தடைசெய்யப்படுகிறதா ஹுரியத்?- பிரிவினைவாத அமைப்பின் பின்னடைவு

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

காஷ்மீர் மண்ணில் மீண்டும் ஒரு சலனம் நிகழ்வதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களின் பின்னே இருக்கும் காரணிகள் குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ), பயங்கரவாத அமைப்புகளுக்கு ஹுரியத் மாநாடு அமைப்பு நிதியுதவி வழங்குவதாகக் குற்றம்சாட்டி வருகிறது. இதன் நீட்சியாக, இரு பிரிவுகளாகச் செயல்பட்டுவரும்  ஹுரியத்  அமைப்பு தடைசெய்யப்படலாம் என்று வெளியான தகவல்கள் காஷ்மீர் மீது கவனம் குவியச் செய்திருக்கின்றன.

பின்னணி என்ன?

பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் ஹுரியத் தலைவர்களின் பரிந்துரையின் பேரில் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதுண்டு. அதைப் பயன்படுத்தி காஷ்மீர் மாணவர்களிடம் அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு, அக்கல்லூரிகளுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பிவருவதாக ஹுரியத் தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு சீட்டுக்கு 10 முதல் 12 லட்ச ரூபாய் வரை அவர்கள் வசூலிக்கிறார்கள்; அதில் பாதித் தொகை அவர்களின் சொந்த செலவுக்குப் பயன்படுத்தப்படுகிறது; மீதித் தொகை லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவியாக வழங்கப்படுகிறது என அடுக்கடுக்காகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

அத்துடன், 2016-ல் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு காஷ்மீரில் கலவரத்தை உருவாக்க, ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானியின் மருமகனான அல்டாஃப் அஹமது ஷாவுக்கு மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) இளைஞர் தலைவர் வஹீத்-உர்-ரஹ்மான் பாரா 5 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. 2017-ல் ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அல்டாஃப் அஹமது ஷா, தற்போது அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.

இவற்றின் அடிப்படையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) பிரிவு 3(1)-ன் கீழ், ஹூரியத் அமைப்பின் இரு பிரிவுகளும் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹுரியத் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்), ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய அமைப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்யப்பட்டுவிட்டன.

ஹுரியத் உருவான கதை

ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், பல்வேறு அமைப்புகள் அடங்கிய ஜம்மு காஷ்மீர் அவாமி ஆ க்‌ஷன் கமிட்டி எனும் கூட்டமைப்பின் தலைவருமான முகமது ஃபாரூக் ஷா 1990-ல் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது மகனான மிர்வாயிஸ் உமர் ஃபாரூக், பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு (ஏபிஎச்ஸி) எனும் அமைப்பை 1993-ல் உருவாக்கினார். கருத்தியல் ரீதியான வேறுபாடுகள் கொண்ட 26 குழுக்கள் இதில் சேர்ந்தன.

காஷ்மீர் சுதந்திரமான பிரதேசமாக வேண்டும் என்று கருதுபவர்களும், பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று கருதுபவர்களும் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்திய ஆளுகையின் கீழ் காஷ்மீர் இருக்கக்கூடாது என்பதே ஹுரியத் அமைப்பின் பெரும்பாலான குழுக்களின் நிலைப்பாடு. எனவே, பிரிவினைவாத அமைப்பு என்றே ஹுரியத் பொதுவாக அழைக்கப்படுகிறது. ‘ஹுரியத்’ எனும் வார்த்தைக்கு ‘சுதந்திரம்’ என்று அர்த்தம். காஷ்மீரில், கல் வீச்சு முதல் தேர்தல் புறக்கணிப்பு வரை அனைத்தும் பிரிவினைவாதத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.

பிளவுபட்ட அமைப்பு

பொதுவாகவே உமர் ஃபாரூக் மிதவாதப் போக்கு கொண்டவர் என்றும், சையது அலி ஷா கிலானி தீவிரவாதப் போக்கு கொண்டவர் என்றும் கருதப்படுகிறது. வெவ்வேறு சித்தாந்தப் பார்வை கொண்டவர்கள் ஹுரியத் எனும் ஒரே குடையின்கீழ் ஒற்றுமையுடன் செயல்பட்டுவந்தாலும், அவர்களுக்கு இடையில் அவ்வப்போது வெடிக்கும் கருத்து வேறுபாடுகள் பொதுவெளிக்கும் வந்துவிடும். அப்படி உருவான கருத்து வேறுபாட்டால், சையது அலி ஷா கிலானி ஹுரியத் அமைப்பிலிருந்து விலகி, தெஹ்ரீக்-இ-ஹுரியத் ஜம்மு காஷ்மீர் எனும் பிரிவைத் தொடங்கினார். அப்போது ஹுரியத் அமைப்பில் நிதி முறைகேடுகள் நடந்ததாகப் புகார்களைக் கிளப்பினார். 2020-ல் ஹுரியத்துடனான அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார்.

ஹுரியத் அமைப்பின் நிலைப்பாடுகளிலும் அவ்வப்போது மாறுதல்கள் ஏற்பட்டதுண்டு. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரிவினைவாதத் தலைவர்கள் டெல்லி சென்று அப்போதைய துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்துப் பேசினார்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சில ஹுரியத் தலைவர்களுடன் ரகசியச் சந்திப்பை நடத்தினார். 2005-ல் மிர்வாயிஸ் உமர் ஃபாரூக், யாசின் மாலிக் ஆகியோர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முஸாஃபராபாத் வழியாகப் பாகிஸ்தான் சென்று அங்குள்ள பிரிவினைவாதத் தலைவர்களையும், பாகிஸ்தான் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசே ஏற்பாடு செய்திருந்தது. மொத்தத்தில் ஹுரியத் தலைவர்களுக்கு மத்திய அரசு போதிய முக்கியத்துவம் அளித்துவந்தது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட இதுபோன்ற உத்திகள் அரசுக்குத் தேவையாக இருந்தன என்றே சொல்லலாம்.

2017-ல் காஷ்மீரின் அனைத்துத் தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்தபோது, அதில் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என ஹுரியத் அமைப்பு பிடிவாதம் காட்டியது. 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட சமயத்தில், காஷ்மீரின் பிற தலைவர்களுடன் மிர்வாயிஸ் உமர் ஃபாரூக் உள்ளிட்ட ஹுரியத் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேவேளையில், 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டது தொடர்பாக ஹுரியத் அமைப்பின் தரப்பில் பெரிய அளவில் எதிர்வினைகள் எழவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

வாதப் பிரதிவாதங்கள்

“காஷ்மீரின் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படும் அத்தனை அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்” என்று காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங் கூறியிருக்கிறார். பிரிவினைவாதத் தலைவர்கள் விஷயத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் வெளிப்படை. ஹுரியத் தலைவர்களின் வாரிசுகள் வெளிநாடுகளில் கல்வி பயிலும் அளவுக்கு அவர்களுக்குப் பொருளாதார வசதி இருப்பதாகவும், அதன் பின்னணி குறித்து ஆராய வேண்டியது அவசியம் என்றும் பாஜகவினர் வலியுறுத்துகின்றனர்.

மறுபுறம், கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பதே, பாஜகவின் 
தோல்விக்கு சாட்சி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. 370-வது சட்டக்கூறு திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர், காஷ்மீர் இளைஞர்கள் பலர் பயங்கரவாத அமைப்புகளில் அதிக அளவில் சேர்ந்துவருவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இனி என்ன?

“பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, மலேசியா, துருக்கி போன்ற நாடுகளுக்கும் உயர் கல்விக்காக மாணவர்களை 
அனுப்பிவருகிறோம். ஆனால், அதில் ஒளிவுமறைவு ஏதும் இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்குத்தான் உதவி செய்கிறோம்” என்று மிர்வாயிஸ் உமர் ஃபாரூக் விளக்கமளித்திருக்கிறார். ஹுரியத் அமைப்புக்குத் தடை விதிக்கப்படலாம் எனும் செய்திகள் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இப்போதைக்கு அப்படியான திட்டம் இல்லை என அரசுத் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது.

எனினும், முன்னெச்சரிக்கையாக கிலானியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ‘தெஹ்ரீக்-இ-ஹுரியத் (ஜம்மு காஷ்மீர்)’ பெயர்ப் பலகையை, அவரது மகன் அகற்றியிருப்பது, இவ்விஷயத்தில் இன்னும் சில நகர்வுகள் நிச்சயம் என்பதையே காட்டுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE