இந்த பான்பராக் , மாணிக்சந்த் (RMD) குட்காவை மதுரையில் எங்கள் காம்பவுண்டு குடித்தனத்தில் வசித்த அண்ணன்கள் எப்போதும் வாயில் ஒதுக்கி ஊறவைத்து மென்றபடி கதைகள் பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த கிளர்ச்சியான வாசனை சிறாருக்கு அபாயகரமானது. சிலருக்கு பெட்ரோல் வாசனை போல பிடித்துவிடும் முயன்று பார்க்க வைக்கும், சிலருக்கு தலை சுற்றல் வந்துவிடும்.
குட்காவில் தொற்றும் பழக்கம் மெல்ல சுபாரி மாவா , ஸ்ட்ராங்கான ஜர்தா பீடா, கைனி (ஹான்ஸ் ) என நம்மை ஆயுளுக்கும் அடிமைப்படுத்திவிடும். இது இல்லாமல் நாம் உயிர் வாழ்வது கடினம் என மூளையில் இறங்கிவிடும். மனிதர்களின் தன்னம்பிக்கையை குலைத்துவிடும், தோற்றத்தை சீர்குலைத்துவிடும்.
சிகரட் பிடித்தால் பற்கள் மஞ்சள் வண்ணத்தில் மாறினால், குட்கா, மாவா, பீடா ஒதுக்கி ஊறவைத்து ரசிக்கத் துவங்கினால் அது பற்களின் எனாமலை சீர்குலைத்து, பற்களின் மேல் வழியாக சாறு உள்ளே இறங்கி நிரந்தரமாகவே படிந்துவிடும். பல் மருத்துவர்கள் sickled scaler கொண்டு எத்தனை குத்தி சுரண்டித் தேய்த்தாலும் அந்த தடிமனான கறை போகாது,
பீங்கான் வாஷ்பேசினில் குட்கா துப்பிக்கொண்டே வந்தால், நாளடைவில் அந்த கறையை எந்த வித Hydrochloric ஆசிட் அல்லது வயர் ப்ரஷ் கொண்டும் கறையை அகற்றி விடவே முடியாது. பீங்கான் வாஷ் பேசினுக்கே இப்படி என்றால், உங்கள் பற்கள் என்ன பாடுபடும் என்று யோசியுங்கள்.
எனக்கு டைம் மிஷின் கிடைத்து எதையாவது சரி செய்ய முடியும் என்றால், நான் மாணவப்பருவத்தில் இந்த போதையால் பீடிக்கப்பட்டு தாழ்வு மனப்பான்மையுடன் உழன்ற பத்து வருடங்களைச் சொல்லுவேன்.
நயா பைசா பெறாத ஒரு லாகிரிப் பழக்கத்துக்குள் சிக்கி இப்படி காசை, இளமையை, எதிர்காலத்தை தொலைத்தவர்கள் எத்தனையோ பேர். குட்கா விலை அதிகம் என்று பீடா கடையில் நின்று அதைவிட வீர்யமுள்ள 120 சுபாரி மாவாவை இரண்டு பாக்கெட்கள் வாங்கி அதைச் சுருட்டி பேன்டின் டிக்கட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வைக்கும்.
உங்கள் பெற்றோர் குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருந்து, உங்கள் நல்ல நேரம் மிச்சமிருந்தால் உங்களுக்கு வாயில் புற்று வைக்காமல் இருக்கும். ஆனால், உங்கள் பற்களை 360° நாசம் செய்து விடும். நரம்புத் தளர்ச்சி வரும், நாவிறங்கிவிடும், சரியான சமயத்தில் வார்த்தை வராது,
இக் கொடிய பழக்கமுள்ளவர் மனைவி மக்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பற்றி யோசித்துப் பாருங்கள்.
குட்கா வாயர்கள் வாய் கால்வாய் போல, சாயப் பட்டறை போல இருக்கும். அந்த நாற்றவாயால் மனைவியை முத்தமிட முடியுமா?தன் குழந்தையைத் தூக்கி கொஞ்ச முடியுமா?
அவ்வளவு ஏன்? பல் மருத்துவர் ‘ஆ’ சொல்லக் கேட்கையில், தன்னம்பிக்கையுடன் அவர் முன்னால் வாயைத் திறக்க முடியுமா?
இந்தக் கொடிய பழக்கத்தால் வாய்ப்புற்று நோய் வந்து, குடும்பத்தை தவிக்க விட்டு ஐம்பது வயதில் மறைந்தவர்களை அறிவேன்.
இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது இது தான், உங்கள் அருகில் உள்ள அரசு/ தனியார் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ஒரு out patient file திறக்கவும்.
அங்கே பல் மருத்துவரிடம் பற்களைக் காட்டுங்கள். அவர் சொல்லும் xray, scan எடுங்கள். அவர் வரச் சொல்லும் நேரத்தில் சென்று அவர் பரிந்துரைக்கும் பல் மராமத்து மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சையை தாமதமின்றி தொடங்குங்கள்.
அவர்கள் குட்கா, மாவா, பீடா வாயர்களுக்கு scaling இரண்டு தவணை வரச் சொல்லுவர். அதன் பின் குழிவிழுந்த சொத்தைப் பற்களுக்கு filling செய்வார்கள், கீழ் வரிசை பற்களுக்கு வெள்ளை லேசர் ஃபில்லிங், மேல் வரிசை பற்களுக்கு lead ஃபில்லிங் செய்வார்கள்.
lead filling கருப்பாக இருக்கும். இந்த வகை ஃபில்லிங் 20 வருடங்கள் கூட தாக்குப்பிடிக்கும். இதை மருத்துவக் கல்லூரியில் தான் செய்வார்கள். பொறுமையாக செய்வார்கள். அதை இரண்டு மூன்று தலைமை மருத்துவர்கள் சோதித்து அங்கீகரிப்பார்கள்.
மாவா, பற்களை சின்னாபின்னமாக்கி சொத்தை ஆக்கியிருந்தால் ஃபில்லிங் செய்து capping செய்வார்கள். உங்கள் மறுபிறவி என எண்ணிக்கொண்டு சிகிச்சைக்கு ஒத்துழையுங்கள்.
கட்டணமும் நூறு ரூபாய் அளவில் தான் வரும். ஆனால், நீங்கள் 10 நாட்கள் இந்த சிகிச்சைக்கென்றே ஒதுக்கிவிட வேண்டும்,
பணம் நன்றாக சம்பாதிப்பவர்கள் நேரம் இல்லாதவர்கள் உங்கள் வீட்டருகே உள்ள பெயரெடுத்த பல் மருத்துவர்களைப் பாருங்கள். இந்த சிகிச்சை முடித்தவுடன் உங்கள் வாய் அப்படி ஊறும். குட்கா காரத்துக்கு ஏங்கும். நீங்கள் இதுநாள்வரை துப்பி வீணடித்த உமிழ்நீர் எல்லாம் பழக்க தோஷத்தில் வாயில் எட்டிப்பார்க்கும். துப்பாதீர்கள், விழுங்குங்கள். துப்பி சுற்றுச்சூழலை நாறடிப்பதற்கு எச்சில் விழுங்குவது நன்று.
வெதுவெதுப்பாக வெந்நீர் குடித்தபடி இருங்கள். நாக்கை வைத்து பழைய ஞாபகத்தில் பற்களைப் பிடித்திருக்கும் ஈறுகளை நிரவாதீர்கள். rechargable flosser வாங்கி நீர் நிரப்பி பற்களின் மீது ஈறுகளின் மீது நீரை பீய்ச்சி அடியுங்கள்.
குட்கா ஊறல் நாளடைவில் நிற்கும். உடம்பில் புகையிலை முகாந்திரம் இல்லாத நல்ல ரத்தம் விரைவில் ஓடத்துவங்கும். கண்டிப்பாக அடுத்த முறை குட்கா, மாவா, பீடாவை தொடவே மாட்டீர்கள். நல்ல பசியெடுக்கும், லாகிரி வஸ்துக்கு செலவாகிற பெரும்பணம் மிச்சமாகும். CBSE ஸ்கூல் ஃபீஸ் கூட கட்டலாம், அடுத்த முறை குட்கா, மாவா, பீடா வாயர்கள் உங்களை கடந்தாலே உங்களுக்கு வயிறு புரட்டவோ தலைசுற்றவோ செய்யலாம்.
இங்கே 20 வருடங்களுக்கு முன் தனியார் ஒயின்ஸ் காலத்தில் குட்கா பயங்கர பிரசித்தம். இன்று இதன் இடத்தை டாஸ்மாக் ரசாயன குவாட்டர் பிடித்துக் கொண்டது.
வட மாநில அலுவலகப் படிகளில் நாம் ஏறி இறங்கினால் மயங்கி விடுவோம், முழுக்க காவியாக துப்பி வைத்து இருப்பார்கள்.
20 வருடங்களுக்கு முன் மும்பை போகையில் அங்கு குட்கா தடை, பாக்கு கலந்த சுண்ணாம்பையும் (தம்பாக்), ஜர்தாவையும் தனியாக பாக்கெட்டில் விற்பார்கள். இந்த மும்பை மாடல் இன்றும் குட்கா தடை அமலில் உள்ள மாநிலங்களில் சக்கை போடு போடுகிறது.
அதை இரண்டையும் உள்ளங்கையில் கொட்டி கலந்து தட்டி, வாயில் இட்டுக் கொள்வர் குட்கா பிரியர்கள்.
இப்போது சக்கைப்போடு போடும் விமல் என்ற தம்பாக்கிற்கு, நடிகர் அஜய் தேவ்கன் ப்ராண்ட் அம்பாசடர். ஒரு பக்கம் ‘புஜ்’ என்று தேச பக்தி படம் நடித்து விட்டு, மறுபுறம் இப்படி குட்கா விளம்பரத்தில் நடிக்க மனிதருக்கு கூசாதா?