புத்தகங்களில் படித்த இடங்களையும், வரலாற்று நிகழ்வுகளின் சுவடுகளாக இருக்கும் தலங்களையும் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் பலருக்கும் எழும். அப்படித்தான், வியட்நாம் செல்ல எனக்குள்ளும் ஆசை எழுந்தது. இரண்டாம் உலகப் போரில் வியட்நாம் சந்தித்த அழிவும், அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த ஒரே நாடு என்கிறபெருமையும், வியட்நாமியர்களின் போர்த்திறனும் அந்நாட்டைப் பார்க்கத் தூண்டியது.
ஆதிக்கத்தின் பிடியில் வியட்நாம்
வியட்நாமின் வடக்கே இருக்கிறது ஹனோய் (Hanoi) நகரம். லீ தாய் டோ (Ly Thai To) அரச வம்ச காலம்தொட்டே (1009-1225) முக்கிய நகரமாக இது விளங்குகிறது. 1887-ல் ஹனோய் பிராந்தியத்தைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்த பிரான்ஸ், இப்பகுதியைத் தனது நிர்வாக நகரமாக உருவாக்கியது. தெற்கு வியட்நாமில் இருந்த கனிம வளங்களைக் கவர்ந்தெடுக்க தன் ஆதிக்கத்தைத் தென் பகுதியிலும் விரிவாக்கியது. இரண்டாம் உலகப் போரின்போது, பிரான்ஸை வெற்றிகொண்டு, வியட்நாமை ஜப்பான் ஆக்கிரமித்தாலும் (1940) ஹனோய் நகரைத் தன் நிர்வாக நகரமாகவே பிரான்ஸ் வைத்திருந்தது.
ஜப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததால், மீண்டும் வியட்நாமைத் தன் காலனிக்குள் கொண்டுவரும் வேலையில் பிரான்ஸ் இறங்கியது. இதனை எதிர்த்து இடதுசாரிப் படைகள் போரிட்டன. ஒருகட்டத்தில், எதிரியோடு சண்டையிடுவதற்குப் பதிலாகத் தெற்கு வியட்நாம், வடக்கு வியட்நாம் என இடதுசாரி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தங்களுக்குள் சண்டையிட்டதால் உள்நாட்டுக் கலவரம் மூண்டது. கடைசியில் 1954-ல் ஜெனிவா மாநாட்டின் மூலம் வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாம் என வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு வியட்நாமின் தலைநகர் ஹனோய். தெற்கு வியட்நாமின் தலைநகர் சைகான் (Saigon). தனித்தனி நாடான பிறகும் போர் முடிந்து அமைதி திரும்பவில்லை.
தெற்கு வியட்நாமிற்கு ஆதரவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளும், கம்யூனிசத்துக்கு எதிரான சில நாடுகளும் கைகோத்துக் களமிறங்கின. இவர்களுடன், கம்யூனிஸத்தை வெறுத்த தெற்கு வியட்நாமியர்களும் சேர்ந்துகொண்டு வடக்கு வியட்நாம் மீது சண்டையிட்டார்கள். தெற்கு வியட்நாமின் பிரதமர் ங்கோ டின் டிஎம் (Ngo Dinh Diem) மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாகவே மாறினார்.
இந்நிலையில், “ஒருங்கிணைந்த வியட்நாம் ஒன்றே தீர்வு” என மக்களின் மனதைத் தயார் செய்தார் புரட்சியாளர் ஹோ சி மின். சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் பிற கம்யூனிஸ நாடுகளும், மேற்கத்திய ஆதிக்கத்தை எதிர்த்த தெற்கு வியட்நாமில் வாழ்ந்த வியட்நாமியர்களும், வடக்கு வியட்நாமியர்களும் பிரதமர் ஹோ சி மின்னை ஆதரித்தனர். போர் உக்கிரமாக நடந்தது.
நிலங்களில் நஞ்சூற்றிய அமெரிக்கா
எதைச் செய்தாகிலும் வெற்றிபெற்று வியட்நாமைத் தன் காலனியாதிக்கத்தில் கொண்டுவர நினைத்த அமெரிக்கா, தனது கொடூரத் திட்டங்களை அரங்கேற்றியது. வியட்நாம் முழுவதும் நான்கு லட்சம் டன் ‘நேபாம்’ கொத்துக் குண்டுகளை வீசியது. வடக்கு வியட்நாம் வீரர்கள் மலைகளிலும் மரங்களின் கிளைகளிலும் மறைந்திருந்து அமெரிக்கர்களைத் தாக்கினார்கள். வியட்நாமின் அடர்ந்த காடுகளில் கிளைகளைக் களைந்து உள் நுழைவது, புதை மணலில் கால் வைப்பதற்கு நிகரானது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மரங்களின் இலைகளை உதிர்க்கத் திட்டம் தீட்டியது.
பரந்து விரிந்து பல்லுயிர்களின் வாழ்விடமாக இருந்த காடுகள், பசுமை தெரிந்த மக்களின் வாழ்விடங்கள், வயல்வெளிகள் என எல்லா இடங்களிலும் விமானம் வழியாக 80 மில்லியன் லிட்டர் வேதிமருந்துகளை அமெரிக்க விமானங்கள் தெளித்தன. வியட்நாமின் மொத்த நிலப்பரப்பில் 86 சதவீத இடங்களில் இரண்டு முறைக்கு மேலும், 11 சதவீத இடங்களில் பத்து முறைக்கு மேலும் வேதிமருந்து தெளிக்கப்பட்டது. நீர், நிலம், காற்று, காடு, ஆகாயம் அனைத்திலும் நஞ்சு கலக்கப்பட்டது. ஆனாலும் அமெரிக்கர்களை விரட்டியடித்தார்கள் வடக்கு வியட்நாமியர்கள்.
ஒருங்கிணைந்த வியட்நாமை உருவாக்கி சைகான் நகருக்கு ‘ஹோ சி மின்’ என பெயரிட்டார்கள். ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதப்பட்ட ஹோ சி மின் நகரைப் பார்க்க இரண்டு நாள் பயணமாக நான் சென்றேன்.
விசா வாங்கும் பொதுவான வழிமுறை
மற்றொரு நாட்டுக்குள் நுழைய அந்நாட்டின் விசா வாங்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் 1. விசா இல்லாமல் அனுமதிப்பது, 2. தங்கள் நாட்டுக்குள் வந்ததும் விசா வழங்குவது (Visa on Arrival), 3. இணைய வழியில் விசா அளிப்பது (e-visa), 4. அமெரிக்க விசா, பிரிட்டன் விசா, ஐரோப்பிய விசா செயல்பாட்டில் இருந்தால் அனுமதிப்பது என ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் வெளிநாட்டினரைத் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கிறார்கள்.
இந்தியக் கடவுச்சீட்டு உள்ளவர்கள் செர்பியா, பூடான், இந்தோனேஷியா, எல் சால்வடோர் உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே சுற்றுலா செல்ல முடியும். அதில், தாய்லாந்து, கம்போடியா, ஜிம்பாப்வே, ஜோர்டான் போன்ற நாடுகள் இந்தியக் கடவுச்சீட்டு உள்ளவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்த பிறகு விசா வழங்குகின்றன. மலேசியா, ஆஸ்திரேலியா, வியட்நாம் போன்ற நாடுகள் இணைய வழியில் விசா தருகின்றன. சில நாடுகள் இணைய வழி, தூதரக வழி என இரண்டு வழிகளிலும் வழங்குகின்றன. எவ்வகை விசாவாக இருந்தாலும், சில ஆவணங்களைக் கண்டிப்பாக நாம் கொண்டுபோக வேண்டும். அவை என்னென்ன என்பதிலும் நாட்டுக்கு நாடு சில வேறுபாடுகள் இருக்கின்றன. விசா நாட்கள் முடிவதற்குள் அந்நாட்டைவிட்டு கண்டிப்பாக வெளியேறிவிட வேண்டும்.
வியட்நாமுக்கு விசா வாங்கும் வழிமுறை
இணைய வழியில் வியட்நாம் விசா பெறலாம். புறப்படுவதற்கு முன்னதாக நம் வருகையை இணையத்தில் பதிவுசெய்தால், மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும். ஆனாலும் அது முழுமையான விசா அல்ல. எனவே, விமானத்துக்குச் செல்லும்போது, கண்டிப்பாக விசா படிவத்தை அச்செடுத்துச் செல்ல வேண்டும். ஹோ சி மின் விமான நிலையத்தில் இறங்கியவுடன் பணியாளர்கள் வழிநடத்துவார்கள். ஆவணங்களையும், முன்பதிவு விசா தாளையும் கொடுத்து கட்டணம் செலுத்தியதும் பத்து நிமிடத்தில் அதிகாரிகள் கடவுச்சீட்டில் விசா தாள் ஒட்டிக் கொடுப்பார்கள். இங்கு, அமெரிக்க டாலர் மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள்.
சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கு நான் சென்றபோது, கடவுச்சீட்டில் விசா தாள் ஒட்டவில்லை. மாறாக, விசா அச்சு பதிந்தார்கள். விசா தாள் ஒட்டும் நாடுகளாகப் பார்த்து செல்வதில் பலன் இருக்கிறது. ஏனென்றால், வளர்ந்த நாடுகளுக்குச் செல்ல விண்ணப்பிக்கும்போது, ‘எந்தெந்த நாடுகளுக்கு இதுவரை பயணித்துள்ளீர்கள்?’ என அதிகாரிகள் கேட்
பார்கள். அவ்வேளைகளில், கடவுச்சீட்டில் ஏற்கெனவே ஒட்டப்பட்டுள்ள விசா தாள்களைப் பார்க்கும்போது, இயல்பாகவே நம்மீது நம்பிக்கை அதிகரிக்கும்.
தப்பியோடிய பிரதமர்
12 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மறுஒருங்கிணைப்பு அரண்மனையானது, பிரான்ஸ் நாட்டின் காலனியாக வியட்நாம் இருந்தபோது கட்டப்பட்டதாகும். முதலில் பிரான்ஸ் நாட்டு ஆளுநர்களும், பிரான்ஸை ஜப்பான் வென்றபிறகு ஜப்பான் அதிகாரிகளும் இங்கே தங்கியிருந்தார்கள். தெற்கு வியட்நாமின் கடைசி பிரதமர் குயன் வான் தேயு (Nguyen Van Thieu), வியட்நாம் போரின்போது இங்கிருந்துதான் தெற்கு வியட்நாம் படைகளை வழிநடத்தினார். தோல்வி உறுதி என்பதை அறிந்த பிரதமர், போர் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இங்கிருந்துதான் தப்பிச் சென்றார். தன் ஆட்சிக் காலத்தில் மற்ற பகுதிகளைப் பார்வையிட அவர் பயன்படுத்திய ஹெலிகாப்டர் இன்றும் அரண்மனையின் மொட்டை மாடியில் நிற்கிறது.
மறுஒருங்கிணைப்பு அரண்மனை
விமான நிலையத்திலிருந்து தங்குமிடத்துக்குச் சென்றுவிட்டு, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த சுற்றுலாக் குழுவில் சேர்ந்துகொண்டேன். முதலில், மறுஒருங்கிணைப்பு அரண்மனைக்கு (Reunification Palace) அழைத்துச் சென்றார் வழிகாட்டி. அரண்மனைக் கட்டிடத்தின் நடுவில் மூங்கில் மரக்கட்டை போன்று, கல் மலரால் ஆன தோரணம் கண்களைக் கவர்கிறது. அரண்மனையின் தரைத்தளமானது, கட்டளை அறை, அதிபரின் ஓய்வறை, ராணுவ வானொலிகள், போரின் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் குறித்த தகவல்களுடன் கூடிய வரைபடங்கள் எனப் போர் நடத்துவதற்கான அனைத்து வசதிகளுடனும் அமைந்துள்ளது. பன்னாட்டு அதிகாரிகளை வரவேற்பதற்கான அறைகள், சிறிய திரையரங்கம், 500 பேர் அமர்ந்து பேசுவதற்கான அறை, அதிபருடைய குடும்பத்தினருக்கான அறைகள், முன்னாள் அதிபர்களின் ஆய்வுத்தாள்கள் மற்றும் புத்தகங்கள் உள்ள நூலகம் போன்றவை மற்ற தளங்களில் இருக்கின்றன. அரண்மனையின் இரும்பு வாயிலையும், சிமென்ட் தூண்களையும் உடைத்துக்கொண்டு நுழைந்து போருக்கு முடிவுரை எழுதியதுடன், தெற்கு மற்றும் வடக்கு வியட்நாமை மறுபடியும் ஒருங்கிணைந்த வியட்நாமாக மாற்றிய ராணுவ டாங்கு அரண்மனை வளாகத்தில் நிற்கிறது. சுதந்திரப் போராட்டம் வெற்றியடைந்த நிலத்தில் மெல்ல நடந்துவிட்டு அடுத்த இடத்துக்குப் புறப்பட்டோம்.
(பாதை நீளும்)