என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கும் முயற்சியாளர்களுக்கு வெற்றி தொட்டுவிடும் தூரம்தான். அப்படி அயராத உழைப்பை இடைவிடாது செலுத்தி, அனைவரையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த ஜோதீஸ். ஒருபுறம் காயலில் (ஏரி) வலைவீசி மீன் பிடித்துவந்த இவர், மறுபுறம் கல்விக் கடலில் மூழ்கி முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்!
கேரளத்தின் அரூரைப் பூர்விகமாகக் கொண்ட ஜோதீஸ், வேம்பனாடு ஏரியின் ஒரு பகுதியான கைதப்புழா காயலில் மீன் பிடித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். தனது அபாரமான கல்வித் திறனாலும் விடாமுயற்சியாலும் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள், ஒவ்வொரு இளைஞருக்கும் ஊக்கம் அளிக்கக்கூடியவை. கூடவே, தனது சமூகம் எதிர்கொள்ளும் சவால்களையும் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் முனைப்பில் இருக்கிறார் இந்த இளைஞர்!
12 வயதில் தொடங்கிய பயணம்
தனது வெற்றிப் பயணம் குறித்து, உற்சாகம் மிகுந்த குரலில் நம்மிடம் பேசத் தொடங்கினார் ஜோதீஸ்.
“குடும்பச்சூழல் காரணமாக என் அப்பாவோடு சேர்ந்து மீன்பிடித் தொழிலுக்குக் காயலுக்கு வந்தேன். 12 வயசுல இருந்தே மீன்பிடித் தொழிலில் இருக்கேன். தினமும் காலை 6 மணிக்கெல்லாம் காயலுக்குத் தொழிலுக்கு வந்துவிடுவேன். பத்து மணி வரைக்கும் வலை விரிப்பேன். 25 முதல் 30 மீட்டர் வரை நீளமுள்ள வலை அது. சவாலான காரியம்தான். இருந்தாலும் உடல் வலுவையெல்லாம் திரட்டி வலையை விரித்து வைத்துவிட்டு சென்றுவிடுவேன். தொடர்ந்து மாலையில் போய் அதே வலையை இழுப்பேன். இதற்கு இடையில் தான் தினமும் பள்ளி, கல்லூரிக்கும் போய் படித்துவந்தேன். இதுதான் கடந்த 25 ஆண்டு கால எனது அன்றாட வாழ்க்கை. ஓடி ஓடி உழைத்தாலும் நான் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக்கொண்டதில்லை” என்கிறார் ஜோதீஸ்.
இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனையில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. தனது முனைவர் பட்ட ஆய்வுக்குத் தன் சொந்த வாழ்க்கையையே எடுத்துக்கொண்டதுதான் அது. ஆம்! ‘கேரளப் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம்’ எனும் தலைப்பிலேயே ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் ஜோதீஸ். அன்றாட வாழ்வில் தான் எதிர்கொண்ட விஷயங்களை முன்னிறுத்தியே, இதை இவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
கல்வியைக் கைவிடும் அவலம்
இதுகுறித்தும் நம்மிடம் பேசினார் ஜோதீஸ். “நான் சேர்த்தலா தாலுகாவில் உள்ள உள்நாட்டு மீனவர்கள் குறித்துத்தான் ஆய்வுசெய்தேன். உயர் கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாலும், வேலையின்மையாலும் உள்நாட்டு மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகபட்சமாக ப்ளஸ் 2 வரையே படித்திருக்கிறார்கள். பலர் அதற்கும் குறைவாகவே படித்திருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் உதவியைக்கூட அவர்களால் கேட்டுப் பெற முடியவில்லை. அதற்கான கல்வியைப் பரவலாக இந்தச் சமூகம் கொண்டிருக்கவில்லை. இதெல்லாம் சேர்த்துத்தான் கேரளத்தில் உள்நாட்டு மீனவர்களை மிகவும் பின்தங்கிய நிலையில் வைத்துள்ளது. எனவே, அரசாங்கம் உள்நாட்டு மீனவர்களுக்குக் கல்வியறிவைக் கொடுப்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி வருகிறேன். அது மட்டும் போதாது. சுற்றுச்சூழல் தளத்திலும் ஏரியில் மீன்வளத்தை அதிகரிக்க வேண்டியதும் அவசியம் என்று நினைத்தேன். காயலில் அதிக அளவு மீன்கள் கிடைப்பதில்லை. அதனால்தான் உள்நாட்டு மீனவர்களின் பொருளாதாரத்தைப் பெருக்க ஆக்கபூவமான யோசனைகளையும் எனது ஆய்வில் சமர்ப்பித்தேன்” என்கிறார் ஜோதீஸ்.
