நதிநீர் இணைப்பு; மக்களைக் காவுகொடுக்கும் கொலைகாரத் திட்டம்!- நித்யானந்த் ஜெயராமன் பேட்டி

By காமதேனு

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

கரோனா பெருந்தொற்று நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் சுட்டெரிக்கும் கோடையில், சாமானிய மக்கள் வழக்கம்போல் குடிநீர் லாரிகளுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!

இத்தனைக்கும், 2015-ல் பெய்த கனமழையால் தமிழ்நாடு வெள்ளக்காடானதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஏரிகளை ஆக்கிரமித்துக் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றியதன் விளைவு அது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைச் செப்பனிட்டுப் பராமரித்திருந்தால், தண்ணீரைத் திறந்துவிட்டு ஊரை மூழ்கடிக்கும் கொடுமையைத் தவிர்த்திருக்கலாம் என்றனர். இனியேனும் அவற்றைக் கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், அடுத்த நான்காண்டுகளில் 2019-ல் ‘பூஜ்ஜியம் தினம்’ என்று தண்ணீர் இல்லாத நாளை நோக்கி தமிழகமும் நகர்ந்தது. ஒரு குடம் தண்ணீருக்கே 20-லிருந்து 30 ரூபாய் வரை ஏழை மக்கள் செலவழிக்கும் கொடுமைக்குத் தள்ளப்பட்டார்கள். சென்னை மாநகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் பெட்டிகள் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ஆறு மாதங்களுக்குக் கொண்டுவரப்பட்டது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம், 20 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையில், “தினமும் இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டுமே பயன்படுத்துகிறேன்” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் சிக்கன பேட்டி கொடுத்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையின்போதுகூட தண்ணீர் சிக்கல் பேசுபொருளானது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஜமுனாபாய் நகர், ஸ்டேட்பாங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கணவருக்காக வாக்குச் சேகரித்தார். அப்போது அவரிடமும் தண்ணீர் தட்டுப்பாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையை தற்காலிகமாக அவர் தீர்த்து வைத்தது செய்தியானது. பென்னாகரம் தொகுதியின் தற்போதைய திமுக எம்எல்ஏ-வான இன்பசேகரன் வாக்குக்கேட்டுச் சென்றபோது,  “தண்ணீர்ப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?” என்று கேள்வி எழுப்பி அத்தொகுதி பெண்கள் அவரை முற்றுகையிட்டனர்.

அணை தண்ணீரை தெர்மோகோல் தட்டுகளைப் போட்டு மூடி ஆவியாகாமல் பாதுகாக்கலாம் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை உலகத்துக்கே சொன்ன, அமைச்சர் செல்லூர் ராஜு தனது தேர்தல் பரப்புரையில், “முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் தீட்டம் மூலம் 24 மணி நேரக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதையே முன்னிலைப்படுத்தினார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, “அதிமுக ஆட்சிக்கு வந்தால் மழை பெய்யும்... வாய்க்கால்களில் தண்ணீர் வரும். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் பஞ்சம்தான் வரும்” என்று பகுத்தறிவுக்குப் புறம்பாக  ‘பிளாக் காமெடி’ செய்தார்.

“விவசாயிகளுக்குத் தேவை தண்ணீரும் தடையற்ற மின்சாரமும் தானே தவிர இலவசங்கள் அல்ல” என்று சீமான் பேசினார். வீடுதோறும் வாஷிங் மிஷின் வழங்கும் வாக்குறுதியை அதிமுக முன்வைத்தபோது, “துணி துவைக்கத் தண்ணீர் எங்கிருந்து வரும்?” என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். இது தவிர திமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பாமக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றன. இப்படி, தண்ணீர் பிரச்சினையானது தமிழ்நாட்டை எல்லா சூழலிலும் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தின் தண்ணீர்ச் சிக்கலைக் குறுக்குவெட்டாகப் புரிந்துகொள்ள சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் ‘காமதேனு’வுக்காக உரையாடினேன்.

கடந்த ஆண்டு தாராளமாக மழை பொழிந்திருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் வராது என நம்பலாமா?

சென்னையில் எவ்வளவுதான் மழை பொழிந்தாலும் செம்மஞ்சேரி மக்களுக்கு அழுக்கான குடிநீர்தான் போய்ச்சேரும். தண்ணீர்ப் பஞ்சமே வந்தாலும் போயஸ் தோட்டவாசிகளுக்கு புழு நெளியும் தண்ணீர் விநியோகிக்கப்படாது. இப்படித்தான் நவீன தீண்டாமை வேலை செய்கிறது. தண்ணீரின் சாதிய அரசியல் இது. மற்றபடி மாதம் மும்மாரி பொழிந்தாலும் ராட்சத மோட்டர்கள் கொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டிருந்தால் எதிர்காலம் சூனியம் ஆகிவிடும். அப்புறம், தண்ணீர்த் தட்டுப்பாடு வரும்போது மட்டும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வலியுறுத்துவது இன்னொரு முட்டாள்தனம்.

ஒவ்வொரு வீட்டின் மாடியில் தேங்கும் மழைநீரைச் சேகரிப்பதால் நிலத்தடி நீரைப் பெருக்கிவிட முடியாது. 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வெள்ள வடிநீர் பகுதி 250 சதுர கிலோமீட்டர்வரை நீளும். அப்படிப்பட்ட வளமான நிலத்தில் வீடுகளைக் கட்டியெழுப்பி கான்கிரீட் காடாக மாற்றிவிட்டார்கள். பிறகு அந்த வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைப்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு. மழைநீரைச் சேமிப்பதென்றால் மண்ணும் நிலமும் வான் பார்த்து திறந்திருக்க வேண்டும்.

இன்றையச் சூழலைச் சமாளிக்க கடல்நீர் சுத்திகரிப்பு, தேசிய நதி நீர் இணைப்புத் திட்டங்களாவது கைகொடுக்குமா?

இயற்கைக்கு மாறான எந்தச் செயலும் வெற்றி தராது. கடல்நீரிலிருந்து உப்பையும் தண்ணீரையும் பிரித்தெடுக்க ஒரு லிட்டர் நல்ல தண்ணீருக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீரை வீணடிக்க வேண்டியிருக்கும். சுத்திகரிப்பின்போது வெளியாகும் கழிவு கடலில்தான் வெளியேற்றப்படுகிறது. இதனால் கடல் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தையே குலைத்துக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இப்படி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அப்படியே பருகவும் முடியாது. அதில் சில தாதுகளைச் சேர்க்க வேண்டும்.

மொத்தத்தில் இது அதிக செலவினத்தை விளைவிக்கும் வீண் திட்டம். மறுபுறம் நதி நீர் இணைப்பு என்று ஆற்று நீரின் வழித்தடத்தை வேறு இடத்துக்கு மடைமாற்றுவதெல்லாம் அபாயகரமான திட்டம். பெரும் பொருட்செலவும் தடம் மாற்றும் இடங்களில் வாழ் உயிரினங்கள், மக்களைக் காவுகொடுக்கும் கொலைகாரத் திட்டம்.

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட கூட்டுக் குடிநீர் தீட்டங்கள் தீர்வாகுமா?

ஒரு நூறாண்டுக்கும் அதிகமான பழைமை கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் இன்றைய நிலை இதுவரை முறையாக ஆராயப்படவில்லை. பொதுவாக அணை கட்டுதல், இணைத்தல் போன்றவை மென்மேலும் நீரின் இயற்கையான ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தும் செயல்களே. நமது ஏரிகளை முறையாகப் பராமரிப்பதுதான் அடிப்படை. ஏரிப் பகுதிகளில் இயல்பாக இருக்கக்கூடிய களிமண் மழைநீரைத் தேக்கி வைத்துக்கொள்ளக்கூடியவை. ஆனால், அதற்கும் சீனாவில் இருந்து மண் வாங்கி நிரப்புவேன் என்கிற அதிமேதாவிகளை என்னவென்று சொல்வது?!

சிறுசேரி, அற்புதமாகத் தண்ணீரை உறிஞ்சி தக்கவைத்துக்கொள்ளும் இயற்கை மழைநீர் சேகரிப்புக்கான மணல் பகுதி. அதில் ஐடி பார்க் உருவாக்கிவிட்டு வளர்ச்சி என்கிறோம். வளர்ச்சி என்ற சொல்லே மண்ணை மூடுவது என்றாகிவிட்டது. சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை மக்கள் எதிர்க்க, விவசாய நில அழிப்பு, நீர்நிலைகள் அபகரிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இதில் நாம் கவனிக்கத் தவறுவது புவி வெப்பமடைதலுக்கு இட்டுச் செல்லும் கார்பன் வெளியேற்றம். அந்தச் சாலையில் வாகனங்கள் போக்குவரத்து தொடங்கினால்தான் காற்று மாசுபாடு ஏற்படும் என்பதில்லை. அப்பகுதியெங்கும் உள்ள தாவரங்களை அழிக்கும்போதே, மண்ணைத் தோண்டும் போதே கார்பன் வெளியேறும். பிறகு, கனமழை பொழியும்போது மண்ணரிப்பைத் தடுக்கும் மரங்கள் இல்லாமல் போக ஒருபுறம் வெள்ளப் பெருக்கு உண்டாகும். மறுபுறம் ரோட்டைக் கடந்து நீர் வரத்து தடுத்துநிறுத்தப்பட்டுவிடவே வறட்சி உண்டாகும். இதெல்லாம் தெரிந்தும், கண்ணை மூடிக்கொண்டு பொருளாதாரக் கட்டமைப்பு மட்டுமே வளர்ச்சி என்று பிதற்றிக்கொண்டிருக்கிறோம்.

தண்ணீர் பஞ்சத்திலிருந்து நாம் தப்பிக்க வழியேதும் உண்டா?

எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது. வரும் காலங்களில் தெற்காசிய நாடுகளெங்கும் அதிகப்படியாக வெப்பக்காற்று வீசும் அபாயமுள்ளதாக அமெரிக்க புவி இயற்பியல் சங்கம் அண்மையில் வெளியிட்ட ஆய்விதழில் எச்சரித்துள்ளது. 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைப் பூமி கடந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் சுட்டிக்காட்டியது. இதை மீறாமல் இருந்தால்கூட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான வெப்பக்காற்று இனி வீசும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்று பல்வேறு கட்சிகள் பிரகடனம் செய்துள்ளது கேட்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுத்து நிறுத்தும் எந்த ஆக்கபூர்வமான திட்டமும் எந்த அரசியல் கட்சிகளிடமும் இல்லையே?!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE