ஆட்சியில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது செல்வாக்கை காட்டுவதற்காக, காங்கிரஸ் மற்றும் திமுகவினரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கி புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றினார். இப்போது அதே பாடத்தை அவருக்கு திருப்பி நடத்துகிறது திமுக. அதிமுகவைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமியையும், புதுக்கோட்டை யூனியன் சேர்மன் சின்னையாவையும் கமுக்கமாய் ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று திமுகவில் சேர்த்துவிட்டார் புதுக்கோட்டை மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன்.
22 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஊராட்சியில் திமுக கூட்டணியின் பலம் 13ஆக இருந்தபோதும், தனது ராஜதந்திரத்தால் அதிமுகவின் ஜெயலட்சுமியை தலைவராக்கினார் விஜயபாஸ்கர்.
அதேபோல், தான் அதிமுகவுக்கு மெஜாரிட்டி இல்லாதபோதும் சின்னையாவை யூனியன் சேர்மனாக்கினார். இப்படி அரும்பாடுபட்டு பதவியில் அமரவைத்தவர்கள் எல்லாம், அடுத்தவருக்குத் தெரியாமல் கம்பி நீட்டியதில் விஜயபாஸ்கருக்கு ஏக வருத்தமாம்.