சவால்களைக் கடந்த சாதனை
நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரம் வரை ஏரியில் செலவிட்ட ஜோதீஸ், அதற்கு மத்தியிலேயே கல்வி எனும் பெருவெள்ளத்தையும் கடந்திருக்கிறார். ஆம்! அரூரில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் ஜோதீஸ். மீன் தொழிலாளியாக வேலை பார்த்து ஈட்டிய வருவாயை வைத்தே தனது கல்வியையும் தொடர்ந்தார். சேர்த்தலாவில் உள்ள என்.எஸ்.எஸ்
கல்லூரியில் எம்.ஏ., படிப்பை முடித்தவர், தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பினார். ஆனால், எம்.ஃபில் படிப்பை முடிக்காத காரணத்தால் இவருக்கு வழிகாட்டியை ஒதுக்க எம்.ஜி. பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. அப்போதும் முயற்சியைக் கைவிடவில்லை ஜோதீஸ். இந்தச் சவாலையும் வென்று காட்டியது பற்றி நம்மிடம் விவரித்தார்.
“எம்.ஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜன் குருக்கல். அவரை நேரடியாகச் சந்தித்து என் நிலையை விளக்கிச் சொன்னேன். தினசரி ஏழு மணி நேரம் காயலில் மீன்பிடித் தொழில் செய்துவிட்டு அதற்கு மத்தியில் தான் படித்தேன் என்று சொன்னதும், என் தன்னம்பிக்கையை அவர் வெகுவாகப் பாராட்டினார். கூடவே, கோட்டயம் அரசுக் கல்லூரியின் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஆர்.வி.ஜோஸை எனக்கு வழிகாட்டியாக இருக்க பரிந்துரைத்தார். அவர் எனது ஆய்வுக்குச் சிறப்பாக வழிகாட்டியதால்தான், என்னால் முழுமையாக ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற முடிந்தது.
என்னோட அம்மா விலாசினி தினக்கூலிப் பணியாளர். அப்பா தங்கப்பன் மீன்பிடித் தொழிலாளி. இருவருக்கும் தங்கள் மகன் டாக்டர் பட்டம் வாங்கிவிட்டான் என்பது மனநிறைவைக் கொடுத்திருக்கிறது. இன்று பலரும் தங்கள் குடும்பச் சூழல், பொருளாதாரத்தைக் காரணம்காட்டி கல்வியை இடையிலேயே நிறுத்திவிடுகின்றனர். அப்படி நிறுத்துபவர்கள் அதன்பின்பு ஏதாவது வேலைக்குப் போய்விட்டால், அதோடு தங்கள் தேடல்களையும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால், விடாமல் முயன்றால் வாழ்க்கையில் வெற்றியை நிச்சயம் எட்டிவிடலாம். தங்கள் கனவை நனவாக்கிக் கொள்ளலாம். அதற்கு நானே சாட்சி. கேரளத்தில் இப்போது கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. பெருந்தொற்று பிரச்சினை முடிந்து இயல்புநிலை திரும்பியதும் கல்லூரிப் பேராசிரியராகப் பணியில் சேர உள்ளேன். அதுவரை வழக்கம்போல் காயல்தான் என் வருவாய் ஈட்டும் தளமும், தாய்மடியும்!” என்றார் ஜோதீஸ்.
மாணவப் பருவத்திலேயே பொறுப்புணர்ச்சியும், கல்வி மீதான காதலும் கொண்டு உழைக்கும் இளைஞர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தாலும் இறுதியில் வெற்றிக் கனியைப் பறித்துவிடுவார்கள். ஜோதீஸ் அதற்கு மிகச் சரியான உதாரணம்!