தகிக்கவைக்கும் தாலிபான் 2.0- தலையெடுக்கும் அழிவு சக்திகள்

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

இருபதாண்டுகள் இடைவெளியில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான் அரசு பொறுப்பேற்கிறது. ஜனநாயகத்தைக் கழுவிலேற்றி, துப்பாக்கி முனையில் நாட்டை வழி நடத்தவிருக்கும் தாலிபானைக் கவலையுடன் சர்வதேச நாடுகள் கவனித்துவருகின்றன. அமெரிக்கா வெளியேறும் தைரியத்தில், ஆப்கனுக்குள் நுழைந்திருக்கும் ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள், தங்கள் நாச வேலைகளைத் தொடங்கிவிட்டன. காபூல் விமான நிலையம் அருகில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு, உலகையே உலுக்கியிருப்பதுடன் தாலிபான்களையும் அதிரவைத்திருக்கிறது.

பாகிஸ்தான் - சீனா போன்ற தொல்லை நாடுகள் வலிய தாலிபானுடன் நட்பு பாராட்டுவது, எல்லை நெடுகப் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் புதிய உற்சாகம் பெற்றிருப்பது என இந்தியாவுக்குக் காத்திருக்கும் கவலைகளும் ஏராளம். என்ன செய்யப் போகின்றன இந்தியாவும் பிற நாடுகளும்?

ஆப்கனுக்கு வந்த அமெரிக்கா

பனிப்போர் காலத்து ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு போராளியாக அறியப்பட்ட முல்லா ஒமர், 90-களின் தொடக்கத்தில் தாலிபானைக் கட்டமைத்தார். ரஷ்யாவுக்கு எதிரான ஆப்கன் போரில் போராளிகளுக்கு ஆயுதம் தந்து அமெரிக்காவே ஊட்டி வளர்த்தது. ஆப்கனின் கம்யூனிஸ ஆதரவு அதிபர் நஜிபுல்லா ஆட்சியைத் தாலிபான்கள் தகர்க்கவும் அமெரிக்காவே முன்னின்று உதவியது. தாலிபான் ஆட்சிக்கும் அங்கே வழி பிறந்தது. ஒசாமா பின் லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு ஆப்கன் மலைக்குகைகளில் தஞ்சமடைந்தது. ஒசாமாவைத் தேடி ஆப்கனில் முகாமிட்ட அமெரிக்கப் படைகள், அவருக்கு அடைக்கலம் தந்த தாலிபானுக்கு எதிராகவே தோட்டாக்களை விரயமாக்கின.

பத்தாண்டுகள் கழித்து பாகிஸ்தான் எல்லைக்குள் ஒளிந்திருந்த ஒசாமாவைப் போட்டுத்தள்ளிய கையோடு, அமெரிக்கப் படைகள் ஆப்கனைவிட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், ஆப்கனிலிருந்து மற்றுமொரு அச்சுறுத்தல் கிளம்பக்கூடாது என்ற கவலையின் பெயரால் அமெரிக்கப் படைகள் ஆப்கனில் தங்கள் முகாமை நீட்டித்தன.

தேறுமா தாலிபான் 2.0?

இந்திய மதிப்பில் சுமார் 9.75 லட்சம் கோடி ரூபாய், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் என ஆப்கன் களப்பலிக்கு அமெரிக்கர்கள் தந்த விலை அதிகம். அமெரிக்கர்களின் எதிர்ப்பு அதிகரித்ததில், ஆப்கன் தேசியப் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதோடு தன்னைச் சுருக்கிக்கொண்டது அமெரிக்க ராணுவம். முல்லா ஒமரும் நோய்வாய்ப்பட்டு இறக்க, வந்த வேலை முடிந்தது என ஆப்கனில் அமெரிக்கப் படைகள் எண்ணிக்கையைக் குறைக்க ஆரம்பித்தன. ஆப்கனிலிருந்து வாபஸ் என்பதைத் தேர்தல் வாக்குறுதியாக்கி அதிபரான ஜோ பைடன், வீரர்களின் நாடு திரும்பலுக்கும் நாள் குறித்தார். அதனால், 1996 போலன்றி மிகச் சுலபமாக இம்முறை காபூலைக் கைப்பற்றி புதிய அரசைத் தாலிபான்கள் தொடங்கி உள்ளனர்.

ஷரியா சட்டம், கலிஃபாக்கள் ஆட்சி என்பதான போர்வையில் முந்தைய ஆட்சியில் தாலிபான் கட்டவிழ்த்த தாறுமாறுகளும், அல்கொய்தா உள்ளிட்ட அதிபயங்கரவாத அமைப்புகளுடனான அதன் உறவும் உலகறிந்தவை. அவற்றால் தாலிபான்களுக்கும் நிறைய இழப்பு ஏற்பட்டது. அவற்றை முழுமையாக உள்ளுணர்ந்து தாலிபான்கள் பாடம் கற்றிருப்பார்களா என்றால், அதுவும் சந்தேகமே. இந்தத் தாலிபான் 2.0 அத்தியாயத்தில் இந்தியாவுக்கான சவால்களும் நிறையவே காத்திருக்கின்றன.

அச்சம் தரும் நகர்வுகள்

பாகிஸ்தான் மட்டுமன்றி, சீனாவும் தாலிபானுக்கு ஆதரவு நல்கி ஆச்சரியம் தந்திருக்கிறது. தனது எல்லையின் தலைவலி தேசங்களான இந்த இரண்டும் தாலிபானுடன் குலாவுவதை இந்தியா கவலையுடன் கவனிக்கிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா என எல்லை தாண்டி காஷ்மீரில் வாலாட்டுபவர்களும் தாலிபானின் மீள் வருகையில் உற்சாகம் அடைந்துள்ளனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார் உட்பட இந்தியச் சிறையிலிருந்த 3 பயங்கரவாதிகளைப் பணயமாக ஒப்படைக்கக் கோரி 1999-ல் நடந்தேறிய இந்திய விமானக் கடத்தல் சம்பவம், தாலிபான்களின் பிறப்பிடமான கந்தஹாரில் வைத்தே அரங்கேறியது. இன்னொரு இந்திய எதிர்ப்பு பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆப்கனில் பொறுப்பேற்ற தாலிபானிடம், இந்தியாவுக்கு எதிரான தங்களது தாக்குதல் மற்றும் காஷ்மீர் பயங்கரவாத சேவைகளுக்கு உதவுமாறு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தது வரலாறு.

இன்றைக்கு ட்ரோன் தாக்குதலில் ஆழம் பார்த்திருக்கும் இந்த எல்லை தொல்லையாளர்களுக்குத் தாலிபானின் பயிற்சி முகாம்கள், ஆயுத தளவாடங்களால் பலம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

இந்தியா என்ன செய்யும்?

மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவால் தீவிரவாத தாலிபானின் புதிய அரசுக்கு ஆதரவளிக்க இயலாது. ஆனால், யுத்தங்களால் நொடித்திருந்த ஆப்கானிஸ்தானில் மீள்கட்டமைப்பு செய்ய நாடாளுமன்றம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், சாலை வசதி, அணை என கடந்த ஆண்டுகளில் தான் மேற்கொண்ட பணிகளை முன்னிறுத்தி இந்தியாவால் தாலிபான்களுக்கு அழுத்தம் தர முடியும். அதன் முதல் அறிகுறியாக, பாதியில் நிற்கும் கட்டுமானப் பணிகளை இந்தியா தாராளமாகத் தொடரலாம் எனத் தாலிபான் அறிவித்திருப்பதைச் சொல்லலாம்.

இது தவிர்த்து தாலிபானுடன் வலிய நேசம் பாராட்டும் பாகிஸ்தான் - சீன நாடுகளுக்குப் பல்வேறு கணக்குகள் இருக்கின்றன. ஆப்கனில் பொதிந்திருக்கும் கனிம வளங்கள் மீது தனி கண் வைத்திருப்பதுடன், ஆப்கன் நலப் பணிகளிலிருந்து இந்தியாவை வெளியேற்றும் வாய்ப்புக்காகவும் சீனா காத்திருக்கிறது. சீனாவின் ஜின்ஜியான் மாகாணத்தில் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் ஆதரவுக்குரிய கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கத்துக்கு ஆப்கனில் ஆதரவோ, பயிற்சியோ கிடைத்துவிடக் கூடாது என்பதிலும் சீனா குறியாக இருக்கிறது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆருயிர் நண்பனாகப் புலப்பட்டாலும் ஆப்கானிஸ்தானால் அந்நாடு பட்ட அடிகளும் அவமானங்களும் அதிகம். பாகிஸ்தானின் தாலிபான் என்றழைக்கப்படும் ‘தெஹ்ரிக் இ தாலிபான்’ தீவிரவாதிகள், ஆப்கன் எல்லையில் பதுங்கியிருந்து அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் குண்டுவெடிப்புகளை நடத்துகிறார்கள். அவர்களின் கொட்டத்தை அடக்க தாலிபான் தயவு பாகிஸ்தானுக்கு அவசியமாகிறது. ஒசாமா போன்ற சர்வதேச பயங்கரவாதிகள் தாலிபான்களின் உதவியால்தான் பாகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைகிறார்கள். அவர்களைப் பின்தொடரும் வல்லரசுகள் கேள்வியின்றி நாட்டுக்குள் புகுவதும், தீவிரவாதிகளை அழிக்கும் கையோடு தேச இறையாண்மையையும் சேர்த்து அழிப்பதும் பாகிஸ்தானுக்கு அவமானம் சேர்ப்பவை.

தரைவழி வர்த்தகத்துக்காக ஆப்கன் மார்க்கத்தை அதிகம் நம்பியிருக்கும் பாகிஸ்தான் அதற்காகவும் தாலிபானை அனுசரித்து வருகிறது. இதுபோல ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் தாலிபானுக்கான தனி தந்திரக் கணக்குகளுடன் காத்திருக்கின்றன. இந்த நாடுகள் மட்டுமன்றி அகண்ட இஸ்லாமிய தேசத்தைக் கட்டமைக்கக் காத்திருக்கும் அடிப்படைவாதிகளும், ஆப்கனைப் புகலிடமாக மாற்ற விரும்புகிறார்கள். ஐஎஸ் பயங்கரவாதிகளின் கொடூரங்களை எதிர்கொள்வது தாலிபான்களுக்கே சவாலாக மாறியிருக்கிறது.

இதுநாள் வரை தாலிபான் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறுபகுதிகளில் விளைவிக்கப்பட்ட ஓபியம், உலகின் 85 சதவீத தேவையைப் பூர்த்தி செய்துவந்தது. பொருளாதார மேம்பாட்டுக்காக என இனி ஓபியம் பயிரிடுவது அங்கு அதிகரித்தால் சர்வதேச போதை சாம்ராஜ்ஜியத்தின் மையமாகவும், மாஃபியாக்களின் கூடாரமாகவும் ஆப்கன் மாறும் அபாயம் இருக்கிறது.

அலைக்கழித்த ஆப்கன் நிலம்

ஆப்கனில் அமெரிக்கப் படைகள் இருபதாண்டு முகாமிட்டும், தாலிபான்களை அழிக்க முடியாதது ஆச்சரியத்துக்கு உரியது. இது அமெரிக்காவின் பெரியண்ணன் பிம்பத்தையும் போட்டு உடைத்திருக்கிறது. தாலிபான் நிறுவனத் தலைவர் முல்லா ஒமர் போக்கு
காட்டிய தோராபோரா குகைகளையும், குனார் காடு களையும் அமெரிக்கப் படைகளால் 12 ஆண்டுகளுக்கு அணுகவே முடியவில்லை. இன்றுவரை, வடக்குக் கூட்டணி படைகள் மிச்சமிருக்கும் பஞ்ச்ஷீர் மாகாணம் தாலிபான்களிடம் வீழாதிருக்கவும் ஆப்கனின் விசித்திர நிலப்பரப்புகளே காரணம்.

மாறும் சமன்பாடுகள்

இருபதாண்டுகள் கழித்து ‘போதும், ஆளைவிடு...’ என்று புறப்பட ஆயத்தமானபோது, தாலிபான்களுடன் பழைய சிநேகத்தை அமெரிக்காவால் புதுப்பிக்கவும் முடிந்திருக்கிறது. அமெரிக்கர்கள் தங்கள் தளவாடங்களில் ஒருபகுதியை அப்படியே விட்டுச்சென்றதிலும், தாலிபான்கள் கடைசிவரை விமான நிலையத்தை அமெரிக்காவுக்கு விட்டுகொடுத்ததிலும் புதிய புரிதல்கள் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. அமெரிக்க மண்ணுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு தாலிபான் உடன்போகாது இருப்பின், அதன் வளர்ச்சிக்காக நிதியுதவிகளை அள்ளித்தரவும் அமெரிக்கா முன்வரலாம் எனக் கருதப்பட்டது. இப்போது காபூல் குண்டுவெடிப்பில் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதால், அமெரிக்காவின் பழிவாங்கும் வெறி ஆப்கன் நிலத்தில் மீண்டும் படரும் சூழல் உருவாகியிருக்கிறது.

அதேபோல முப்பதாண்டுக்கு முந்தைய போரின் எதிரியான ரஷ்யாவும் புதிய தாலிபான் ஆட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது. சன்னி பெரும்பான்மை யினர் அடங்கிய தாலிபானுக்கு ஷியா ஆளுகையின் ஈரான் நட்பு பாராட்டுகிறது. இந்த வரிசையில் பெயருக்கேனும் தேர்தல் நடத்தி ஜனநாயக அரசை அமைத்தால், புதிய ஆப்கனுக்கு இந்தியாவும் கரம் நீட்ட நேரிடலாம். இந்த அதிசயங்கள் நிகழ்வது அனைத்தும் தாலிபான் கையில் இருக்கிறது.

மகாபாரதக் காலம் தொட்டு ஆப்கனில் அறியப்படும் சூழ்ச்சிகள், தொடர் போர்களுக்கு இனியாவது முடிவு கிடைக்குமா? புத்தரும், இஸ்லாமும் போதித்த அமைதி திரும்புமா? ஆப்கன் நிலத்தைப் போலவே இந்தக் கேள்விகளும் புதிராகவே நீடிக்கின்றன!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE