சினிமா சிற்பிகள் - 7: செர்கை ஐஸன்ஸ்டைன் - ‘மான்டாஜ்’ உத்தியைத் தந்த மந்திரக் கலைஞன்

By க.விக்னேஷ்வரன்

ஒரு திரைப்படம் உருவாகத் திரைக்கதை, இயக்குநரின் திறமை, ஒளிப்பதிவு நேர்த்தி எனப் பல அம்சங்கள் முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன. இவை அனைத்தும் சரியான முறையில் கலந்தால்தான் சினிமா என்ற ரசவாதம் சிறப்பாக வெளிப்படும். இந்தக் காரணிகளை இணைப்பதுதான் எடிட்டிங். எடிட்டிங் என்பது காட்சிகளை வரிசைப்படுத்தி அடுக்குவது மட்டுமல்ல, ஒரு திரைப்படத்தின் பாங்கையே அதன் மூலம் மாற்றியமைக்க முடியும். இத்தொடரின் முற்பகுதியில் ஜார்ஜ் மிலியஸ் மாயாஜால வித்தைகளின் பின்னணி நுணுக்கங்களை மறைக்க எடிட்டிங்கை எப்படிப் பயன்படுத்தினார் என்று பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், எடிட்டிங் என்பதே ஒரு மாயாஜால கலைதான் என்பதைப் பார்க்கப்போகிறோம்.

இன்றைக்குத் திரைத் துறையினர் பயன்படுத்தும் எடிட்டிங் நுணுக்கங்கள் ரஷ்ய சினிமா அறிஞர்கள் அளித்த கொடை. ‘மான்டாஜ்’ என்ற முறையின் மூலம் துண்டு துண்டான காட்சிகளை வரிசையாக ஒரு ஒழுங்கில் அடுக்கும்போது அதன் மூலம் பார்வையாளர்களை உணர்வு ரீதியாகக் காட்சியுடன் ஒன்றவைக்க முடியும் என்ற ரஷ்ய சினிமா முறையை உலக அளவில் பிரபலப்படுத்தியவர் செர்கை ஐஸன்ஸ்டைன்.

செம்படை வீரர்

சோவியத் ஒன்றியத்தின் லாட்வியாவில் 1898 ஜனவரி 22-ல் யூதக் குடும்பத்தில் பிறந்தார் செர்கை ஐஸன்ஸ்டைன். தந்தையின் வழியில் கட்டுமானப் பொறியியல் படிப்பில் சேர்ந்த அவர், 1918-ல் படிப்பைக் கைவிட்டு ரஷ்யப் புரட்சிப் படையான செம்படையில் சேர்ந்தார். அவரின் தந்தை ஜார் மன்னராட்சியை ஆதரித்தாலும் ஐஸன்ஸ்டைன் புரட்சியின் பால் ஈர்க்கப்பட்டு ஜார் மன்னர் படைக்கு எதிரான போரில் கலந்துகொண்டார். மன்னராட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு செம்படையின் உயரிய பதவியிலிருந்த இவர், ஜப்பானிய மேடை நாடகங்கள் மேல் ஈர்ப்பு கொண்டார். 1920-ல் மாஸ்கோவுக்குத் திரும்பிய பின், மேடை நாடகங்களில் பணிபுரிய ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் ரஷ்யத் திரைப்படத் துறை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தது.

உலகின் முதல் திரைப்படக் கல்லூரி

ஜார் மன்னராட்சியை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போல்ஷ்விக் கட்சி, இறக்குமதிகளுக்குக் கடுமையான தடைவிதித்து சட்டதிட்டங்களை மாற்றி அமைத்தது. இதனால் ஃபிலிம் ரோல்களுக்குப் பற்றாக்
குறை ஏற்பட்டது. உள்ளூரிலும் ஃபிலிம் தயாரிப்புக்கு முகாந்திரமில்லை. சர்வாதிகாரமான மன்னராட்சியிலிருந்து விடுபட்டு, புரட்சிகரக் கருத்துகள் மலர்ந்தாலும் திரைப்படப் படைப்பாளிகளால் தங்கள் கலைவடிவில் அந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாத சூழல் நிலவியது.

சரி, திரைப்படங்களை உருவாக்கத்தான் முடியவில்லை. இதுவரை உருவான திரைப்படங்களையாவது ஆராய்வோம் என்று ரஷ்ய திரைத் துறையினர் இறங்கினர். திரைப்படங்களைக் கொள்கைப் பரப்புக்கு முக்கியக் கருவியாகக் கருதிய அரசாங்கமும் இதற்கு உதவியது. சினிமாவைப் பற்றி படிக்க 1919-ல், ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சினிமாடோகிராபி’ தொடங்கப்பட்டது. ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த திரைப்படங்களின் படச்சுருள்களை வெட்டி, மாற்றி அடுக்கி, நீக்கி, இணைத்து என்று பல சோதனை முயற்சிகளைச் செய்துபார்த்தனர்.

இந்த முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர் லெவ் கூலிஷாவ். அடுத்தடுத்து இரண்டு காட்சிகளைக் காட்டுவதன் மூலம், இரண்டு காட்சிகளின் இடையே ஓர் உணர்வுப் பின்னல் இருப்பதாகப் பார்வையாளர்களை உணரச்செய்ய முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார். இந்த முறை எடிட்டிங் இன்று ‘கூலிஷாவ் எஃபெக்ட்’ என்றே அழைக்கப்படுகிறது. உணர்வுகள் ஏதுமின்றி கேமராவை வெறித்துப்பார்க்கும் ஒரு மனிதனின் முகத்தை முதல் காட்சியிலும், மேசையில் வைக்கப்பட்டிருக்கும் உணவை இரண்டாவது காட்சியிலும் காட்டும்போது அம்மனிதன் பசியில் இருக்கிறான் என்பதைப் பார்வையாளர்களால் உணர முடியும். உணவுக்குப் பதில் துக்க வீட்டில் கதறி அழும் பெண் காட்டப்பட்டால், அம்மனிதன் துயரத்தில் இருக்கிறான் என்றும் வெவ்வேறு விதமாகப் பார்வையாளர்களுக்கு உணர்த்த முடியும் என்பதைச் செயல்முறை விளக்கம் மூலம் விளக்கினார் கூலிஷாவ். அவரது மாணவராக இருந்த ஐஸன்ஸ்டைன், வசனங்கள் இல்லாமல் அடுத்தடுத்து காட்சிகளை வரிசையாக அடுக்குவதன் மூலம் கதை சொல்லும் மான்டாஜ் உத்தியை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய ‘தி ஃபிலிம் சென்ஸ்’, ‘ஃபிலிம் ஃபார்ம்’ போன்ற புத்தகங்கள் இன்றும் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கின்றன. 1922-க்குப் பிறகு ஜெர்மனியுடன் ஏற்பட்ட தொழில்முறை ஒப்பந்தத்தின் விளைவாக மீண்டும் ஃபிலிம் சுருள்கள் ரஷ்யாவில் கிடைக்க ஆரம்பித்தன. மூன்று வருடங்களாக சினிமாவை ஆராய்ந்து அதில் பல உத்திகளைக் கண்டறிந்த ரஷ்யத் திரைப்பட வல்லுநர்கள் அவற்றைச் செயல்முறைப்படுத்திப் பார்க்க ஆரம்பித்தனர். அந்த முயற்சியில் பெரும் வெற்றியைக் கண்டார் ஐஸன்ஸ்டைன்.

பேட்டில்ஷிப் பொடம்கின்

தான் முன்பு பணியாற்றிய ‘எனஃப் ஸ்டுபிடிட்டி இன் எவ்ரி வைஸ் மேன்’ எனும் நாடகத்தின் கதையை மையமாகக் கொண்டு, 1923-ல் ‘க்லுமொவ்ஸ் டைரி’ என்ற படத்தை இயக்கினார் ஐஸன்ஸ்டைன். அதன் வெற்றியைத் தொடர்ந்து, 1925 ஏப்ரலில் அவரது இயக்கத்தில் ‘ஸ்ட்ரைக்’ என்ற திரைப்படமும், டிசம்பர் மாதம் ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ என்ற திரைப்படமும் வெளியாகின. மான்டாஜ் உத்திகளை வெகு சிறப்பாகப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ உலக சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டது. போர்க்கப்பலான பொடம்கின் போருக்குத் தயாராகும் காட்சிகளும், ஒடேஸா நகரப் படிக்கட்டுகளில் ஜார் மன்னனின் படைகள் போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்லும் காட்சிகளும் மான்டாஜ் உத்திக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுகள்.
‘ஒடேஸா படவரிசை’ என்பது திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு முக்கியப் பாடமாக இருக்கிறது. ‘பேட்டல்ஷிப் பொடம்கின்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜார் மன்னனை வீழ்த்திய அக்டோபர் புரட்சி நடந்து பத்தாண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூரும் விதமாக ‘அக்டோபர்: டென் டேஸ் தட் ஷுக் தி வோர்ல்டு’ என்ற படத்தையும், அதைத் தொடர்ந்து ‘ஜெனரல் லைன்’ என்ற திரைப்படத்தையும் எடுத்தார் ஐஸன்ஸ்டைன். ரஷ்ய நிலப்பரப்பைத் தாண்டியும் அவரது கலைத்தேடல் நீண்டதால், 1928-ல் ஐரோப்பிய நாடுகளுக்குத் தன் உதவியாளர்களுடன் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார்.

தோற்றுப்போன ஐஸன்ஸ்டைன்

இந்தப் பயணத்தில் பெர்லின், பாரிஸ், லண்டன் போன்ற பல நகரங்களுக்குச் சென்ற ஐஸன்ஸ்டைன் அங்கிருக்கும் கலை வல்லுநர்கள், சினிமா ஆளுமைகளைச் சந்தித்தார். பல கூட்டங்களில் மான்டாஜ் பற்றி உரையாற்றினார். 1930-ல் ‘பாராமவுன்ட்’ நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்குச் சென்ற அவர், அந்நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்குவதாக ஒப்புக்கொண்டார். தியோடர் ட்ரெய்ஸர் என்ற அமெரிக்க நாவலாசிரியரின் கதைகள், ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் கதைகள் என்று பல படைப்புகளைத் திரைக்கதை வடிவமாக்கி எழுதிப் பார்த்தார். ஆனால், அவற்றில் திருப்தியடையாத பாராமவுன்ட் நிறுவனம், ஐஸன்ஸ்டைன் உடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது. அமெரிக்கர்களுக்குப் பொதுவாகக் கம்யூனிஸவாதிகள் மேல் வெறுப்பு உண்டு. ரஷ்ய கம்யூனிஸவாதியான ஐஸன்ஸ்டைன் திரைத் துறையில் புகழின் உச்சியில் இருப்பதைக் காணச் சகியாமல்தான், பாராமவுன்ட் நிறுவனம் அவரை அமெரிக்காவுக்கு அழைத்து அசிங்கப்படுத்தியது என்ற குற்றச்சாட்டும் இந்நிகழ்வுக்குப் பின்னால் எழுந்தது.

இதைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ஐஸன்ஸ்டைன், அமெரிக்காவில் தான் இருந்த நாட்களை வால்ட் டிஸ்னியுடனும், சார்லி சாப்ளினுடனும் சந்தித்து நேரம் செலவிடுவதில் கழித்தார். பின்பு மெக்சிகோ சென்று, அங்கு மெக்சிகன் மொழியில் ஒரு படம் இயக்க ஆரம்பித்தார். ரஷ்யாவைவிட்டு வந்து பல ஆண்டுகள் ஆனதால் நாட்டிற்குத் திரும்புமாறு அதிபர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தம், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு என்று எல்லாம் கூடியதால் அந்தப் படத்தைப் பாதியில் கைவிட்டு ரஷ்யாவுக்குத் திரும்பிச் சென்றார்.

‘இவான் தி டெரிபிள்’

நாடு திரும்பியதும் மீண்டும் பல படங்களை இயக்குவதிலும், திரைப்படக் கல்லூரியில் பேராசிரியராக மாணவர்களை சினிமா மேதைகளாக மாற்றுவதிலும் தன் அந்திமக்காலத்தைக் கழித்தார் ஐஸன்ஸ்டைன். இவர் இயக்கிய ‘அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி’ என்ற திரைப்படம் 1941-ல் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த போர் சூழலை மையமாகக் கொண்டது. புரட்சிகரமான கருத்துகளைப் பேசி அனைத்து ரஷ்யர்களின் பேராதரவைப் பெற்று அப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் மன்னனாக இருந்த நான்காம் இவான் என்ற அரசனை மையமாகக் கொண்டு இவர் இயக்கிய ‘இவான் தி டெரிபிள்’ படத்தின் முதல் பாகம் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றது. எனினும், அப்படத்தின் இரண்டாம் பாகம் ரஷ்ய அரசாங்கத்தின் பல அதிகார மட்டங்களில் எதிர்ப்பைச் சந்தித்து தடை செய்யப்பட்டது. இதனால் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஃபிலிம் சுருள்கள் அழிக்கப்பட்டன.

செம்படை வீரனாக வாழ்க்கையை ஆரம்பித்த ஐஸன்ஸ்டைன், 1948 பிப்ரவரி 11-ல் மாரடைப்பால் மரணமடைந்தார். சினிமாவில் ஒரு சொலவடை உண்டு. ‘மான்டாஜ் என்றால் எடிட்டிங் என்று அர்த்தம்; அதற்காக எல்லா எடிட்டிங்கும் மான்டாஜ் அல்ல’. இதன் பின் இருக்கும் ஆழமான அர்த்தத்தை வடிவமைத்தவர் செர்கை ஐஸன்ஸ்டைன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE